தங்கச்சியின் கையால் உயிரைப் போக்கிக்கொள்ளும் அண்ணனின் அன்லிமிடட் பாசம்! வீரசிம்ம ரெட்டி-என்பிகே (2)

 









வீரசிம்மா ரெட்டி






வீர சிம்ம ரெட்டி

இயக்கம் கோபிசந்த் மலினேனி

இசை தமன் சாய் கண்டசாலா

என்பிகே, ஸ்ருதி, ஹனிரோஸ், வரலட்சுமி

 

அண்ணன் தங்கை பாசத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன். இருவருக்கும் பாசத்தால் ஒருவருக்கொருவர் தம் உயிரைக் கூட விடுகிறார்கள். இதனால் ஓ ஹென்றி கதை போல யாருக்கும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லாமல் போகிறது.  இதனால் பாசமேனும் மனதில் பதிகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேடிக்கை.

முதல் காட்சியில் ஊரின் பெரிய நிலத்தைக் காட்டுகிறார்கள். அங்கு கட்டிலில் அமர்ந்திருக்கிற ஒருவரிடம் கல்யாணப் பத்திரிக்கையை ஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு ஊரின் பெரிய தலையை வரச்சொல்ல சொல்லுகிறார். வந்தால் அங்கு வைத்தே அவரைக் கொல்வதாக சொல்லுகிறார். ஆனால் அதற்கு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறவர். அது முடியாது. சாத்தியமே இல்லை என்கிறார். இதனால் அவரைக் கொன்று, அவரது பயிர்களை தீ வைத்து எரித்து விடுகிறார். அவர்தான் வில்லன், பிரதாப் ரெட்டி.

புலிசர்லா ஊரில் வாழும் வீர சிம்மா ரெட்டி, அந்த ஊரையே வாழ வைக்கிற ஆள். அதேசமயம் நல்லதோ கெட்டதோ இரண்டையும் அந்த ஊர் மக்களுக்கு அவரே செய்கிறார். அவர் ஏற்பாடு செய்யும்  பெரும் திரளான கல்யாண விழா நடைபெறுகிறது. அங்கு அவரைக் கொல்வதற்காக நிறைய ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களின் தலைவனும்(பிரதாப் ரெட்டி ) அங்கு நிற்கிறான். அந்த சண்டையில் கல்யாணத்தை சரியானபடி நடத்திக்கொண்டே சண்டைபோடுகிறார் வீர சிம்ஹா. கொல்ல முயன்றவனை அடித்து காயப்படுத்தி விரட்டுகிறார். உண்மையில் பிரதாப் ரெட்டிக்கும்,  வீர சிம்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை நிதானமாக சொல்கிறார்கள்.

பாலைய்யா படத்தில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இருக்கிறது. இதனால் படத்தை செகண்ட்ஷோ யூட்யூப் சேனல் போல ரோஸ்ட் செய்யவெல்லாம் விரும்பவில்லை. கோபிசந்த் மலினேனி எடுத்த ரவிதேஜா படங்களைப் பார்த்தால் அதில் காமெடி என்பது முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் வீர சிம்மா ரெட்டி படம் முழுக்க ரத்தப்பொரியல்தான். வீரசிம்ஹா, உட்கார்ந்திருப்பதே லட்சுமி நரசிம்மரின் சிலைக்கு கீழ்தான். அதுவும் கருப்புச்சட்டையும் வேட்டியும் கட்டிக்கொண்டு படம் நெடுக வருகிறார். இதனால் படம் முழுக்க அடிதடிக்கான பங்களிப்பே அதிகம். படத்தை கோபிசந்த் எடுத்தாரா அல்லது சண்டை பயிற்சி இயக்குநர்களான ராம் லஷ்மண் எடுத்தார்களா என குழப்பமாக இருக்கிறது. ஆனால் படம் ஓடும்போது நீங்கள் உறுதியாக முடிவுக்கு வந்துவிடுவீர்கள்.

படத்தில் ஆண்களே அதிக இடத்தை எடுத்துக்கொண்டதால் பெண்களுக்கான முக்கியத்துவம் மிகவும் குறைவு. அதிலும் நேர்மறையாக காட்டப்படும் பெண் பாத்திரங்களே இல்லை. துருக்கி இஸ்தான்புல்லில் அங்குள்ள மக்களுக்கு ராகி களி, நாட்டுக்கோழி குழம்பு போட்டு உணவகம் நடத்தும் மீனாட்சி (ஹனிரோஸ்), இருக்கும் பெண்களிலேயே கொஞ்சம் ஆறுதல் தருகிற நடிப்பை நடித்திருக்கிறார்.

வீரா, மீனாட்சியைப் பார்த்து என்னைப் பத்தி பையன் கேட்கவே இல்லையா என ஏக்கமாக கேட்பார். அதற்கு, மீனாட்சி, அப்படி கேட்கற மாதிரி நான் அவனை வளர்த்துல என சற்று கோபமாக பேசுகிறார். இந்த காட்சியில்தான் அவர் , வீரா தன்னை கர்ப்பிணியாக்கி கைவிட்டுவிட்ட கோபம் 30 ஆண்டுகள் கடந்தும் தெரியும்.

படத்தில் முக்கியமான காட்சியில் கோபிசந்தின் மகனும் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிதான் படத்தில் முக்கியமானது. இரண்டு இடங்களில் அவர் வருகிறார். இரண்டிலும் முக்கியமான சம்பவங்கள் நடக்கின்றன. அதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தில் காட்சிகளை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தி பார்வையாளர்களுக்கு ஹைப் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் தமன். பாடல்களை விடுங்கள். பின்னணி இசைதான் படத்திற்கு உயிரோட்டத்தை தருகிறது.

வில்லன் நடிகர் துனியா விஜய், பிரதாப் ரெட்டியாக வருகிறார். ஆனால், வீர சிம்மா ரெட்டியை மிரட்டும் விரட்டுகிற குணங்கள் இவருக்கு இல்லை. அனைத்து சண்டையிலும் அடிவாங்கி சுருண்டு விழுகிறார். இவரை விட இவரின் மனைவியாக வருகிற வரலட்சுமி நன்றாக நடித்திருக்கிறார். துனியா விஜய், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, படத்தில் இரண்டு இடங்களில் ராகிக் களி, நாட்டுக்கோழி குழம்பு, தலைக்கறி என்று பேசுகிறார்கள்.

குடும்பவாழ்க்கை இல்லாதவர் வீர சிம்மா. ஆனால் மக்களுக்காக கவலைப்படுபவர் என்று வசனங்களால் போற்றி புகழப்படுபவர். தான் தொடங்கி வைத்த தொழிற்சாலை எப்படி நடக்கிறது என தெரியாமலா இருப்பார்? அங்கு வேலை செய்யும் மக்கள் கூடவா வீர சிம்ஹாவின் வீட்டுக்கு வந்து நிலையை சொல்லாமல் இருப்பார்கள்? ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே இன் இனிஷியலைக் கொடுத்துவிடு என எந்த அம்மா கூறுவார்? துருக்கி காட்சிகளை வேகமாக முடிக்க இயக்குநர் அவசரப்பட்டிருக்கிறார். வீராவின் தங்கை பாசம் சரி. ஆனால், தன்னை காதலித்து மணக்க நினைத்த மாமா பெண்ணை, எப்படி அவர் மட்டுமே முடிவெடுத்து கைவிடுவார்? 

பாலைய்யாவுக்கு அதிக ஹிட் கொடுத்தவர், இயக்குநர் போயபட்டி சீனு. இதனால் அவரது படத்தின் காட்சிகளைப் போலவே சில காட்சிகளை ஊக்கமுடன் கோபிசந்த் எடுத்திருக்கிறார். சரைனோடு படத்தில் கோவிலுக்கு முன்னர் கூத்துக்கலைஞர்கள் ஆடும்போது வரும் சண்டைக்காட்சி ஒன்று உண்டு. அடுத்து, போயபட்டியின் ஸ்பெஷல், தலையை வெட்டி வீசுவது. ஏறத்தாழ அசுரவதம் போல. இதை அவர் தனது படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்கி பிறகு வில்லனின் தலையை நாயகன் வெட்டுவது போல செய்வார்.

இந்த படத்தில் வீர சிம்மா அதை இயல்பாக்குகிறார். அவரின் மகன் ஜெய் சிம்மா ரெட்டி தொடர்கிறார். இந்தளவு வன்முறையான படத்தை குடும்ப படங்களை தயாரித்து விற்கும் டிஸ்னி வாங்கி ஓடிடியில் திரையிடுகிறது. எல்லாம் வியாபாரம்தான்….. தமிழ் படத்தில் பாலைய்யாவுக்கு குரல் கொடுத்தவர், அவர் வேலையை செய்திருக்கிறார். ஆனால் குரலில் உயிரோட்டம் இல்லாமல் போய்விட்டது.  

ஓவர் பாசம் உயிரைக் கொல்லும்

கோமாளிமேடை டீம்

 

கருத்துகள்