குடும்பத்தின் வீழ்ந்த பெருமையை தூக்கி நிறுத்த படாதபாடு படும் தற்காப்புக்கலை மாஸ்டர்!
சுப்ரீம் டிமோன்
மாங்கா காமிக்ஸ்
ரீட்மாங்காபேட்.காம்
100---
முதல் பாகம்.
நாயகனின் அம்மா சாதியில் தாழ்ந்தவர். பலத்திலும் குறைந்த குடும்பம். அவரை இரண்டாவது மனைவியாக யூ குடும்பத்தில் மணம்செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த குடும்பத்தினர் அவரை கொடுமைபடுத்துகிறார்கள். ஒருகட்டத்தில் வாரிசு பிரச்னை காரணமாக, நாயகனை அடித்து உதைத்து குற்றுயிராக்கி டிராகன் வாழும் இடத்தில் தூக்கி வீசுகின்றனர். அங்குள்ள ஆன்மா நாயகனின் உடலில் புகுந்து அவனை வலிமையாக்குகிறது. கூடவே, அவனுக்கு ஆதரவாக ஆறு காதுகள் கொண்ட குரங்கு ஒன்றும் நண்பனாகிறது. அப்போது வேறு என்ன? நாயகனின் ஆக்சன் இன்ட்ரோடெக்சன்தானே தேவை?
அம்மாவை வல்லுறவு செய்ய முயற்சிக்கும் குடு்ம்ப உறவுகளை அடித்து உதைத்து, யூ குடும்பத்தில் இருந்து பிரித்து தாத்தா வீட்டிற்கு கூட்டி வருகிறான். அவனது தாத்தா, அரசு ராணுவத்தில் புகழ்பெற்ற படைப்பிரிவுத் தலைவராக இருக்கிறார். சிறுவயதிலேயே நாயகனுக்கும், மூன் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
நாயகன் பலவீனமாக இருப்பதால் அவனது தாத்தா, தனது தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்காமல் இருக்கிறார். திடீரென டிராகன் ஆன்மா உள்ளே புகுந்து அவன் வலிமையான காரணத்தால் அவனுக்கு சில தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கிறார். அதே வீட்டில் ஒரு அறையில் படுத்த படுக்கையாக நாயகனின் மாமா இருக்கிறார். அவர் ராணுவத்திற்காக போரிட்டவர்தான். ஆனால், சிலரின் சதி தாக்குதலில் மாட்டி தனது சக்தியை இழந்து நோயாளியாகி கிடக்கிறார். அவருக்கு அரிய மூலிகைகள் கிடைத்தால் மட்டுமே நடமாட முடியும் சூழல்.
அதையெல்லாம் நாயகன் எப்படி சமாளிக்கிறான். தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கும் பள்ளியில் சேர்ந்து தன்னை எப்படி நிரூபிக்கிறான் என்பது கதையின் சுவாரசியமான பகுதி.
இந்த கதையில் தற்காப்புக்கலை கூடவே நாட்டில் நிலவும் அரசியல் சதிகளையும் விளக்கி காட்டியிருக்கிறார்கள். அதாவது, நாயகன் திறமையானவன். ஆனால் அவனது மாஸ்டர் பெண் என்பதால், அவரை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள முயலும் இரண்டாவது இளவரசர் மூலம் நெருக்கடிகள் வருகின்றன. அதேசமயம், அவனது அறிவுத்திறனைப் பார்த்து முதல் இளவரசர், அவரது தங்கை இருவரும் நட்போடு இருக்க நினைக்கிறார்கள். நட்பா, தொக்கா பயன்படுத்திக்கொள்வதுதான் நோக்கம். இதற்கு மேல்பூச்சுதான் நட்பு, காதல் இதெல்லாமே?
அரச குடும்பத்தின் இளவரசி மெல்ல நாயகனோடு நெருக்கமான நட்பை ஏற்படுத்திக்கொள்கிறாள். அவளது உள்நோக்கம், தனது அண்ணனுக்கு பக்கத்தில் உறுதுணையாக இருக்க வலிமையான புத்திசாலித்தனமான துணை வேண்டும் என்பது. அதற்காக அவள் நாயகனை தன் பக்கம் கொண்டு வர நினைக்கிறாள்.
நாயகனுக்கு மனைவி இருந்தாலும் அவனை கதையில் நான்கு பெண்கள் விரும்புகிறார்கள். இப்படி வரும் காதலுக்கு அவர்களுக்கே உரிய நோக்கங்கள், காரணங்கள் இருக்கி்ன்றன. அதை மறுக்க முடியாது. நாயகன் அதை கண்டுகொள்வதில்லை. ஏனெனில் வீட்டிலேயே அவனுக்கு மனைவி மூன் இருக்கிறாளே? மூனை, தீய சக்தி கூட்டம் தங்களது தலைவி என்று சொல்லி தூக்கிச்சென்ற பிறகு நாயகன் அவளை மீட்க செல்வதோ, யோசிப்பதோ கூட இல்லை. இந்த கதையில் நாயகன்,அவனது குடும்பம், அதை வீழாமல் காப்பாற்றுவது என இயங்குகிறான். அவனது இரு நண்பர்கள்தான் உலகம். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், பின்விளைவுகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என களமிறங்கி அடித்து உதைக்கிறான். கூட படிக்கும் நண்பர்கள், தோழிகளைக் காப்பாற்ற நிறைய சண்டைகளில் இறங்கி ஏராளமான எதிரிகளை சம்பாதிக்கிறான். அந்த எதிரிகளில பலரை, காட்டில் சென்று ஆன்ம ஆற்றல் விலங்குகளை வேட்டையாடும் காலத்தில் வெட்டி புதைக்கிறான்.
இதில் நாயகனது மாஸ்டர் அவனை விட இரண்டு வயது பெரியவளான பெண். பாலின பாகுபாடு பற்றி பேச ஏதுமில்லை. ஆனால், இந்த மாஸ்டரின் சகோதரி பாத்திரம் தொடக்கம் முதலே இயல்பானதாக இல்லை. கதையில் திடீரென நுழைந்து வன்மத்தை கொட்டிவிட்டு காணாமல் போகிறது. ஆறுகாது குரங்கு நாயகனுக்கு துணையாக உள்ளது. அவனோடு சேர்ந்து அதுவும் மெல்ல வளர்ந்து வலிமையாகிறது. குரங்கு தொடர்பான காட்சிகள் நன்றாக வரையப்பட்டுள்ளன. நகைச்சுவை, சண்டை இரண்டிலும் குரங்கு சாதிக்கிறது.
கதையில் வரும் கப்பல் சண்டை, அதில் பயன்படுத்தும் உத்திகள் சிறப்பாக உள்ளன. பெண்களின் உடல், எப்போதுமே பெண்களைப்பற்றிய கனவில் உள்ள நாயகனின் நண்பன் என சில அம்சங்கள் உறுத்தலாக இருந்தாலும் அவை கதையின் இறுக்கத்தை சற்று நெகிழ்த்துகின்றன. மிகவும் சுவாரசியமான கதை என்று கூற முடியாது. ஆனாலும் நேரமிருக்கிறதே என்றால் வாசிக்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக