காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்
தி வெட்டிங் அன்பிளானர் |
மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் |
தி வெட்டிங்
அன்பிளானர்
மெரினா சிறுவயதாக
இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின்
அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது.
காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின்
மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது
என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள்,
அதன் விளைவுகள்தான் கதை.
இரண்டு பெண்கள்
ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின்
குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர்
தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை
அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில்,
அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம்.
மெரினா, காதலே
வாழ்க்கையில் நுழைய விடாமல் காசு பார்க்க தொழிலாக கல்யாணத்தைப் பார்க்கிறார். எனவே,
கல்யாண விழாவை நடத்தி தரும் ஆல் யுவர்ஸ் என்ற நிறுவனத்தை தோழி ஐரினுடன் சேர்ந்து நடத்தி
வருகிறார். இந்த நிறுவனத்தில் மெரினாவின் குடிகார அம்மாவும் உண்டு. அவர் செய்யும் கோக்குமாக்கு
செயல்களும், அதை மெரினா எப்படி தீர்த்து வைத்து கம்பெனியைக் காப்பாற்றுகிறாள் என்பதுமான
காட்சிகள் படத்தை சுவாரசியமாக்குகிறது.
மெரினா, சர்ச்சில்
கல்யாணம் ஒன்றை நடத்தி வைக்கும் பணியைச் செய்கிறாள். ஒரு சமயம் அங்கு தனது குடிகார
அம்மா மூலம் நடந்த களேபரங்களை சடுதியில் தீர்க்கிறாள். அவளைப் பார்த்த கார்லோஸ் என்ற
இளைஞன், ‘’வாழ்ந்தா இந்த பொண்ணோடுதான் வாழணும்’’ என முடிவெடுக்கிறான். ஆனால் அவன் ஹலோ
சொன்னதுக்கு கூட முதலில் பதில் சொல்லாத மெரினா, அந்த விழா முடிவதற்குள் மனம் மாறி பேசிப்
பழகுகிறார்கள். அந்தப் பழக்கம் இருவரும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் அளவுக்கு செல்கிறது.
எப்படியிருந்துச்சு சூப்பர் என சொல்லிவிட்டு பிரிகிறார்கள்.
இரவுக் காவியத்தை
செய்வதற்கு முன்னரே கார்லோஸூக்கு அலெக்ஸியா
என்ற பெண் தோழி உண்டு. இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன்னாக ஒன்றாக சேர்ந்துதான் வாழ்கிறார்கள்.
சர்ச் சம்பவத்திற்குப் பிறகு அலெக்ஸியா சலித்து போனாளோ என்னவோ, கார்லோசுக்கு எப்போதும்
மெரினா நினைவாகவே இருக்கிறது. அலெக்ஸியாவிடம் மெரினா பற்றி சொல்ல நினைக்கிறான். ஆனால்
சொன்னால் அவள் தன்னை விலகிப் போய்விடுவாள் என பயம் இருக்கிறது. சொல்லாமல் பெண்தோழியோடு
வாழ்வது குற்றவுணர்ச்சியைத் தருகிறது.
விழாவில்
தன் பேண்டில் இருந்த ஆல் யுவர்ஸ் கார்டை எடுக்க மறந்துவிட, அதைப்பற்றி பேசி வேறுவழியின்றி
கார்லோஸ், அலெக்ஸியா காதல் தம்பதிகள் இருவரும் மெரினாவின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள்.
மெரினாவைப் பொறுத்தவரை கார்லோஸை விரும்பினாலும் அவளுக்கு அந்த உறவு மீது நம்பிக்கையின்மை
இருக்கிறது.. தனது அப்பா, அம்மா கதை போல ஏதாவது ஆகிவிடுமோ என பயம் இருக்கிறது. இதனால்
அவள் கார்லோஸ் போனில் அழைத்தால் கூட பயந்து வேலை இருக்கிறது என சொல்லி அழைப்பை துண்டிக்கிறாள்.
கார்லோஸ்
தனது காதலியுடன் வந்து, தன்னிடம் கல்யாணம்
செய்துவைக்க சொல்வது மெரினாவை ஆங்காரமான கோபத்தில் தள்ளுகிறது. இத்தனைக்கும் அலெக்ஸியா,
மெரினாவின் பள்ளித்தோழி. ஆனால், இளமையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட வன்மம், பகை மெரினாவின்
மனதில் குறையாமல் தளும்ப தளும்ப இருக்கிறது. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டது,
கார்லோஸ்தான்.
இப்போது மெரினா,
தனக்குப் பிடித்த ஆணான, சேர்ந்து நடனம் ஆடிய, ஓரிரவு ஒன்றாக இருந்த பிரியமான கார்லோஸை பள்ளித்தோழி அலெக்ஸியாவுக்கு
மணம் செய்து விழாவை நடத்துவாளா, தனது காதல் வாழ்க்கையைக் காப்பாற்ற என்ன செய்கிறாள்
என்பதே இறுதிப்பகுதி.
வெட்டிங்
அன்பிளானர் படத்தில் முக்கியமான பாத்திரமாக மனம் கவர்வது, மெரினா மட்டும்தான். பட்டப்பெயர்
சொல்லி அழைக்கும் சிரிக்கும் பள்ளிக்கால தோழியின் அப்பாவிடம் கஷ்டப்பட்டு சிரிப்பது,
ஹோட்டலில் கார்லோஸை மறைமுகமாக குத்திக்காட்டி பேசி காரமான உணவை சாப்பிட வைப்பது, ஒயினைத்
திறப்பதாக பாவ்லா செய்து அலெக்ஸியாவின் முன்பற்களை உடைப்பது, இசைக்குழு மேலாளர் முன்,
கார்லோஸைப் பார்த்து காதல் வயப்பட்ட நேரத்தை காதலோடு விவரிப்பது என மெரினா பாத்திரத்தில்
நடித்த நடிகை பெலன் குஸ்டா அசத்தியிருக்கிறார். இவருக்கு ஈடுகொடுத்து பலிவாங்கப்படும் பாத்திரத்தில்
கார்லோஸ்(அலெக்ஸ் கார்சியா) இருக்கிறார். காதலை சொல்லவும் முடியாமல் அதற்காக மெரினாவின் கோபத்தை எதிர்கொண்டு
தடுமாறும் இடங்களில் பின்னியெடுக்கிறார்.
எதிர்பாராத
காதல்
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக