தன்னை ஏற்க மறுத்து மோசடி ஆட்களோடு போராடும் நாயகன்! ரெட் லைட்ஸ் -
ரெட்லைட்ஸ்
தனக்குள்
இருக்கும் மனோசக்தியை ஏற்காமல் மறுப்பவன், மெல்ல அதை உணர்ந்துகொள்வதுதான் படத்தின் கதை.
உளவியல் துறை
பேராசிரியர் மார்க்கரேட், அவரது உதவியாளர் இயற்பியலாளர் டாம் பக்லி ஆகியோர் அறிவியலுக்கு
புறம்பான நான்தான் கடவுள் என்று சொல்லுகிற ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களின் மோசடிகளை
அம்பலப்படுத்துகிறார்கள். அந்த மோசடிக்காரர்களை காவல்துறை சிறையில் அடைக்கிறது.
உண்மையில்
மார்க்கரேட் பல்வேறு மோசடிகளைக் கண்டுபிடித்து தடுத்தாலும் அவரது சொந்த வாழ்க்கை மெல்ல
நசிவிற்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான காரணம், அவரது மகன். நான்கு வயதிலிருந்து
கோமாவில் இருக்கும் அவனை வெண்டிலேட்டர் வைத்துத்தான் பாதுகாக்கிறார். அவன் வாழ்வது
என்பது மார்க்கரேட் உயிருடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று. அறிவியல்தான் நிஜம். கடவுள் என்பது கிடையாது என மார்க்கரேட்
நம்புகிறார்.
மோசடியான
சாமியார்கள் உலகம் முழுக்க உண்டு. இவர்கள் எப்படி ஜிம்மிக்ஸ் வேலையைச் செய்கிறார்கள்,
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை படம் நெருக்கமாக நின்று ஆராய்கிறது.
அதேசமயம் மனோசக்தி என்பது உண்மையா பொய்யா என்பதையும்
விவாதிக்கிறது.
சொந்த வாழ்க்கை
துயரத்தில் இருந்தாலும் அதையெல்லாம் பற்றி
பெரிதாக கவலைப்படாமல் பேராசிரியர் மார்க்கரேட், போலி சாமியார்களைப் பற்றி கண்டுபிடிக்க
முயல்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். இவருக்கு பல்கலைக்கழகத்தில் போட்டியாளராக
ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர் இதுபோல பல்வேறு மனோசக்தி சார்ந்த செயல்களுக்கு நம்பிக்கையாளர்.
அவர் பேராசிரியர் மார்க்கரேட்டை சோதிக்க நினைக்கிறார்.
படத்தில்
மார்க்கரேட்டிற்கும், டாமுக்கும் எங்கே முரண் வருகிறதோ அங்கிருந்துதான் படம் வேகமாகிறது.
சில்வர் என்ற
மனோசக்தி கொண்ட பார்வையற்ற மனிதர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா வருகிறார். இவர்
ஸ்பூன்களை வளைப்பது, தன்னை எதிர்த்த நிருபரை மாரடைப்பு வரவைத்து கொன்றது என சர்ச்சைகளைக்
கொண்டவர். அதை வைத்துதான் சம்பாதிக்கிறார்.
இவரது வருகை மார்க்கரேட்டை தடுமாற வைக்கிறது. ஏனெனில் முன்னர் ஒருமுறை நடந்த விவாதத்தின்போது
ஏற்பட்ட தர்மசங்கட தனிப்பட்ட கேள்விகள்தான் மார்க்கரேட்டின் தடுமாற்றத்திற்கு காரணம்.
ஆனால் அவரது உதவியாளர் டாம் பக்லி, இதை எதிர்க்கிறார். மார்க்கேட்டை , நீங்கள் சில்வருக்கு நேருக்கு நேராக நின்று போராட வேண்டும்.
உண்மையை அம்பலப்படுத்தவேண்டும். பயப்படுகிறீர்களா? என்று கேட்டு சண்டை போடுகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தில் மார்க்கரேட்டிற்கு உடன்பாடில்லை. வேண்டாம் அவர் ஆபத்தானவர்
என சொல்லுகிறார். ஆனால் டாம் பக்லி, தனியாகவே சில்வரைப் பொய்யானவர் என நிரூபிக்க முயல்கிறார்.
அதில் அவர் வென்றாரா, இல்லையா என்பதே கதை.
சிலியன் மர்பிதான்
படத்தின் நாயகன். அவமானம், வருத்தம், வேதனை, வலி என அனைத்தையும் சற்று உள்ளடக்கமாகவே
காட்டி நடித்திருக்கிறார். சில்வருக்கு எதிரான
போராட்ட காட்சிகளில்தான் இவரது உடல்மொழி, நடிப்பைக் கவனிக்க வேண்டும். அருமை.
இறுதிக்காட்சி
பார்வையாளர்களுக்கு எதிர்பார்க்க முடியாத திருப்பத்தை தருகிறது. படத்தை அங்கிருந்து
பின்னோக்கி பார்த்தால் அதுவரை நடந்த மர்ம சம்பவங்களை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். தன்னைத்தானே ஏற்றுக்கொள்வது எந்தளவு முக்கியம் என்பதுதான்
டாம் பக்லி புரிந்துகொள்ளும் விஷயம். சொல்வது எளிதாக இருந்தாலும் அவர் அதை எந்த கணத்தில்
உணர்ந்துகொள்கிறார் என்பதே முக்கியமானது.
அங்கிருந்துதான்
படமே மாறுகிறது. ஏன், அவரது வாழ்க்கையும் கூட..
தன்னை உணர்தல்
கோமாளிமேடை
டீம்
ரெட்லைட்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக