துணிவிருந்தால் எளிதாக செய்யலாம் மோசடியை.. மோசடி மன்னன் அதானி - பகுதி 4

 




தேசப்பற்றும் மோசடியும்இணையும்போது..



ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை - அதானி மோசடி 




மோசடி மன்னன் அதானி - பகுதி 4



மான்டேரோஸா முதலீட்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநரின் பெயர், அலஸ்டர் குகென்புஹ்ல் ஈவன். இவருக்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் மோசடிகளைச் செய்த தொழிலதிபரான ஜதின் மேத்தாவுடன் தொடர்புண்டு. ஸ்விட்சர்லாந்தில் வாழும் அலஸ்டர், தொண்ணூறுகள் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இதைப்பற்றிய குறிப்பு அவரின் தொழில் சார்ந்த குறிப்பு பக்கங்களில் உள்ளது.

ஜதின் மேத்தா, அமெரிக்காவில் வைரத் தொழில் செய்தபோது வங்கிகளில் ஒரு பில்லியன் டாலரை மோசடி செய்தார். பிறகு வரிகள் இலகுவான நாடுகளுக்கு தப்பிச்சென்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்படிப்பட்ட குற்றவரலாறு கொண்டவரின் மகனுக்கு, வினோத் அதானி தனது மகள் கிருபாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதன்மூலம் இவர்கள் நெருக்கமான தொழில் கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர்.

2002ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தில் குடாமி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் முதலீடு செய்தது. இந்த நிறுவனம் அதானி குளோபல் நிறுவனத்திலும் பங்குதாரராக இருந்தது. குடாமி நிறுவனத்தின் தலைவரான இருந்த சாங் சுங் லிங், அதானி நிறுவனங்களில் தலைவராக இருந்தார் என வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் விசாரணை ஆவணங்களில் (ப.179) கூறப்பட்டுள்ளது. சாங்கிற்கு குற்ற வரலாறு இருந்தாலும் கூட தொடர்ந்து அதானி நிறுவனங்களில் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார்.  



குடாமி நிறுவனத்தின் 2007ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில்,அந்நிறுவனம் மான்டேரோஸாவின் துணை நிறுவனமான லோ|ட்டஸ் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் 17 மில்லியன் டாலர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்த செய்தி தெரிய வந்தது.

2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், லோட்டஸ் குளோபல் ஹோல்டிங் நிறுவனம், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4.51 சதவீதம் பங்குகளை வாங்கியது. 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 1.64 சதவீத பங்குகளை வாங்கி பெரும் பங்குதாரராக மாறியது.  

தொடக்க கட்ட விசாரணையில், மான்டேரோஸா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஹிண்டன்பர்க் முயன்றது. அதானி குழும பங்குகளை எப்படி வாங்குகிறார்கள் என்பதை அறியவே இந்த தேடுதல் முயற்சி. அப்போது ஜூரிச்சில் மான்டேரோஸா நிறுவனத்திற்காக இயங்கும் பொதுதகவல் தொடர்பு நிறுவனம் ஹிண்டன்பர்க்கை தொடர்புகொண்டது.

‘’மான்டேரோஸா நிறுவனத்தின் தகவல்தொடர்பு நிறுவனத்திற்காக பேசுகிறோம். நீங்கள் எங்கள் குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் பல்வேறு தகவல்களை அறிய முயன்றுள்ளீர்கள்’’ என அறிகிறோம் என செய்தியை அனுப்பினர். பிறகு ஹிண்டன்பர்க் அமைப்பின் கேள்விகளுக்கு நேரடியாக பதில்களை அனுப்புகிறோம் என்று கூறி, கேள்விகளைப் பெற்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு தொடர்புகொண்டனர்.

‘’ உங்கள் கேள்விகளுக்கு நன்றி. மான்டேரோஸா நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்களுக்கு மட்டடுமே சேவைகளை வழங்கும். நாங்கள் பல்வேறு நீதிமன்ற வட்டாரங்களில் செயல்பட்டு வருவதால் தனி முதலீட்டாளர்களுக்கு எங்களைப் பற்றிய செய்திகளை வழங்குவதில்லை‘’ என்று செய்தி கூறினர்.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியாவதற்கு முன்னர், மான்டேரோஸா நிறுவனத்தின் உயரதிகாரிகள் (ஸ்விட்சர்லாந்து, மொரிஷியஸ்) ஆகியோரிடம் அவர்கள் அதான குழுமத்தில் முதலீடு செய்யும் நிதி பற்றி கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு எந்த பதிலும் தரவில்லை.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் எலாரா கேபிடல் பிஎல்சி. இந்த நிறுவனம் மொரிஷியஸில் இந்தியா ஆப்பர்சூனிடிஸ் ஃபண்ட் மற்றும் வெஸ்பரா ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறது.

2022ஆம் ஆண்டு டிசம்பரில், இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்டின் மொத்த சந்தை மதிப்பு 246.36 பில்லியன்ஆகும். இந்த நிறுவனத்தின் 98.78% பங்குகள் (246.36 பில்லியன்) மூன்று அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் நிறுவனம், அதானி ட்ரான்ஸ்மிஷனில் 3.62 சதவீத பங்கும், அதானி டோட்டல் கேஸில் 1.62 சதவீத பங்கும், அதானி என்டர்பிரைசஸில் 1.62 சதவீத பங்கும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஈக்விட்டி பங்குகளாகும்.

எலாராவின் இன்னொரு நிறுவனமான வெஸ்பரா, 2022ஆம் ஆண்டு ஜூனில் 1.04 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தது. பிறகு, அதன் பங்கு சதவீதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. தற்போது அதானி குழுமத்தில் வெஸ்பராவின் பங்கு நிலை என்னவென்று தெரியவில்லை.   

எலாரா நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கி, அதானி பங்குகளை வாங்குகிறது என்பது முழுமையாக தெரியவில்லை. 2012ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் பங்குகளை ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக வாங்கி பெயரை வெளியே தெரிவிக்காத நிறுவனம் எலாராவின் இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் நிறுவனம்.

வரிவிலக்கு வசதிகள் கொண்ட மொரிஷியஸ் தீவில் ஒருவர் எளிதாக முதலீட்டு நிறுவனங்களைத் தொடங்கிவிடலாம். அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பதை அறிவது கடினம். ஆனால் அதானி குழுமத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமையாளர் என குறிப்பிடப்படுபவர்கள் உண்மையை நன்கு அறிவார்கள்.

 எலாராவில் பங்குவர்த்தம் செய்த ஒருவரிடம், வெளியே உள்ளவர் எலாராவில் அதானி குடும்ப உறுப்பினர்கள், குழும முதலீட்டாளர்கள் பற்றி தகவல் ஆவணங்களைப் பெற்றிட முடியுமா என்ற போது, ‘’முடியவே முடியாது. எப்போதும் முடியாது. ஏனெனில் இந்த அமைப்பு முறையின் அழகே அதுதான்’’ என்றார்.

 மொரிஷியஸிலுள்ள முதலீட்டு நிதி என்பது சீன சுவர் போன்று பாதுகாப்பானது. இந்த நிறுவனங்களின் உரிமையாளர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவே முடியாது. இந்திய ஒழுங்குமுறை அமைப்பான செபி, இதுபற்றிய தகவல்களை அறிந்துள்ளது.

‘’ஒழுங்குமுறை அமைப்பு, அனைத்தையும் தெரிந்துகொண்டுதான் இயங்குகிறது. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் செபி அமைப்பு, பங்குச்சந்தையில் நடைபெறும் அனைத்துவித தவறான நடவடிக்கைகளையும் அறிந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை சரி செய்ய நினைக்கவில்லை. அதுதான் முக்கியமான விஷயம், இங்கு யாருமே தங்கள் கைகளை கறைபடுத்திக்கொள்ள விரும்பவில்லை’’ என்றார்.

எலாராவின் இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், வெஸ்பரா ஃபண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள அதானி குழுமத்தினுடையவையாக இருக்க வாய்ப்பு அதிகம்.  ’’உங்களுடைய கேள்விக்கான பதிலை அறிவது எளிதானதுதான். அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள குழுமங்களை டாப் 10 என வரிசைப்படுத்தினால், எந்த நிறுவனம் அதை இயக்குகிறது என கண்டுபிடித்துவிடலாம். இது எளிமையானதுதான்’’  என முன்னாள் பங்குத் தரகர் கூறினார்.

இங்கு கூறியபடி பார்த்தால், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் நிறுவனம், அதானி பங்குகளில் 99 சதவீதமும், வெஸ்பரா நிறுவனம் 2022ஆம் ஆண்டு ஜூனில் 93.9 % சதவீத அதானி என்டர்பிரைசஸ் பங்குகளில் முதலீடு செய்திருந்தது.

எலாரா நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பேச முன்வந்தார். பார்சிபேட்டரி நோட் என்ற வசதி மூலம் செபியில் தங்களை பதிவு செய்யாமல் முதலீடு செய்ய முடியும். ‘’இந்த வகையில் நிதி முதலீடு நடைபெறுவதில்லை. முதலீட்டு வாகனமாகவும் இயங்கவில்லை. பார்சிபேட்டரி முறைதான், நிதி போல காட்சியளிக்க காரணமாக உள்ளது. ’’

 ‘’முதலீட்டு நிதி என்பது தனித்தனியாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நீங்கள் எலாரா நிறுவனத்திற்கு சென்று பங்குகளில் பணம்போட விரும்பி, கேஒய்சி தகவல்களைக் கொடுத்தால் போதும். அவர்கள் கணக்கு தொடங்கிவிடுவார்கள். நீங்கள் அவர்களிடம் எனக்கு குறிப்பிட்ட நிறுவனத்தில் மில்லியன் பங்குகள் வேண்டும் அல்லது மில்லியன் டாலருக்கு பங்குகள் தேவை என்று சொன்னால் போதும். அதானி அல்லது வேறு நிறுவனங்களோ எது இருந்தாலும்  பங்குகளை வாங்கி வைத்துவிடுவார்கள். இந்த வேலையைத்தான் எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் நிறுவனம் செய்தது ’’ என்றார்.

இன்னொரு எலாரா நிறுவன முன்னாள் பணியாளர் இதையொத்த கருத்தைக் கூறினார்.

‘’இது உங்களுக்கு சாதகமானதுதான். ஒருவகையான வாகனம் போல. முதலீட்டு நிதி என்றால் ஏதோ பெரியளவு பணம் புழங்கும் என நினைக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி நடப்பதில்லை. இங்கு பங்குகளின் விலைதான் முக்கியம். பங்குகளின் விலையை உங்களுக்கு விருப்பம் போல உயர்த்தலாம். அதற்குப் பிறகு அந்த வேலையைக் கூட நீங்கள் செய்யவேண்டியதில்லை. பங்குச்சந்தையில் உள்ள பிறரே உங்களுக்காக அதை செய்வார்கள்.’’ என்றார்.

எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் நிறுவனம், அதானி குழுமத்துடையது என மேலே கருத்துகளைச் சொன்ன எலாரா முன்னாள் பணியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் சொன்ன கருத்து இதோ…

அதானி குழுமம்தான் எலாரா நிறுவனத்தை தொடங்கியிருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் ஒரு நிறுவனம் அதானி குழுமத்தில் எதற்கு முதலீடு செய்யவேண்டும்? அதிக  விலையில் இருக்கும் அதானி குழும பங்குகளில் யாரும் முதலீடு செய்வது கடினம். ஏனெனில் இப்படி விலை அதிகமாக உள்ள பங்குகளை யாரும் நம்ப மாட்டார்கள் ‘’ என்றார் எலாரா முன்னாள் பணியாளர் ஒருவர்.

‘’நீங்கள் வணிகத்தை நன்றாக கவனித்தாலே தெரியும். அதானி குழுமம், முழுக்க கடனாலேயே இயக்கப்படுகிறது.  மோடி அரசு அதிகாரத்தில் இல்லையெனில் அதானி குழுமமே கீழே சரிந்துவிடும். இப்படி நடந்தால் அது ரஷ்யாவில் தொண்ணூறுகளில் ஏற்பட்டது போன்ற பேரிடர் நிலையாக இருக்கும்’’ என்றார்.

 

 நன்றி 

இரா.முருகானந்தம்

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்