கொள்ளையர்களின் நகையை திருடி ஊரிலுள்ள கடனை அடைக்க முயலும் YSR தொண்டன்!
குபேர்லு
சிவாஜி, அலி, கிருஷ்ண பகவான்
அருங்காட்சியம் ஒன்றை மும்பை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த நகையை விவேகானந்தா காலனி என்ற இடத்தில் பதுக்கிவைத்துவிட்டு, கொள்ளைக்கூட்ட தலைவனது தம்பி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோகிறார். அந்த நகைகள் யாருக்கு கிடைத்தது கொள்ளைக்கூட்டத்திற்கா, காவல்துறைக்கா என்பதே கதை.
ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி என்ற அரசியல் தலைவருக்கான முகஸ்துதியாக எடுக்கப்பட்ட படம். படத்தில். தன் குடும்பத்தை கவனிக்காமல் ஊருக்காக உழைப்பவராக சொத்துக்களை மக்களுக்காக இழப்பவராக நாயகன் வருகிறார். அவருடைய மாமா அலி. இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போகிறார்கள். வீடுகட்டித்தரும் மோசடி திட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்காக ஏற்கெனவே நிறைய சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள். மீதியிருப்பது வீடு மட்டுமே. மோசடி செய்ததால் குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்டாவிட்டால் அவர்களது ஒரே சொத்தாக உள்ள வீடும் பறிபோகும் நிலையில் நகரத்திற்கு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். நாயகனும் அலியும் பணம் சேர்த்தார்களா இல்லையா என்பது இன்னொரு கிளைக்கதை.
படத்தின் ஒரே பலம் அலி, கிருஷ்ண பகவானின் காமெடி மட்டுமே. என்னடா படம் இது, கதையை நோக்கி படம் போகவில்லையே எனும்போது கவர்ச்சிப் பாட்டு போடுகிறார்கள். படத்தில் நாயகனுக்கு ஒரு கவர்ச்சிப்பாட்டு, அவரது மாமாவான அலிக்கு ஒரு கவர்ச்சிப்பாட்டு. அந்த நடிகைகள் படத்தில் வேறு எதற்கும் உபயோகப்படுவதில்லை. வருகிறார்கள். உடலைக் காட்டுகிறார்கள். இந்த படத்தில் பூமிக்கு அடியில் உள்ள பொக்கிஷத்தை அடிக்கடி காட்டுகிறார்கள். ஒருமுறை காட்டினாலே புரிந்துபோகிறது. ஆனால் கிருஷ்ண பகவான் அடிபட்டு படுத்திருக்கும்போது அவரது தொப்புள் குழிக்குள் கேமரா போய் நிலத்திற்குள் உள்ள பொக்கிஷத்ததை காட்டுவது என்ன மாதிரியான கிரியேட்டிவிட்டி? இயக்குநரின் ஃபெட்டிஷ் சிந்தனையா, நா சாமி ரங்கா?
படத்தின் நாயகி மருத்துவர். பணக்காரி. அவரது தம்பிக்கு சிறுநீரகம் பழுதாகிறது. டயாலிசிஸ் செய்துதான் பிழைத்திருக்கிறான். இவளது போனில்தான் இறந்துபோன தம்பி அண்ணனுடன் பேசியிருக்கிறான். எனவே, மும்பை வில்லன் நாயகியை மிரட்டுகிறான். நோயாளியான தம்பியை கடத்தி வைத்துக்கொண்டு பொக்கிஷ இடத்தைப் பற்றி விசாரித்துக் கூற மிரட்டுகிறான். அதுவரைக்கும் சரி. ஆனால் அவளுக்கு சோம்பேறியாக சுற்றும் ஒய்எஸ்ஆர் போல மிமிக்ரி செய்துகொண்டு வாழும் நாயகன் வரும் காதல் இருக்கிறதே? எரிச்சலோ எரிச்சல்.
அரசியலில் இறங்கி ஒய்எஸ்ஆர் போல வளரவேண்டும் என்ற நினைக்கும் நாயகனுக்கு பில்டப் காட்சிகளே ஏராளமே தவிர கிராமத்தை முன்னேற்ற என்ன திட்டமிருக்கிறது என்றெல்லாம் கூறப்படவில்லை. படத்தில் இறுதியில் கூட வீடுகட்ட முன்பணம் கொடுத்தவர்களுக்கு, மருத்துவக்காதலி மூலம் கிடைத்த பணத்தைக் கொடுத்து தன் வீட்டைக் காப்பாற்றிக் கொள்கிறார். மீண்டும் காசு கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டிக்கொண்டு வலம் வருவதோடு படம் முடிகிறது. இந்தப்படத்தை ஒய்எஸ்ஆரை கூட்டிவந்து வேறு காட்டியிருக்கிறார்கள். என்னவொரு அசட்டுத் துணிச்சல்? அவரை பின்பற்றுபவர்களுக்கு அறிவே கிடையாது. அப்பாவி. எளிதாக மோசம் போக கூடியவர்கள். உண்மையான நடைமுறை வாழ்க்கை தெரியாதவர்கள் என இயக்குநர் கூற நினைக்கிறாரா? என்னவோ? ரகுபாபு, எம்எஸ் நாராயணா ஆகியோர் கிடைத்த வாய்ப்பில் காமெடிக்கு முயல்கிறார்கள். அவர்களுக்கான இடமே குறைவு. அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம்?
காமெடியால் மட்டுமே பிழைக்கிற படம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக