8. மோசடி செய்துவிட்டு நிறுவனத்தின் பெயரை மாற்றிய கேட்டன் பரேக் - மோசடி மன்னன் அதானி

 










இந்தியாவில் இயங்கிய பங்குத் தரகர், கேட்டன் பரேக். முறைகேடுகள் பற்றிய தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிய வந்ததும் அவரும், அவரின் நெருங்கிய தொழில் கூட்டாளிகளும் தங்களது பங்கு வர்த்தக செயல்பாடுகளை லண்டனுக்கு இடம் மாற்றிக்கொண்டனர். பங்குச்சந்தையைச் சேர்ந்த பங்கு தரகர்கள், கேட்டன் பரேக் தற்போதும் கூட தனது தொழிலை கைவிடாமல் செய்து வருவதாக கூறினர்.

‘’கேட்டன் பரேக்கிடம் முன்னர் பங்கு வர்த்தகம் செய்த தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் இப்போதும் அவரிடம் தொடர்பிலுள்ளனர்’’ கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய தொடர்பு கொண்ட பங்கு வர்த்தகர் தகவல் கூறினார்.

இந்திய ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டன் பரேக் செய்த முறைகேடுகளைப் பற்றி விசாரித்து, இறுதியாக தடை, அபராதம் ஆகியவற்றை விதித்தனர். 2001ஆம் ஆண்டு இந்திய அரசு, கேட்டன் பரேக்கிற்கு தண்டனை விதித்தது. பிறகுதான், வேறுவழியில்லலாத கேட்டன் பரேக் தனது செயல்பாடுகளை இங்கிலாந்திலுள்ள லண்டன் நகருக்கு மாற்றிக் கொண்டார். இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்களின்படி தெரிய வந்தது.

ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு பல்வேறு நபர்கள் மூலம் கிடைத்த தகவல் என்னவெனில், அதானி குழுமத்தோடு, பங்கு முறைகேட்டாளர்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள், அதற்காக வேலை செய்கிறார்கள் என்பதுதான்.




லண்டனில் உள்ள எலாரா கேபிடல் நிறுவனத்தில் கேட்டன் பரேக்கின் மகள் வேலை செய்வது லிங்க்டு இன் தளத்தின் மூலம் தெரிய வந்தது. எலாரா கேபிடல் நிறுவனம், அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளதை முன்னமே பார்த்தோம்.

இந்தியாவின் புலனாய்வு அமைப்பு (ஐபி), 2003ஆம் ஆண்டு கேட்டன் பரேக் செய்த பங்கு முறைகேடுகளைக் கண்டறிந்தது. இதனால் அவருக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 14 ஆண்டுகள்  தடை விதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு 2010 வரையிலும் கூட கேட்டன், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறு நிறுவனங்கள் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தி தகவல் தருகிறது.

‘’கேட்டன் பரேக், தொழில் விஷயமாக லண்டனுக்கு பல்வேறு முறை சென்று வந்துள்ளார். இதன்மூலம் அவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார்’’ என சிபிஐ அமைப்பின் வழக்குரைஞர் கூறியதாக ஊடகச்செய்திகள் கூறின. மேலும் வழக்குரைஞர்,  கேட்டன் பரேக் லண்டனுக்குச் செல்ல தடை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் பரிந்துரைத்தார். கேட்டன் பரேக் 2001, 2008, 2014, 2018 ஆகிய காலகட்டங்களில் நான்கு முறை பங்கு முறைகேடுகளுக்காக கைதாகியிருக்கிறார். ஆனால் இவருக்கு எளிதாக பிணை கிடைக்க வெளியே வந்துவிட்டார்.




2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புலனாய்வு பத்திரிகையாளரான சுசேதா தலாய், அதானி குழுமம் மற்றும் கேட்டன் பரேக் போன்ற மோசடியான பங்குத்தரகர்களுக்கும் இடையிலான உறவை ட்விட்டரில் பதிவு செய்தார்.

‘’கேட்டன் பரேக், இந்தியாவில் பங்கு வணிகம் செய்வதை நிறுத்திவிட்டார். ஆனால் அவரது மைத்துனர் இந்தியாவில்தான் வாழ்கிறார். சிங்கப்பூர், லண்டன், மும்பை ஆகிய இடங்களில் கேட்டன் பரேக்கிற்கு பங்கு வணிகம் செய்வதற்கான அமைப்புமுறை, சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

 அவர், தண்டனைக்கு முன்பு தனது பங்கு வணிகத்தை செய்தது போலவே இப்போதும் செய்து வருகிறார். அவரின் செயல்பாட்டை இந்திய ஒழுங்குமுறை அமைப்பான செபி, அரசியல்வாதிகள், பெருநிறுவனங்கள் என பலரும் அறிவார்கள். பெருநிறுவனங்கள் தங்கள் வணிகத்திற்காக கேட்டன் பரேக்கிடம் செல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப இயங்குகிறார்’’ என பங்குத்தரகர் ஒருவர் தகவல் கூறினார்.

இந்த தகவலைக் கூறிய பங்குத்தரகர், மொரிஷியஸ் தீவில் இருந்து நிதியை இந்தியப் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு மாற்றி வந்தவர். பின்னாளில் முறைகேடு கண்டறியப்பட்டு செபியால் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டது.  

‘’உண்மைதான். யாரும் அவரிடமிருந்து தங்களை துண்டித்துக்கொள்ள விரும்பவில்லை. கேட்டன் பரேக், புதிய சந்தையை உருவாக்கும் திறன் கொண்டவர். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். முன்னர் அவரிடம் வணிகம் செய்தவர்கள் இப்போதும் அவரிடம்  விசுவாசமாக இணைந்தே இருக்கிறார்கள்’’ என்றார் பங்குத்தரகர்.

கேட்டன் பரேக்கிற்கு, அதானி குழுமம் முக்கியமான வாடிக்கையாளர். அந்த நிலை இப்போது வரையில் மாறவில்லை என ஹிண்டன்பர்க் தனது செய்தி ஆதாரங்களின் மூலம் உறுதி செய்துள்ளது.

 1999-2001 இடையிலான காலகட்டங்களில் பங்கு முறைகேடு காரணமாக கேட்டன் பரேக் அவரோடு சேர்ந்த பிற தொழில் கூட்டாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதானி குழுமம் அவர்களோடு இணையாது என பலரும் நினைத்தனர். ஆனால் அதானி குழுமத்தின் உறவு கேட்டன் பரேக்கோடு இணைந்து, இந்தியா தாண்டி வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் வரைக்கும் பரவியிருந்தது.

 2007ஆம் ஆண்டு , எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஜெர்மின் கேபிடல் என்ற நிறுவனத்திலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணம் பரிவர்த்தனை ஆகியிருப்பது தெரிய வந்தது. பரிவர்த்தனைகளில் ஜினேஸ்வர் ஹோல்டிங்க்ஸ் என்ற மருந்து நிறுவனமும் பங்கேற்றிருந்தது.

பத்திரிகையில், அதன் உரிமையாளர் யார் என்று கூறப்படவில்லை. வினோத் அதானி ஜினேஸ்வர் ஹோல்டிங்க்ஸின் பங்குதாரர் மற்றும் தலைவர் ஆவார். இதில் கேட்டன் பரேக்கிற்கு நெருங்கிய நபர், ஜினேஸ்வர் மருந்து நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இதன் வழியாக வினோத் அதானி, 1 மில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்றார் என எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் கூறியது.    





இந்த மோசடி வெளியானபிறகு, கேட்டன் பரேக்கின் நிறுவனம் உடனடியாக ஆர்பிட் இன்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டிஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது என இங்கிலாந்து பெருநிறுவன ஆவணங்கள் தகவல் கூறுகின்றன. இந்த நிறுவனத்தை ஜெயே சுந்த் என்பவர் நிர்வாகம் செய்தார். இவர், அதானி குளோபல் நிறுவனத்திற்காக மொரிஷியஸில் நிதி நிறுவனம் ஒன்றில் தலைவராக இருந்தவர். இந்த தகவல்கள் பிஎஸ்இ ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பங்குகளை வாங்கி அதானி குழுமம் மோசடி செய்தது ஒருபுறம். இன்னொருபுறம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணத்தை நேரடியாக உள்ளே கொண்டு வந்து செய்த முறைகேடுகள் தனியானவை.  

 ஹிண்டன்பர்க் அமைப்பு, அதானி குழுமத்தின் நிறுவன கட்டமைப்பு பற்றி ஆராய்ந்தது. அதில் அவர்களின் நிதி பரிவர்த்தனை முறை பற்றிய தெளிவு கிடைத்தது. வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் நிதியை, அதானி குழுமத்தின் தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு வருவது, பின்னர் அதிலிருந்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மடைமாற்றுவது என சட்டவிரோதமான வழியில் நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்றுள்ளனர். 

ஒரு நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறது, வருமானம் இருக்கிறது, லாபம் சம்பாதிக்கிறது என காட்ட சட்டவிரோத நிதி பரிவர்த்தனை உதவியிருக்கிறது. இப்படி காட்டினால்தான் எளிதாக வங்கியில் கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகளில் இதே முறையை கையாண்டு அதானி குழுமம் பெருமளவில் கடன் தொகையைப் பெற்றது.

முதலீட்டு நிதி என்பதை தேவைப்படும் நிறுவனங்களுக்கு எளிதாக நகர்த்திக்கொள்ள முடிந்ததுதான் அதானி குழுமத்தின் சாமர்த்தியம். ஒரு நிறுவனத்தில் முதலீடாக, இன்னொரு நிறுவனத்தில் வருமானமாக, மற்றொரு நிறுவனத்தில் பணப்புழக்கம் இருப்பதாக… எப்படி காட்டவேண்டுமென நினைத்தார்களோ அப்படி காட்டினார்கள்.

அதானி குழுமத்தில் 7 முக்கியமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 578 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளன. 2022ஆம் நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனங்களில் நடைபெற்றுள்ள பரிவர்த்தனை எண்ணிக்கை 6,025 ஆகும்.

 ‘’குழப்பான குழும கட்டமைப்பு, சிக்கலான வணிக பரிவர்த்தனை முறை ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத நிதியைப் பெற்று பங்கு முறைகேடு, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு இடையில் நிதி பரிவர்த்தனை ஆகியவற்றைச் செய்கிறார்கள். இதற்கு நிறுவனங்களை முறையாக கண்காணிக்காததும், வேகமாக நடவடிக்கை எடுக்காதததுமே காரணம்’’ என செபியின் முன்னாள் தலைவர் அஜய் தியாகி கூறினார்.

 நிதி சார்ந்த முறைகேடுகளைத் தவிர்க்க முதலீட்டாளர்கள் எளிமையான நிறுவன கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வார்கள். அதானி குழுமங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கூட சிக்கலான உள்கட்டமைப்பு கொண்டவைதான். அதானி குழுமத்திற்கு வெளிநாட்டில் நிறைய அறக்கட்டளை அமைப்புகள் உள்ளன. அவையும் சிக்கலான உள்கட்டமைப்பு கொண்டவை.  


vinodh adani


அதானி குழும நிறுவனங்களில் நிதி முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பலவும் சந்தேகம் ஏற்படும் இயல்பில் இயங்கி வந்துள்ளன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு வரும் நிதி முதலீடு பலவும் வெளிநாட்டிலுள்ள போலி நிறுவனங்கள் வழியாக வருகிறது. கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, வெளிநாட்டிலுள்ள அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். அதானி குழுமத்திற்கு ஆதரவான செயல்பாட்டிற்காக பங்குகளில் மோசடி செய்த குற்றச்சாட்டு, வினோத் அதானி மீது உண்டு.

 2011ஆம் ஆண்டு வரையில் வினோத் அதானி, அதானி குழுமத்தில் அதிகாரப்பூர்வ  செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏற்று வந்தவர்தான். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கௌதம் அதானி ‘’குழுமத்தில் வினோத் அதானி எந்த பொறுப்பிலும் இல்லை’’ என்று அறிவித்தார். ஆனால் உண்மை என்னவெனில் அதானி குழுமத்தின் உலகளவிலான நிதி நிர்வாகம், வணிகத் தொடர்புகள் ஆகியவற்றில் வினோத் அதானி  இன்னும் இயங்கி வருகிறார் என்பதேயாகும்.

‘’வினோத் அதானி மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கி வருகிறார். துபாயில் உள்ள அதானி குழுமத்தின் நிறுவனங்களை நிர்வாகம் செய்கிறார்’’ என அதானி குழும நிறுவனங்களில் இயங்கிய முன்னாள் தலைவர் தகவல் தெரிவித்தார்.

ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில், மொரிஷியஸில் உள்ள பெருநிறுவன ஆவணங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டன. அதில் கவனித்துப் பார்த்தபோது, வினோத் அதானி தொடங்கி நிர்வாகம் செய்த நிறுவனங்கள் எவையும் நேர்மையான முறையில் செயல்படவில்லை என தெரிய வந்தது.

சைப்ரஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் பலவும் சந்தேகமான செயல்பாடுகளைக் கொண்டவை. ஹிண்டன்பர்க் அமைப்பு, இந்த நிறுவனங்களிலிருந்து வரும் முதலீட்டு நிதி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு முதலீடாகச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தது. இங்கு இயங்கும் போலி நிதி நிறுவனங்களையும் வினோத் அதானி நிர்வாகம் செய்கிறார்.  

வினோத் அதானி, 13 நிறுவனங்களை தலைவராக நிர்வாகம் செய்கிறார். இந்த நிறுவனங்களுக்கு தனித்தனியாக வலைத்தளங்கள் உள்ளன. இந்த வலைத்தளங்கள் அனைத்துமே ஒரே விதமான வடிவமைப்பில் ஒரேவிதமான செய்திகளைக் கொண்டுள்ளன. அடுத்த ஆச்சரியம், வலைத்தளங்கள் அனைத்தும் ஒரே நாளில் உருவாக்கப்பட்டவை என்பதுதான்.

 

நன்றி 

இரா.முருகானந்தம்

கருத்துகள்