வாள் துறவியின் வாரிசாகும் புத்தகப்புழு!

 










ஸ்வார்ட்ஸ்மேன் ஸ்காலர்


மாங்கா காமிக்ஸ்


நூலகமே கதி என கிடக்கும் கல்வியாளன், தற்காப்புகலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் வழியாக வாள்வீச்சு பற்றிய அறிவைப் பெற்று சாதனை செய்யும் கதை. சிறப்பான கதை. அதை மெல்ல கூறியவிதமும் அருமை. நாயகன் பெயர் வூன். தலையில் தொப்பி ஒன்றை வைத்துக்கொண்டு வருகிறான். அவனைப் பார்க்கும் யாருக்குமே அப்பாவியான நூல்களை மட்டுமே படிக்கும் ஆள் என்ற எண்ணமே வரும். ஆனால், தற்காப்புக்கலை பற்றிய கேள்விகள் வந்தால், அதில் பதில்களைக் கூறுவதோடு வீரரின் தவறுகளைக் கூறி அதை செய்துகாட்டி திருத்தவும் செய்கிறான். அங்குதான் பலரும் ஆணவத்தை விட்டு அவனை மாஸ்டர் என பணிந்து போகிறார்கள். மரியாதை கொடுக்கத் தொடங்குகிறார்கள். 


வூனுக்கு நிலையான மாத சம்பளம் என்பதே லட்சியம். வேறு எதையும் அவன் பெரிதாக யோசிப்பதில்லை. குழந்தைபோலவே கள்ளமின்மையோடு இருக்கிறான். ஆனால், அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை பயன்படுத்திக்கொள்ள ஏராளமான திட்டங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அவனை சீண்டும்போது அவன் கொடுக்கும் பதிலடி நினைத்துப் பார்க்க முடியாத வலியைத் தருகிறது. தற்காப்புக்கலை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி அதன் வரலாறுகள், உள்நாட்டு போர்கள், தனிப்பட்ட ஒற்றைக்கு ஒற்றை சண்டைகள் பற்றி அறிந்துகொள்கிறான். இறுதியாக தனக்கென தனி தற்காப்புக்கலை ஒன்றை உருவாக்குகிறான். சண்டையில் தோற்றுப்போன, ஆனால் எதிர்காலத்தில் பெரிய வீரர்களாக வருவார்கள் என நம்பும் சிலருக்கு அசூர் டிராகன் ஸ்வோர்ட் ரூலர் என்ற பெயரில் கடிதங்களை அனுப்புகிறான். அதைப் படித்தவர்களுக்கு தங்களுடைய பாரம்பரிய, பயன்படுத்தி வரும் வாள் கலையில் அனுபவ தரிசனம் கிடைக்கிறது. அதன் பிறகு அவர்களது வாழ்க்கை வேறுவிதமாக மாறுகிறது. அவர்கள் வலிமையாகிறார்கள். கூடவே அவர்களின் இனக்குழுவும் புகழும் பெருமையும் பெறுகிறது. 


பயன் பெற்றவர்கள் வூனை யாரென்று தெரியாமல் மாஸ்டர் என போற்றுகிறார்கள். இத்தனைக்கும் மர வாள் ஒன்றை மட்டுமே வூன் கையில் வைத்திருப்பான். அதுவும் கூட தற்காப்புக்குத்தான். அவன் எந்த இடத்திலும் சண்டைக்கு வருபவர்களை கொல்ல நினைப்பதில்லை. தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறான். பிற மனிதர்களை அகங்காரத்தோடு யாராவது நடத்தினால் அதை அவனால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இதுவே அவனை நோக்கி நல்ல மனிதர்களை வர வைக்கிறது. அதேநேரம் அறிமுகமில்லாத பேராசைக்காரர்களின் கோபத்தையும் தூண்டுகிறது.  முரோங் என்ற குடும்பத்திற்கு அதனால்தான் ஒரு கடிதம் எழுதி, மூத்த இனக்குழு தலைவரின் தற்காப்புக்கலையில் உள்ள பிழையை தீர்த்து செய்யவேண்டிய மாற்றங்களைக் கூறுகிறான். இந்த கதையில் வாள் வீச்சுக்கலை என்பதை தாவோ வழியில் கூறுகிறார்கள். அதை எப்படி எங்கே பயன்படுத்துவது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். உடலை விட மனதை எந்தளவு கடினமாக பயிற்சி செய்யவேண்டும் என விளக்குகிறார்கள். கதையில் லியாங்ஜிங் டீக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதைப் படிக்கும்போது ஒருவர் உணர முடியும். 


வடக்கு கடல் மாளிகையில் இருந்து வரும் இளவரசி, ஐஸ் கோஸ்ட் ஆகியோர் கூட வூனின் அப்பழுக்கற்ற இயல்பு, வாள் பயிற்சியில் உள்ள திறமை, கருணை உள்ளம் பார்த்து இளகிப்போகிறார்கள். இளவரசி வூனை பின்தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்குகிறாள். காதலிக்க ஆரம்பிக்கிறாள். அவளுடைய நாட்டிற்கும், முரிம் கூட்டமைப்பிற்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. எல்லாமே கடந்த கால வெட்டுகுத்துகள்தான். இளவரசிக்கு அந்த ஊரில் வழிகாட்டி போலத்தான் வூன் அறிமுகமாகிறான். அந்த சூழ்நிலையில் அவனுக்கு தற்காப்புக்கலை சொல்லிக்கொடுத்த மாஸ்டரின் வீட்டுக்கு போவதே நோக்கம். நடந்துதான் செல்வான். கையில் பெரிதாக பணம் இருக்காது. இருக்கும் சொற்ப பணத்தையும் மாஸ்டரின் குடும்பத்திற்கு கொடுக்க நினைத்திருப்பான். இளவரசரின் கீழ் நூல்களை எழுதி வரும் அவனது வாழ்க்கை,அரசியல் சதிகளால், துரோகங்களால் மாறும். முதலில் அவனது மாஸ்டர் பொய் புகார் சொல்லி சிறையில் அடைப்பார்கள். பிறகு, வூனின் வேலையும் மரியாதை இல்லாததாக மாறும். எதற்கு இந்த அசிங்கம் என அவன் வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவான். மாஸ்டரின் குடும்பத்தை சென்று பார்க்க நினைப்பான். மாஸ்டர் அவனுக்கென மோதிரம் ஒன்றை கொடுத்து வீட்டுக்கு செல்லுமாறு கூறுவார். அதன் பின்னணி காரணம் பற்றி அவனுக்கேதும் தெரியாது. இறுதிவரை அவன் உணரவும் மாட்டான். அவனை சுற்றியுள்ளவர்கள் உண்மையை உணர்ந்தாலும் அதை கூறமாட்டார்கள். அதற்கென சில சுயநலமான காரணங்களும் இருக்கும். மாஸ்டரின் வீட்டுக்கு செல்லும் பயணம்தான் வூனை மடை மாற்றும். வடக்கு கடல் இளவரசியின் பாதுகாவலர், கொள்ளையர்களிடமிருந்து வூனை காப்பாற்றுவார்.பிறகு இளவரசியின் அறிமுகம் கிடைக்கும். 


அங்கு செல்லும் வழியில்தான் முரிம் கூட்டமைப்பின் நிகழ்ச்சி, மாநாடு, இனக்குழுக்களுக்கு இடையிலான சண்டைகள் நடக்கின்றன. அவன் அங்கு வருவதற்கு முன்னரே முரோங் குடும்பத்தின் வீட்டுக்கு செல்வான். அவனது அடையாளம் படிப்பாளி . எனவே, பெரிதாக யாரும் மதிக்க மாட்டார்கள். சிறிய அறையில் தங்கி இருப்பவன், அந்த முரோங் குடும்ப வாரிசு மதுபோதையில் எல்லைமீறிப் பேச நேரடியாக சண்டையில் இறங்கிவிடுவான். வெறும் மரவாளை வைத்தே ஜின் என்ற குடும்ப வாரிசுக்கு வாள்வீச்சு பற்றிய நுட்பத்தைக் கூறுவான். அதை அடையாளம் காணும் ஜின் மெல்ல வூனை தனது மாஸ்டராக ஏற்றுக்கொள்கிறான். முரோங் தலைவர் ஒற்றைக்கு ஒற்றை போட்டியில் வென்று இழந்த குடும்ப பெருமையை மீட்டெடுத்திருப்பார். அதற்கு வாழ்த்து சொல்லிவிட்டு செல்ல வூன் வந்திருப்பான். மற்றபடி அவன் தான்தான் கடிதம் எழுதியது என்பதை கூறமாட்டான். எனவே பெரிய மரியாதை ஏதும் கிடைக்காது. பத்து நாட்களாக காத்திருந்து பிறகு சலித்துப்போன நேரத்தில்  தலைவரை சந்தித்துவிட்டு கிளம்புவான். அவன் மீது ஜின் மட்டுமே மரியாதையோடு இருப்பான். 


அவன் மூலமாகவே அவனது தாத்தா, தங்கை எல்லோரும் வூனைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். முதலில் ஜின் தனது பயிற்சிமுறை பற்றி  இனக்குழு தலைவரான தாத்தாவுக்கு கூறமாட்டான். ஆனால், பின்னாளில் மாற்றத்தை வூன் ஏற்படுத்தினான் என்பதை ஒத்துக்கொள்வான். மன்னிப்பு கோருவான்.


வூனைப் பொறுத்தவரை அவனுக்கு சண்டை போட்டு எதையும் நிரூபிக்க தேவை இருக்காது. அவன் கல்வியாளன்தான். தற்காப்புக்கலை பற்றிய ஆராய்ச்சி நோக்கமே அவனுக்கு அதிகமாக இருக்கும். அதை நோக்கித்தான் அவன் செல்ல நினைப்பான். ஆனால் நிறைய புறச்சூழ்நிலை அழுத்தங்கள் அவனுக்கு உருவாகும். ஒரு பார்வையில் ஒருவரது தற்காப்புக்கலையின் நிறை குறைகளை அவனால் கூறிவிட முடியும். மனதில் ஒருவரை கொலை செய்யும் எண்ணத்துடன் ஒருவர் அணுகினாலே அவனது உள்ளூணர்வு அதற்கு எதிராக ஆன்ம ஆற்றலால் வாளை உருவாக்கி எதிர்க்கும். இந்தளவு திறனோடு அவனை சுற்றியுள்ள பெரும் புகழ்பெற்று வீரர்களே இருக்க மாட்டார்கள். அவன் உருவாக்கிய புலி வாள் வீச்சு கலையில் முழுமையாக தன்னைக் கரைத்துக்கொள்கிறான். அதைப் பார்த்தவர்கள் அவனை மரியாதையாக நடத்துகிறார்கள். எதிரியாக கருதக்கூடாது என முடிவுக்கு வந்து சேருகிறார்கள். அடுத்தவர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது. அதேசமயம் தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என மரவாளையே பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துகிறான். 


தற்காப்புக்கலை கற்பவனின்  மனம் எப்படி இருக்கவேண்டுமென புத்த துறவி கொடுக்கும் பயிற்சி முக்கியமானது. அதற்குப் பிறகுதான் வூன் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறான். முதல்முறையாக அவனுக்கு கொடுக்கும் ஈவன்ஃபால் என்ற வாளை ஏற்கிறான். பிறகு வடக்கு கடல் மாளிகை நோக்கி செல்கிறான். அங்கு அவனுக்கு புதிய அனுபவங்கள் ஏற்படுகின்றன. கதை முழுமையடையவில்லை. தொடர்கிறது. நேரமிருப்பின் வாசியுங்கள். ஓவியங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. கதை நிதானமாக நகர்கிறது. ஏறத்தாழ நாயகன் வூனின் மனநிலயை பிரதிபலிக்கிறது என்று கூறலாம். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்