கலாசாரத்தை இழந்த குற்றவுணர்ச்சி! - தந்தைக்கோர் இடம் - அன்னி எர்னோ - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி- நாவல்

 









 

தந்தைக்கோர் இடம்

அன்னி எர்னோ

பிரெஞ்சிலிருந்து தமிழில் – எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

காலச்சுவடு பதிப்பகம்

மூல நூல் – லா பிளேஸ்

 

2022ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அன்னி எர்னோவின் நூல். பிரான்சில் வாழும் அன்னி, தனது பெற்றோர்,தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள  சுயசரிதைக் கதைதான் தந்தைக்கோர் இடம்.

நாவல் 74 பக்கங்களைக் கொண்டது. எனவே, வேகமாக வாசிப்பவர்கள் வாசிக்கலாம். ஆனால் முடிந்தவரை நிதானமாக வாசிப்பதே நல்லது. இதன் மூலம் கதையில் வரும் நாயகியின் அப்பா பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

பிரான்சிலுள்ள ஒய் எனும் ஊரில் வாழ்பவர், நாயகியின் அப்பா. இவர் தொழிற்சாலைத் தொழிலாளியாக இருந்தவர். அதிக படிப்பறிவு இல்லாதவர். அதனால், ஏற்பட்ட தாழ்வுணர்ச்சி அவருக்கு இறக்கும் நாள்வரை மனதில் உள்ளது. அதன் விளைவாக அவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார். தனது கல்வி கற்ற மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார், அவரது நண்பர்களை எப்படி வரவேற்கிறார் என்பதைக் கதையில் விவரித்து கூறியிருக்கிறார் எழுத்தாளர் அன்னி எர்னோ.

நாவலின் தொடக்கமே, ஆசிரியர் வேலை கிடைத்த மகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு  இறந்துபோன தன் அப்பாவைப் பார்க்க வருவதுதான். ஞாயிறு இறக்கும் தந்தை, மெல்ல புதன்கிழமை அடக்கம் செய்யப்படுகிறார். இடைப்பட்ட நாட்களில் வீட்டில் இருக்கும்போது மெல்ல உடல் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது என மகள் உணரத் தொடங்குகிறார். ஞாபகங்களின் வாசனை என கருதலாம். தந்தையின் இறப்பிற்கு பிறகு,  மகள் தனது அப்பா பற்றிய கதையை எழுதத் தொடங்குகிறார்.

கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையிலிருந்து முற்றாக ஒருவரைப்  பிரித்துவிட முடியுமா என்றால் நிச்சயம் முடியும் என்கிறது கதை. பெற்றோர் கல்வி கற்காத தொழிற்சாலை பணியாளர்கள். ஆனால் மகள் இருபது வயதுக்கும் மேலாக கல்வி கற்று ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தவர். அவர் படிப்போடு தனது கலாசாரம் சார்ந்த வேர்களையும் துண்டித்துவிட்டு தன்னை வேறொருவராக மாற்றிக்கொள்கிறார். ஆனால் இப்படி செய்வதை அவர் தனது மனதின் ஒரு ஓரத்தில் வெறுக்கிறார். குற்றவுணர்ச்சி கொள்கிறார். ஒருவகையில் தனது மனதில் தோன்றிய குற்றவுணர்வை தீர்த்துக்கொள்ளவே அப்பா பற்றிய நூலை எழுதுகிறார் என  கொள்ளலாம்.

அப்பாவின் அஞ்சலிக்காக மகள் எழுதிய நாவல் என்று கூட நினைத்துக்கொள்ளலாம். முடிந்தவரை மகள் அறிந்த அப்பா எப்படி என விளக்கியிருக்கிறார்.  பெற்றோர் கடை, உணவகம் நடத்திய இடம், அங்குள்ள மனிதர்கள், அப்பாவின் இயல்பு, தனது கணவரது குடும்பத்தாரின் நடத்தை ஆகியவற்றை பற்றி சொல்லும் இடங்கள் அவல நகைச்சுவையாக உள்ளன.

கல்வி, பொருளாதார வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு இடையில் தகர்க்க முடியாத சுவராக மாறுவது எப்படி என்பதை நாவலில் சுருக்கமாக இறுக்கமான மொழி நடையில் அன்னி கூறிவிடுகிறார். பெருநகரத்தில் மகள் குடும்பத்துடன் வாழ்கிறாள். அவளின் கணவருக்கு,  மனைவியின் பெற்றோர் என்றால் அலட்சியம். மகளைப் பார்க்க தாய்க்கு ஆசை. ஆனால் அவர் அதை கடிதமாக எழுதும்போது, ‘’இங்கு ஓய்வெடுக்க வரலாமே’’ என்கிறார். நகரங்களில் வாழ்பவர்கள் தங்களை சற்று நெகிழ்த்திக்கொள்ளத்தான் பெற்றோர் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்வது போன்ற நிலையைக் காட்டுகிற வரிகள் அவை.

அப்பா இறந்துவிட்டார் என்ற வருத்தம் என்பதை விட மகள் தான் பிறந்து வளர்ந்த இடத்தில் என்னென்ன விஷயங்களை தொலைத்தேன் என நினைவுகூர்தலாகவே நாவல் உருவாகியிருக்கிறது. சில விஷயங்களை மனதால் மட்டுமே உணர்ந்து பார்க்க முடியும். அப்படியான தருணங்களை மீட்டெடுக்கிற நாவல் இது. பிரெஞ்சு நாட்டின் நிதியுதவியோடு அம்மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நாவல். எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். 

 கோமாளிமேடை டீம்

படம் - காமன்ஃபோக்ஸ் 

கருத்துகள்