தந்தையின் களங்கத்தைப் போக்க தன் வாழ்வையே தியாகம் செய்யும் ரா ஏஜெண்ட் - மிஷன் மஜ்னு - சித்தார்த், ராஷ்மிகா

 














மிஷன் மஜ்னு

இந்தி

சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா

இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய் காலகட்டத்தில் நடைபெறும் தேசப்பற்றுப் படம். கதை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அங்கு வாழும் தாரிக் என்ற டெய்லர், ஐந்து வேளை தொழும் இறைபக்தியாளர். அவர் வேலைக்காக தொழுகைக்கு வரும் மௌல்வியிடம் சிபாரிசு கேட்கிறார். சொன்னபடியே தன் திறமையைக் காட்டி டெய்லர் கடையில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறார். அப்போதுதான் நஸ் ரீன் என்ற பார்வைத்திறன்ற்ற பெண்ணைப் பார்க்கிறார். காதலில் விழுகிறார். முஸ்லீமாக இருந்தாலும் அதிக பணவரவு இல்லாத டெய்லர் என்பதால் காதலுக்கு நஸ் ரீனின் அப்பா சம்மதிக்கவில்லை. ஆனாலும் அவரை வேலைக்கு வைத்துள்ள முதலாளியும், நஸ் ரீனின் அப்பாவும் நெருங்கிய மாமா, மச்சான் உறவு என்பதால் பொருமலுடன் சம்மதிக்கிறார் அபு. இந்த நிலையில் தாரிக்கிற்கு இந்தியாவில் இருந்து வேலை ஒன்று வருகிறது.

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டம் ஒன்றை செய்யவிருப்பதாகவும். அதை தடுத்து நிறுத்த  தேவையான ஆதாரங்களைக் கொண்டு வர சொல்லுகிறார்கள். இந்த வேலையை ரா ஏஜெண்டாக தாரிக் செய்தாரா இல்லையா என்பதே கதை.

படத்தில் உருப்படியான விஷயம், தாரிக் – நஸ் ரீன் இடையே  உருவாகும் காதல், அதைச்சார்ந்த காட்சிகள். தாரிக்கைப் பொறுத்தவரை அவரது முன்னாள், இந்நாள் காட்சிகள் மாறி மாறி காட்டப்படுகின்றன. அவரது இறந்த காலத்தில் அவரது அப்பா துரோகியாக தூற்றப்படுகிறார். அப்படியொரு குற்ற வரலாறு இருப்பவருக்கு எப்படி அரசு வேலையாக ரா அதிகாரி வேலை கிடைக்கிறது? தெரியவில்லை.

சித்தார்த்திற்கு வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே நல்ல விஷயம் நஸ் ரீன்தான். அவளுடைய அரவணைப்பும், அன்பும்  சற்று நிதானமான மனிதனாக்குகிறது. மற்றவகைகளில் அவனை இறந்த காலத்தில் அப்பா இந்தியாவிற்கு செய்த துரோகத்திற்காக வசை பாடிக்கொண்டே இருக்கிறார் ரா அதிகாரி. பாக்.கில் அவனது மாமனார், அந்தஸ்தும் தகுதியும் இல்லாதவன் என தூற்றுகிறார். உச்சமாக வீட்டில் சாப்பிடும்போதுகூட  அடுத்தவங்க வீட்டில் குறைவாக சாப்பிடணும் என அவமானப்படுத்துகிறார்.

தாரிக்காக, கடந்த கால வாழ்க்கையில் அமன் சிங்காக சித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார். நைச்சியமாக பேசி பிறரிடம் தகவல்களை பெறுபவன், தந்தையின் பெயரால் அவமானங்களை சந்திக்கும்போது மட்டும் மனதளவில் நொறுங்கிப் போகிறான். அவனது இறந்த கால வாழ்க்கையை விவரிக்கும்போது பரிதாபமே மேலெழுகிறது. ஏறத்தாழ ரா அமைப்பே அவனை மோசமான முடிவுக்கு மெல்ல தள்ளுகிறார்கள். அதை அவன் செய்து ஆகவேண்டும் என வெவ்வேறு மென்மையான வார்த்தைகளில் கூறுகிறார்கள்.  தேசமா, அன்பு மனைவியா என தாரிக் போராடி, கர்ப்பிணி மனைவியை சற்று தூரமாக தள்ளி வைத்து வாழ்வதும், அதை அவள் நுட்பமாக உணர்ந்து வருத்தம் கொள்வதும் நல்ல காட்சி. பார்வைத்திறன் அற்ற மாற்றுத் திறனாளியாக ராஷ்மிகா நன்றாக நடித்திருக்கிறார். அஸ்லாமாக ஷாரிப் ஹஸ்மி, ராமன் சிங்காக குமுத் மிஸ்ரா நன்றாக நடித்திருக்கிறார்கள். 

தாரிக் இறுதிக்காட்சியில் எடுக்கும் தியாக முடிவுக்கு நம்மை இயக்குநர் தயார்படுத்துகிறார் என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் தங்கள் நாட்டுப்பற்றை உயிரைத் தியாகம் செய்து நிரூபிக்க வேண்டும் என்ற கருப்பு வெள்ளை காலத்திற்கு படம் கூட்டிச்செல்கிறது. இந்தியா ஒருவரை தேசத்துரோகி என்று சொல்லி விரட்டுகிறது. அவன் பெயர் மாறி மதம் மாறி வாழும் நாடு ஆதரிக்கிறது. உறவுகள் உருவாகிறது. குறிப்பாக அவனது மனைவி அகதியாக வாழும் நாட்டில்தான் கிடைக்கிறாள். அவனால் எப்படி அந்த நாட்டை வெறுக்க முடியும்? நம்மை ஆதரித்த நாடுதானே நம் நாடு. அரசியல் சமநிலை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் வாழும் நாட்டின் வளர்ச்சியை ஒருவன் தடுக்கிறான் என்பது ஏற்க முடியாத காட்சி.

படத்தில் சோனுநிகம் பாடும் தேசபக்தி பாடல் உள்ளது. ஆழத்தில் சோகம் ததும்பும் பாடலை ஆடியோவாக  கேட்பதே நல்லது. இந்த பாடலை இந்தியா எனும் தாய் என்ற அர்த்தத்தில் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால் தாரிக் என்ற பாத்திரத்தின் புறக்கணிக்கப்பட்ட, தாய் நாடு கைவிட்ட ஆன்மாவாக உணர்ந்து பார்த்தால் மனம் மெல்ல வேதனை உணர்வுகளால் நிறைகிறது.

வேட்டையாடப்படும் மஜ்னுவின் வாழ்க்கை

கோமாளிமேடை டீம்


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்