சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்
இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி,
வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த
நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை
செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல
ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்?
யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார்
இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும்
செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார்.
இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை
ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.
இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3
மாடலில் இயங்குகிறது.
அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ்
நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது?
எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறது. அரவிந்த் தனது
முதுகலைப் படிப்பை டென்மார்க்கின் கோபன்ஹேகன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ட்ராக்சனில் படித்திருக்கிறார்.
‘’போனை மட்டுமே
நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்பிக்கை கொள்ள வேண்டிய பொருட்களில் ஒன்று டைப்ரைட்டர்.
அதில் எழுதும்போது உங்களுக்கு கவனம் சிதறாது. எனவே, போனில் உள்ள ஏஐ அம்சத்தை பழைய டைப்ரைட்டரில்
சேர்த்தேன்’’ என்கிறார் அரவிந்த்.
பழைய டைப்ரைட்டரில் கணினி போர்டு, ராஸ்பெரி பை என இரு
அம்சங்களை புதிதாக சேர்த்திருக்கிறார். இவர் லூமன் வேர்ல்ட் என்ற ஹார்ட்வேர் ஸ்டார்ட்அப்
ஒன்றை துணை நிறுவனராக தொடங்கி நடத்தி வருகிறார். இவர், அதன் தொழில்நுட்ப அதிகாரியாகவும்
உள்ளார்.
விர்ச்சுவல் உலகம், நிஜ உலகம் இரண்டு உலகங்களையும் காட்டும்
ஃபிளாஷ் லைட் ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கு புதிது
என்றாலும் ஐரோப்பாவில் அருங்காட்சியகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரவிந்த், தனக்கான தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தானே
உருவாக்கி பயன்படுத்தி வருகிறார். கேரள மாநில அரசின் உதவியுடன் அரசு பள்ளிகளில் ராஸ்பெரி
பை சார்ந்த தொழில்நுட்ப வகுப்புகளை நடத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இப்படி மாணவர்களுக்கு
பல்வேறு தொழில்நுட்ப வகுப்புகளை நடத்திய அனுபவம் அரவிந்துக்கு உண்டு. ‘’ஏஐ தொழில்நுட்பம்
உடல் உழைப்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல பிற கிரியேட்டிவ் துறையினரையும் பாதிக்க கூடியதுதான்.
இப்போதைக்கு உணர்வு சார்ந்த அறிவு இல்லாத காரணத்தால் ஏஐயை பயன்படுத்துவது மனிதர்களுக்கு
லாபம்தான்’’ என்கிறார் அரவிந்த்.
இந்து ஆங்கிலம்
மூலம் அனசுயா மேனன்
கருத்துகள்
கருத்துரையிடுக