மோசடி மன்னன் அதானி - பகுதி 3 - கண்டும் காணாமலும் தூங்கிய செபி...லாபம் சம்பாதித்த அதானி

 


அதானியால் கீழே கிடந்த இந்தியா மேலே உயர்ந்தபோது...





இந்தியப் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது புதிதல்ல. முதலீட்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டுமென்பது சட்ட விதி. பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகள் முதலீட்டாளர்கள் அல்லாதோரிடம் இருப்பது முக்கியம். இதன்மூலம் பங்குகளின் விலையை ஏற்றி விற்று தனிநபர் லாபம் சம்பாதிப்பது குறையும், பங்குகளை விற்பதில் மோசடி செய்வது தவிர்க்கப்படும்.

இந்திய பங்குச்சந்தையைக் கவனிப்பவர்களுக்கு, பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பங்குகளை வெளிநாட்டில் தொடங்கியுள்ள நிறுவனங்கள் மூலம் கட்டுப்படுத்தி வருவது புதிதான செய்தியல்ல. இப்படி வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பங்குகளின் விலையை ஏற்றி இறக்கி மாற்றுவதோடு, அரசுக்கு முறையான தகவல்களைத் தராமல் தவிர்க்கிறார்கள்.

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பலவற்றின் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றி இந்திய ஊடகங்கள் முன்னமே கேள்வி எழுப்பியிருந்தன. இந்திய அரசியல்வாதிகளும் இதுபற்றிய கேள்விகளை எழுப்பினாலும் பங்குதாரர்கள் பற்றி அதானி குழுமம் தகவல்களைக் கூறவில்லை.  




‘’எங்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் நிதி யாருடையது என்று தெரியவேண்டும். நிதி, கௌதம் அதானியுடையது என்றால் குறைந்த பங்குகளை வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்படுவார்கள்’’ என இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதியும், முன்னாள் முதலீட்டு வங்கியாளருமான மஹூவா மொய்த்ரா  கூறினார் (2021 ஜூலை).

2021ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 25 சதவீதம் அளவுக்கு சரிந்தன. அதேநேரத்தில் பிற நிறுவனங்களின் பங்குகள் விலைச்சரிவு 4-8 சதவீதம் அளவுக்கு இருந்தன. வெளிநாட்டில் இருந்து அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் யார் என்பது அப்போதைக்கு ஊடகங்களில் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது.




அதானி குழுமம், தனது தேவைக்கு ஏற்ப வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் மூலம் பங்குகளின் விலையை ஏற்றி இறக்கி வருகிறது. இதனால் இப்பங்குகளில் முதலீடு செய்பவருக்கு அதிக ஆபத்துகள் உண்டு. குழுமத்தைப் பொறுத்தவரை தனது நோக்கத்திற்கு ஏற்ப பங்குகளின் விலையை ஏற்றி இறக்க முடியும்.

அதானி குழும முதலீடுகளுக்கான வரைபடம்


வெளிநாடுகளில் போலி முதலீட்டு நிறுவனங்கள் இருப்பதால், அதைப்பற்றி தகவலையும் இங்குள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு கூறவேண்டியதில்லை.   தற்போது, அதானி குழுமத்திலுள்ள நான்கு நிறுவனங்களில் அதிக வெளிநாட்டு முதலீடு உள்ளது. ஆனால் அதுபற்றிய தகவலை செபிக்குத் தெரிவிக்காததால் அந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களில் உள்ள பங்குகள் 72 சதவீதத்திற்கும் மேலாக நிறுவனத்தினரே  வைத்துள்ளனர். அதானி வில்மர் என்ற நிறுவனத்தில் 87.94 சதவீத பங்குகளை நிறுவனத்தினரே, கொண்டிருக்கின்றனர். 2025ஆம் ஆண்டு இந்த நிலை மாறி 75 சதவீதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அரசு விதிகள் நடைமுறைக்கு வரும்.

பங்குகளின் சதவீத அளவுகள் இதோ

அதானி ட்ரான்ஸ்மிஷன் -74.19%

அதானி என்டர்பிரைசஸ் – 72.63%

அதானி பவர் – 74.97%

அதானி டோட்டல் பவர் – 74.80%

அதானி வில்மர் 87.94%

தகவல் – பிஎஸ்இ பங்குச்சந்தை அடிப்படையில்…






அதானியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்கள் பலரும் மொரிஷியஸ் தீவைச் சேர்ந்தவர்கள்தான். அங்கிருந்து இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும்  நிதிதான், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு முதலீடாக உதவி வருகிறது. அதானி குழுமத்திலுள்ள நான்கு  நிறுவன பங்குகளை 75 சதவீத அளவில் முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள். இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு சதவீத நிதிக்கு மேல் முதலீடு செய்தால் கூட அந்த நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்பதே சட்ட விதி. இந்த விதியை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனத்தினர் வாங்கும் பங்குகளை மறைக்கிறார்கள் என ஹிண்டன்பர்க் நிறுவனம் நம்புகிறது.

அதானி குழுமத்திலுள்ள நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டு நிதி அளவைப் பார்ப்போம்.

அதானி ட்ரான்ஸ்மிஷன் 19.32%, அதானி என்டர்பிரைசஸ் -15.39%, அதானி பவர் -12.88 %, அதானி டோட்டல் கேஸ் -17.25%, அதானி க்ரீன் -15.14%, அதானி போர்ட்ஸ் -13.76%, அதானி வில்மர் -15.7%

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் நிதி பயன்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு 1 சதவீதத்திற்கும் குறைவு. இப்படி நிதி முதலீடு செய்யப்படுவது சாதாரணமாக அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் பிற பொது பங்குதாரர்களுக்கு தெரியாது.

 ஒரு நிறுவனத்தின் முக்கியமான பொது ஈக்விட்டி பங்குதாரர்கள் பற்றி அடிப்படை தகவல்கள் வெளிப்படையாக கூறப்பட்டிருக்கும். அதுதான் வழக்கம். அப்படி என்னென்ன விஷயங்கள் கூறப்படலாம் என்பதைப் பார்ப்போம்.

முதலீட்டு பங்குகளைப் பற்றி பங்குதாரர்கள் அறிந்திருப்பார்கள். இவர்கள் நிறுவனத்தில் பணியாற்றும் முக்கிய பணியாளர்கள் பற்றியும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

முதலீட்டாளர்கள் தங்களது தொழில் வரலாறு பற்றியும், நிதிக்கான மூலதாரத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்கள்.

பிற நபர்களிடமிருந்து நிறுவனத்திற்கான முதலீட்டை ஈர்ப்பதோடு, விற்பனை ஆவணங்களில் தங்களின் நிறுவனங்களைப் பற்றி கூறியிருப்பார்கள்.

பன்மைத்தன்மை கொண்டவர்களாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை செய்திருப்பார்கள். இதனை அவர்களது தொழில் சார்ந்த செயல்பாடுகளை அதாவது, போர்ட்ஃபோலியோ பார்த்து அறியலாம்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் எவரும் மேற்சொன்ன வரையறைக்குள் வரவே மாட்டார்கள். இதெல்லாம் பங்குகளை வாங்கி விற்பதில் அடிப்படையானவை.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய, முதலீட்டு நிறுவனங்கள் அனைத்துமே மொரிஷியஸில் இருந்து இயக்கப்படுபவை. அனைத்துமே போலி நிறுவனங்கள். இதை அதானி குழுமத்தில் பினாமி இயக்குநர்களே இயக்குகிறார்கள்.

பல கோடி ரூபாய்களை முதலீடாக கொண்டு பங்குகளை வாங்குபவர்களைப் பற்றிய எந்த தகவல்களும் நாம் அறியமுடியாது. வலைத்தளம் இருக்காது. லிங்க்டுஇன் தளத்தில் இருக்க மாட்டார்கள். முதலீட்டைப் பெறுவதற்கான மார்க்கெட்டிங் விஷயங்கள், நிதிக்கான கொள்கைகள் என எதையும் பார்க்கவே முடியாது.

நிறைய பங்குகளை எதற்காக வாங்கி வைத்துள்ளனர் என கேள்விகளை எழுப்பினாலும் பதில் கிடைக்காது. இவர்களைப் பற்றியும் எந்த செய்தியும் வெளியே வராது.

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளை பணம் கொடுத்து வாங்கி அதிக காலம் வைத்திருப்பார்கள். விலையில் ஏற்றத் தாழ்வு இருந்தால் பங்குகளை விற்பதே சரியானது. நிலையற்ற தன்மை நிலவும் சூழலில் நிறுவன மேலாளர்கள், வாங்கிய  தங்கள் பங்குகளை விற்பார்கள் அல்லது அப்படி விற்க முடியாதபோது அதை நிர்வகித்து வர வாய்ப்புள்ளது.  

2021ஆம் ஆண்டு செபி அமைப்பு, இதுபற்றிய சூழலை ஆய்வு செய்ததாக ஊடகங்கள் கூறின. ஆனால் அதானி அமைப்பு முன்னதாகவே, தாங்கள் செபி அமைப்பின் விதிகளுக்கு இசைந்துதான் செயல்படுவதாக கூறியிருந்தது. 2022ஆம் ஆண்டு கூட செபி அமைப்பு, அதானியின் மொரிஷியஸ் தீவிலுள்ள பங்குதாரர்கள், முதலீட்டு நிதி பற்றி விசாரித்ததாக, ஹிண்டன்பர்க் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.  ஆனாலும் அதானி குழுமத்தின் மீது எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திய நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிதியுதவி பற்றி பேசப்பட்டது. ஆனாலும் செபி அமைப்பின் விசாரணை சரியான முடிவை எட்டவில்லை.

அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் மொரிஷியஸிலுள்ள ஐந்து தனித்தனியான முதலீட்டு நிறுவனங்களின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஒரே முகவரியில் வெவ்வேறு நிர்வாக இயக்குநர்களின் பெயரால் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்

அல்புலா இன்ஸ்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்

கிரெஸ்டா ஃபண்ட் லிமிடெட்

எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென் ஃபண்ட் லிமிடெட்

லோட்டஸ் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்

இந்த ஐந்து நிறுவனங்களும் மான்டேரோஸா என்ற நிறுவனத்தில் கட்டுப்படுத்தப்படுவதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு 360 பில்லியன் டாலர்களாகும். இந்த நிதி, அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முதலீட்டு நிதியின் சதவீத அளவைப் பார்ப்போம்.

அதானி என்டர்பிரைசஸ் – 5.09%

அதானி ட்ரான்ஸ்மிஷன் - 2.72%

அதானி டோட்டல் கேஸ் -1.29%

அதானி பவர் -1.29%

மான்டேரோஸா குழுமம், மொரிஷியஸ் தீவில் உள்ள பங்குதார நிறுவனங்களைப் போலவே அதானி குழுமத்தில் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

மொரிஷியஸ் தீவில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் முதலீட்டு நிதி, எந்த அடையாளமும் இல்லாமல் இந்தியப் பங்குச்சந்தையை வந்தடைகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனம், முறைகேட்டில் ஈடுபட்டு இந்தியப் பங்குச்சந்தையில் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்ட பங்குத் தரகரைச் சந்தித்தது.  ‘’  செபி அமைப்பு நடக்கும் மோசடிகளைப் பற்றி தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கவில்லை. அமைப்பிலுள்ள அதிகாரிகள், பணத்தைப் பெற்றுக்கொண்டு கண்டும் காணாதது போல இருந்துவிடுகிறார்கள். இந்த விவகாரத்தைப் பேசுவதும் இல்லை. தொடுவதும் இல்லை. எனவே , செபி அமைப்பு கண்களை மூடிக்கொண்டு இருக்கவில்லை. அந்த முழு அமைப்புமே இதைப் பற்றி அறிந்திருக்கிறது. பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கும் தெரியும். செபிக்கும் தெரியும் ‘’ என பட்டென பேசினார்.

‘’மான்டேரோஸா நிறுவனத்தைப் பாதையாகப் பயன்படுத்தி நிதியை இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள். இந்திய அரசு அதிகாரிகள், செபி அதிகாரிகளுக்கு மான்டேரோஸா மிகவும் நெருக்கமான நிறுவனம். இந்தியாவின் வர்த்தக அமைப்பை அறிந்தவர்கள்தான் மோசடியை செய்ய அனுமதிக்கிறார்கள்’’ என்றார்.

 

  நன்றி 

இரா.முருகானந்தம்

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்