ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்
kiley reid
எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.
புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது?
2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.
'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருடன் கொள்ளும் உறவு. இதைப்பற்றி விளக்குங்களேன்.
பல்வேறு உறவுகளுக்கு பல்வேறு வித பெயர்களை நாம் சூட்டிக்கொள்கிறோம். அல்லது பிறர் சூட்டுகிறார்கள். ஒருவர் வாழும் வீடு, எங்கிருந்து வருகிறார், அவர் எப்படியான உச்சரிப்பில் பேசுகிறார் என அனைத்து அம்சங்களுமே இதில் முக்கியமாகிறது. உங்கள் முதலாளியுடன் நல்ல உறவு, நட்பு இருந்தாலும் கூட அவரிடமும் பகிரமுடியாத விஷயங்கள் உண்டு. மனிதர்களுக்கு இடையே தீவிரமாக உள்ள வர்க்கவேறுபாடுகளை நான் அடையாளம் காண முயல்கிறேன்.
பணத்தைப் பற்றி எதற்காக எழுதவேண்டும் என நினைத்தீர்கள்?
உங்கள் வாழ்க்கைக்கு பணம் அவசியம். ஒரு வீட்டை வாங்குகிறீர்கள் அல்லது வாடகைக்கு அறையை எடுத்து தங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு பணம் அவசியத்தேவை. உங்களால் வீட்டை வாங்கி குடியேறமுடியவில்லை என்று கொள்வோம். அதற்கான தொகை பற்றி அறிய நினைப்பேன். படத்தில் ஒரு பாத்திரம், என்னுடைய அறைக்கான வாடகை அதிகம் என்று கூறினால் கூட, எந்தளவு அதிகமாக உள்ளது என கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என நினைத்தேன்.
நீங்கள் எழுதிய புத்தகங்களுக்கும், உங்களுக்குமான சொந்த அனுபவங்கள் என்ன?
இருபது வயதில் பணம் பற்றிய கவனத்துடன் சிக்கனமாகவே செலவுகளை செய்து வந்தேன். எனக்கு மகள் பிறந்தபிறகு அவளை வளர்த்தும்போது பொருளியல் பார்வையில்தான் உலகைப் பார்த்தேன். எனது புதிய நாவலில் வரும் மில்லி பாத்திரத்திற்கு பொருந்துகிற குண இயல்பு இது. நான் பணம் பற்றி பிறர் பேசும் மொழியைக் கூட நுட்பமாக கவனிக்கத் தொடங்கியிருந்தேன். அவள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள், மோசமான பள்ளிக்கூடத்தில் படித்தவள் என்று சிலர் கூறினால் கூட அதன் பின்னால் பணம் என்பதே முக்கிய அம்சமாக இருந்ததை அறிந்துகொண்டேன்.
மில்லி வாழும் அறையின் சுவர்களுக்குள் தனி உலகத்தையே உருவாக்கியிருந்தீர்கள். இதை பார்க்கும்போது டிக்டாக்கில் பிரபலமான பாமா ரஷ் டிரெண்ட் நினைவுக்கு வந்தது. இந்த வீடியோக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பணம் அதை சம்பாதிக்கும் வழியிலும் கூட சுவாரசியம் உள்ளது. ஒரு இளம்பெண் அணியும் ஆடை, அவளின் வாழ்க்கைமுறை என ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். நான் எனது நாவலுக்காக நிறைய இளம்பெண்களின் தனிப்பட்ட அறையில் எடுத்த வீடியோக்களைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் இதுமாதிரியான உலகில்தான் நான் வாழ்ந்தேன்.
தீவிரமான மையப்பொருளைக் கொண்டிருந்தாலும் கூட அதை வாசிக்கும்போது வேடிக்கையான தொனியில் உள்ளது. அண்மையில் நீங்கள் படித்த வேடிக்கையான ரசிக்க வைத்த நூல்கள் எவை?
மாரிசா பெசல் எழுதிய ஸ்பெஷல் 'டாபிக்ஸ் இன் கலாமிட்டி பிசிக்ஸ்' நூலை படித்தேன். சயாகா முராடா எழுதிய 'கன்வீனியன்ஸ் ஸ்டோர் வுமன்' என்ற நூல். கடந்த ஆண்டு, 'அனிமல் ஃபார்ம்' என்ற நாவலைப் படித்தேன். இந்த நூலை ஒலிப்புத்தக வடிவில் கேட்டேன். மிகவும் வேடிக்கையான நூல்களில் ஒன்று.
அனபெல் கட்டர்மேன்
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக