இளைஞர்களிடையே வன்முறை இயல்பு எப்போதும் இருப்பதுதான்

 




வன்முறை எப்போடு இயல்பானதாகிறது? அதை நீங்கள் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருந்தால் ஒருவர் அடித்து நொறுக்கப்படுவதை, பிறரை நீங்கள் தாக்கி ரசிப்பதைக் கூட பின்னாளில் செய்யலாம். அந்தளவு மனம் அத்தகைய காட்சிகளால் நிரம்பியிருக்கும். மனதிற்கு முதல்முறை நடக்கும் வன்முறை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை மனதை மெல்ல மரத்துப் போகச் செய்கிறது. கலைகளில் உயர்வு பெற்ற மேற்குநாடுகளில் அதற்கு இணையான போர் கொடூரங்கள், சித்திரவதைகள் நடந்துள்ளன. மனதிற்கே ஒருபுறம் கலையின் உயர்வு, மறுபுறம் கற்பனை செய்யவே பயப்படும் கொடூரங்களை நடத்த முடிகிறது

வன்முறையால் ஒருவருக்கு சாகச உணர்வும், சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று உளவியலாளர்களான வோல்ஃப்கேங், ஃபெராகுட்டி ஆகியோர் கூறினர். இதற்கு ஆதாரமாக பெரு நகரங்களில் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நிறைய ஆய்வுகள் காட்டுகின்றன.

வறுமை, இனக்குழு மோதல்கள், முரண்பாடுகள், விரக்தி ஆகியவற்றின் இறுதி வடிவமே வன்முறையாக உருவெடுக்கிறது. இப்படி வன்முறை என்று கூறுவது கூட சமூகத்தில் உள்ள உயர்ந்த வசதிகொண்ட வர்க்கங்கள்தான் முடிவு செய்கின்றன என்று சில உளவியலாளர்கள் துணிச்சலாக எழுதியிருக்கிறார்கள். செல்வம் கொண்ட வர்க்கங்கள் செய்யும் குற்றச்செயல்களில் யாரேனும் இறந்துவிட்டால் அதை விபத்து என சித்திரிப்பது நடைமுறையான உண்மைதானே? குற்றம் என்பது ஏழை வர்க்கங்களில் உருவாகி வளர்கிறது என்பதை உயர்வர்க்கங்கள் திட்டமிட்டு பரப்புரை செய்கிறார்கள்.

தீவிரமான தாக்குதல் என்றால் என்ன? இதில் ஒருவர் படுகாயமுறுவதோடு, சாவின் பக்கமும் சற்றே சாய்ந்துவிட்டு திரும்புவார் என்று அர்த்தம். ஹெண்டர்சன் என்ற உளவியலாளர் நாற்பதுக்கும் மேலான தாக்குதல் கைதிகளை நேர்காணல் செய்து கோட்பாடு சார்ந்த முடிவுக்கு வந்தார். தாக்குதல் சம்பவங்களில் தாக்கியவர் ஒன்றுக்கு மேலான வன்முறை சம்பவங்களை ஏற்கெனவே செய்தவராக இருந்தார். அவர், தான் தாக்குபவரை கடுமையாக கேலி செய்ததோடு, தனிமையில் இருப்பவர்களையே தாக்கியிருக்கிறார்கள் என்ற அம்சங்களை ஆய்வாளர் கணக்கிலெடுத்தார்.

வன்முறை என்றால் அதில் சில வகைகள் உள்ளன. அதாவது, நிறுவனரீதியான வன்முறை, குடும்ப வன்முறை, பொது வன்முறை ஆகியவற்றை இதில் சேர்க்கலாம். பெண்களின் மீதான குடும்ப வன்முறை என்பது பொதுவாக இரவு நேரத்தில் வீட்டில் வெளி ஆட்கள் இல்லாதபோது நடைபெறுகிறது. மேற்கு நாடுகளில் 1980ஆம் ஆண்டில் குடும்ப வன்முறைகள் நடக்கத் தொடங்கி புகார்களும் காவல்துறைக்கு நிறைய வரத் தொடங்கின.

குடும்ப வன்முறை தம்பதிகளுக்கு இடையில் கடுமையான வாதங்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. இதே நேரத்தில் குழந்தைகளை தாக்குவது, கை, காலில் சூடுபோடுவது, பட்டினி போடுவது, தவறான பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்துவதும் வன்முறையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலான குழந்தை வல்லுறவு, தாக்குதல் பிரச்னைகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பை விட மனதை புத்துயிர்ப்பு செய்வதே கடினம்.  

1984ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் டோபாஷ், கணவரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நூறு பெண்களை சந்தித்துப் பேசினார். இதன் அடிப்படையில் சில வன்முறை முறைகளை அவர் உருவாக்கினார். இதன்படி, பெண்கள் ஏதாவது குறிப்பிட்ட கருத்தில் பேசி விவாதம் ஏற்படுகிறது. கணவருக்கு அவரது அதிகாரத்தை கேள்வி கேட்பது போல பெண்கள் வாதம் செய்வது கோபத்தை தருகிறது. எனவே, அறைவது, உதைப்பது, குத்துவது, குச்சி, கத்தி ஆகிய ஆயுதங்களை மனைவியிடம் பயன்படுத்துகிறார். கணவர் மனைவியை அடித்து உதைக்கும்போது பிள்ளைகள் அம்மாவை அடிக்கவேண்டாம் என அப்பாவிடம் கெஞ்சுகின்றனர். அல்லாதபோது அம்மாவைக் காப்பாற்ற பிறரை அழைத்து வரும் வேலையைச் செய்கின்றனர். அடி, உதையால் காயம் ஏற்பட்ட பெண்கள் தங்கள் நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மருத்துவ உதவியைப் பெறுகின்றனர். ஆண்கள் பெண்களை அடித்து உதைத்தாலும் கூட வெளியே எதுவும் நடக்காதது காட்டிக்கொள்கின்றனர்.

குடும்ப வன்முறை சம்பவங்களில் பெண்கள்தான், அந்த சம்பவத்திற்கு காரணம் என்பதுபோலவே பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் சமூக அழுத்தமும்  உள்ளது.

 

 


கருத்துகள்