ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

 




ஷேக் சலாலுதீன்



இந்திய ஒற்றுமை பயணத்தில்...




ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்  சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,  வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்  சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று  நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.

 அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து வருகிறவர், ஓலா கார் ஓட்டுநரும் கூட. 2014ஆம் ஆண்டு ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் பேனர்களை கறிக்கடை மேலேயுள்ள ஒற்றை அறை அலுவலகத்தில் சலாலுதீன் வைத்திருக்கிறார்.

ஆன்லைன் வாகனசேவை நிறுவனங்கள் தங்களை எதிர்த்து போராடிய உரிமையைக் கேட்ட ஊழியர்களை வேலைக்கு வராமல் தடுத்தன. உதிரியாக நடந்த ஊழியர்களின் போராட்டங்களை ஒன்றாக்கிச் சேர்த்தவர் சலாலுதீன்தான். தற்போது 7.7 மில்லியனாக இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2009 -30 ஆண்டுகளில் 23.5 மில்லியனாக உயரும் என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு தெலங்கானா தற்காலிக தொழிலாளர்கள் மற்றும்  பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கத்தை தொடங்கினார். ஆப்களில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஃபெடரேஷன் ஒன்றை அகில இந்தியளவில் நடத்தி வருகிறார். இதில், ஸோமாடோ, அமேஸான், அர்பன் கம்பெனி, பிக் பாஸ்கெட், ஷாடோபாக்ஸ், ஸெப்டோ, இன்ஸ்டாவொர்க் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பணியாளர்கள்  இணைந்துள்ளனர்.

ஊழியர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படாதது, பணியில் இறந்துபோனால் கிடைக்கவேண்டிய இழப்பீடு வழங்கப்படாத முறையீடுகள், வாகன ஓட்டுநர்கள் கொல்லப்படுவது, கொள்ளையடிக்கப்படுவது, ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி துரத்தும் பைத்தியக்கார கூட்டத்தின் தாக்குதல் மற்றும கொள்ளை என பல்வேறு விஷயங்களை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார் சலாலுதீன். அண்மையில் பொருட்களை விநியோகம் செய்யப் போன 23 வயது இளைஞர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். ஸ்விக்கி நிறுவன பணியாளரான அவரை, வாடிக்கையாளரின் ஜெர்மன் ஷெப்பர்ட் இனநாய் கடிக்க பாய, உயிர் பயத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இப்படியான அநீதிகளை சலாலுதீன் சேவை நிறுவனங்களோடு கலந்து பேசி தீர்வுகளை ஏற்படுத்த முனைகிறார்.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பில் தற்காலிக தொழிலாளர்களுக்காக வாரியம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான ஆலோசனைக்காக சலாலுதீன் அழைக்கப்பட்டார். இவர், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் கூட  பங்கேற்றார்.

  ‘’ நான் செய்யும் போராட்டம் நீண்டது. மிகச்சில வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளேன். தற்காலிக பணியாளர்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது.’’ என்றார்.  ஆன்லைன் சேவை நிறுவனங்கள் பணியாளர்களுக்கு 24 மணிநேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். ஆப்பில் ஆபத்துதவி பட்டனை அமைப்பது, ஓட்டுநர்கள், வாடிக்கையாளர் சென்று சேரும் இடம் பற்றிய தகவல்களை அறியும் அனுமதி ஆகிய வெற்றிகளை சலாலுதீன் தனது செயல்பாடுகள், போராட்டங்கள் வழியே பெற்றிருக்கிறார்.

முஸ்லீம் டெலிவரி பாயிடம் உணவுப்பொருட்களை வாங்க மறுக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றி சலாலுதீன் எளிமையாக சொன்னார், ‘’உணவுப்பொருட்கள், அதன் தயாரிப்பு, விநியோகம் வரையில் பல்வேறு தொழிலாளர்கள் பங்கு பெறுகிறார்கள். ஆனால் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் பணியாளரின் மதம் பற்றி பேசுவது சரியானது அல்ல. நாம் மனித தன்மையை தொலைத்துவிட்டோம் என்றே அர்த்தமாகிறது ‘’ என்றார்.  அப்பாவின் செயல்களைப் பார்த்தா என்று தெரியவில்லை. சலாலுதீனின் பதினொரு வயது மகள் தனியா பேகம், போதைப்பொருட்களுக்கு எதிரான நோட்டீஸ்களை பலருக்கும் விநியோகித்து வருகிறாள்.

 

 

பிரியா ரமணி

இந்து ஆங்கிலம்

 

கருத்துகள்