கௌதம் அதானி செய்த மோசடிகள் - ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள்

 












 

கௌதம் அதானி, சமையல் பொருட்கள், மின்சாரம், கட்டுமானம், என ஏராளமான தொழில்களை நடத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 2013ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார்.

தொழிலதிபர், அவர் செய்யும் தொழில்கள், ஈட்டும் வருமானம் பற்றி சாமானிய மக்கள் ஆர்வம் கொள்ளவோ, பெருமைப்படவோ,  கவலைப்படவோ ஏதுமில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் தொகையைப் பெற்றுள்ளளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின்(எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி) நிதி முதலீட்டையும் தனது அதானி குழும பங்குகள் மூலம் ஈர்த்துள்ளது. அதானி நிறுவனம் கடன் தொகையை கட்டாதபோது, அல்லது அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தால் மக்களே அதன் விளைவுகளை ஏற்று சிலுவையை சுமக்க நேரிடும். அதானி குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை 81,234.70 கோடி.

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது பங்குகளின் விலையை உயர்த்திக் காண்பிப்பது, நிதி மோசடி ஆகியவற்றின் மூலமே அதிக லாபம் அடைந்துள்ளது. இதுபற்றி இரண்டு ஆண்டுகளாக  ஆய்வு செய்த ஹிண்டன்பர்க் அமைப்பு, ஆய்வு உண்மைகளை வெளியிட்டுள்ளது. அதை அறிவோம் வாருங்கள்.

 

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை….(ஜன.24,2023)

கௌதம் அதானி (அதானி குழுமம்)

உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக  வளர்ந்த மனிதரின் மோசடிக்கதை

அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, 120 பில்லியன் டாலர்களாக உள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 8  நிறுவனப் பங்குகள் விலை அதீதமாக கூடியது.  இதன்  காரணமாக  மூன்றே ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது அதானி குழுமம். இந்த நிறுவனங்களின் வளர்ச்சி சதவீத அளவு மட்டுமே 819% என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை. 

ஆயிரக்கணக்கான அதானி குழும நிறுவன ஆவணங்கள், பிற நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களை சென்று பார்வையிடுதல், நிறுவனத்தில் பங்காற்றிய முன்னாள் பணியாளர்களைச் சந்தித்து உரையாடுவது என ஹிண்டன்பர்க் அமைப்பு, அதானி குழுமம் பற்றிய ஆராய்ச்சியை களப்பூர்வமாகவும் செய்தது.

 ஹிண்டென்பர்க் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களை நீங்கள் புறக்கணிக்கக்கூட நினைக்கலாம். தவறில்லை. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகளைப் பார்த்தாலே, 85 சதவீத அடிப்படை ஆதாரமே இல்லாமல், அதன் பங்கு விலைகள் அதிக விலைக்கு மதிப்பிடப்படுவதை எவரும் புரிந்துகொள்ளலாம்.

அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள், இப்போதும் நிதி நெருக்கடியில்தான் உள்ளன. கரன்ட் ரேஷியோ எனும் அளவில் நிதி பாதிப்பு 1 சதவீதமாக ஆபத்தான அளவில் உள்ளன. குழும நிறுவனங்களின் பங்கு விலையை உயர்த்திக் காட்டியே அதானி குழுமம் பொதுத்துறை வங்கிகளில் அதிகளவிலான கடன்களைப் பெற்று வருகிறது.

 அதானி குழுமத்தின் முக்கியப் பதவிகளில் 22  நிறுவனத் தலைவர்கள் உள்ளனர். இதில் எட்டுப்பேர் அதானியின் குடும்ப உறவினர்களாக இருப்பது தற்செயலானது அல்ல. இவர்கள் குழுமத்தின் நிர்வாகம், நிதி சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் பதவிகளை வகிக்கிறார்கள். அதானி குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர்,  அதானி  நிறுவன கலாசாரத்தை ‘குடும்ப வணிகம்’ என்று குறிப்பிடுகிறார்.

 இந்திய அரசு, அதானி குழுமத்தின் மீது நான்கு முறை நிதிமோசடி விசாரணைகளை நடத்தியுள்ளது. பணமோசடி, மக்களின் பணத்தை கொள்ளை மற்றும் ஊழல் செய்வது என அதானி குழுமம் செய்த மொத்த மோசடிகளின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாகும்.

அதானி குடும்ப உறவினர்கள் மீது,  மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், கரீபியத் தீவுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டுகளும் உண்டு. போலி நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி / இறக்குமதி வணிகம், போலியாக லாபக்கணக்கு காட்டுவது, சட்டவிரோத பணத்தை பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் வருமானமாக மாற்றிக் காட்டுவது ஆகிய செயல்களிலும் அதானி குழுமத்தின்  நிறுவனத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 கௌதம் அதானியின் இளைய சகோதரர், ராஜேஷ் அதானி. இவர் மீது, வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் (Directorate of Revenue Intelligence DRI) நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. ராஜேஷ் அதானி, 2004-2005ஆம் ஆண்டில் வைர வணிகத்தின் ஏற்றுமதி / இறக்குமதி பற்றிய விவகாரத்தில் நிதி மோசடி செய்தார்.  வெளிநாட்டு நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் வணிக லாபத்தை போலியாக உயர்த்தி காட்டியதற்காக இருமுறை கைது செய்யப்பட்ட வரலாறு உடையவர். பின்னாளில் அதானி குழுமத்தில் நிர்வாகத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

 கௌதம் அதானியின் மைத்துனர், சமீர் வோரா. இவர் மீது,  வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம், வைர வணிகத்தில் தவறான தகவல்களை கொடுத்து ஆணையத்தை ஏமாற்றியதாக குற்றம்சாட்டியது. பின்னாளில் இவருக்கு, ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி நிறுவனத்தில் செயல் தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதானியின் மூத்த சகோதரர், வினோத் அதானி அடிக்கடி பண மோசடி குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர்தான். இவர், வெளிநாடுகளில் உள்ள அதானி குழும நிறுவனங்களை நிர்வகிக்கிறார். 

ஹிண்டன்பர்க் அமைப்பு, மொரிஷியஷிலுள்ள ஒட்டுமொத்த நிறுவனங்களின் பதிவேடுகளைப் பெற்று ஆராய்ந்தது. இதில் ஏராளமான போலி நிறுவனங்களோடு வினோத் அதானிக்கு தொடர்பிருந்தது கண்டறியப்பட்டது.

 மொரிஷியஸ் தீவில் 38 போலி நிறுவனங்களை தொடங்கிய வினோத் அதானி, அவற்றை நிர்வாகம் செய்து வருகிறார் அல்லது அவருக்கு நெருங்கிய நபர்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள். சைப்ரஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல்வேறு கரீபிய தீவுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார், வினோத் அதானி.

வினோத் அதானி, நடத்தி வரும் நிறுவனங்களுக்கு முறையான செயல்பாடு, ஊழியர்களின் எண்ணிக்கை, முகவரி, ஏன் தொடர்பு எண்கள் கூட கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சில நிறுவனங்களுக்கு வலைத்தளம் கூட கிடையாது. இங்கிருந்து பல கோடி மதிப்புள்ள டாலர்கள்,  இந்தியாவில் செயல்படும் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இப்படி அனுப்பப்படும் பணம் எப்படி கிடைத்தது என்பதற்கு முறையான எந்த  வணிக பரிவர்த்தனை தகவல்களும் கிடையாது என்பதே நீங்கள் அறிய வேண்டியது.  

வினோத் அதானி நடத்தும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு இணையத்தில் வலைத்தளங்கள் உள்ளன. பொதுவான நிறுவனம் சார்ந்த புகைப்படங்கள்,  ஒரு நாடு பிற நாட்டிற்கு வழங்கும் வெளிநாட்டு சேவை (Consumption abroad),  நிறுவனம் வழங்கும் வணிக சேவை  (Commercial Presence)  என சம்பந்தமே இல்லாத சேவைகளைப் பற்றி வலைத்தளத்தில் கூறப்பட்டிருந்தது.

வினோத் அதானியின் போலி நிறுவனங்கள், நிறைய மோசடி வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பங்குகளை முறைகேடாக மாற்றுவது, முதலீட்டு நிதியை அதானி குழுமத்தின் தனியார் நிறுவனங்களிடமிருந்து, பொது நிறுவனங்களுக்கு  மடைமாற்றம் செய்வது, குறிப்பிட்ட நிறுவனத்தின் நிதிநலனைப் பாதுகாப்பது, கடன் சதவீதத்தை குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்துவது ஆகியவற்றைச் செய்ய போலி நிறுவனங்கள் உதவுகின்றன.

பொது நிறுவனமாக அடையாளப்படுத்தப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அனைத்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் வெளியிடவேண்டும் என்பது, இந்திய பங்குச்சந்தை சட்ட விதி.

ஒரு நிறுவனத்தின் பங்குகளில் குறைந்தபட்சம் 25 சதவீத அளவை முதலீட்டாளர்கள் அல்லாதவர்கள் வைத்திருக்கவேண்டும். இந்திய அரசின் இந்த விதி மூலம் மூலம் நிறுவன பங்குகளை மடைமாற்றும் முயற்சி, நிறுவன பங்குகளை அதிக விலையேற்றி விற்று தனிநபர் லாபமடையும் செயல்பாடுகளைத் தடுக்கலாம்.

அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு சதவீதம் மிக அதிகம். ஆனால் அந்த நிறுவனங்கள் தாம் பெற்ற முதலீடு பற்றிய தகவல்களை அரசுக்குத் தெரிவிக்கவில்லை. எனவே, அவை  பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கைப்படி, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதிக்கும், வெளிநாட்டில் இயங்கும்  போலி நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது அறியப்பட்டுள்ளது.

இந்திய அரசின் விதிப்படி அதானி குழுமம், முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைத் தரவில்லை. இதனால், செபி அமைப்பு, அதானி நிறுவனங்களை பங்குச்சந்தை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது.

 மொரிஷியஷிலுள்ள நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் வழியாகவும், நிறுவனத் தலைவர்களுக்கான தனித்த உரிமை கொண்ட பங்குகள் வழியாகவும், அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குள் பெரும் முதலீட்டு நிதி வந்து சேர்கிறது.

 தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு, செபியுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள நிதி பற்றி விசாரிக்க இந்திய அரசைக் கோரியது. இந்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு ஊடகங்களும்தான் முதலில் எழுப்பினர். பிறகு,  ஒன்றரை ஆண்டு காலம், இதுபற்றிய விசாரணை செய்ய மத்திய அரசை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் நடைபெற்றன.

எலாரா என்ற வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தில் உள்ள  3 பில்லியன் டாலர்கள் என்ற நிதித் தொகையை  ஒரே பங்காக மாற்றி, அதானி நிறுவனம் உரிமை கொண்டுள்ளது. இதை அதானி நிறுவனம் குறிப்பிட்ட லாப நோக்கத்தோடு உருவாக்கி இயக்கி வருகிறது.

 முன்னர், எலாரா வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தின் வணிக பரிவர்த்தனை பற்றிய மின்னஞ்சல்கள் வெளியே கசிந்தன. அதில் கிடைத்த தகவல்படி, எலாரா நிறுவன இயக்குநருக்கும்,  இந்திய பங்குச்சந்தையில் இயங்கும் அதிகம் வெளித்தெரியாத கேட்டன் பரேக் என்ற மோசடி  நபருக்கும் தொடர்புள்ளது உறுதியானது. கேட்டன் பரேக்கை காவல்துறை கைது செய்ய முயன்றது, தப்பியோடிய கேட்டன்,  போலியானவர் என்று தெரிந்தும் கூட எலாரா நிறுவன இயக்குநர் அவரோடு பங்குகள் தொடர்பாக வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளார் என ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

 வெளிநாட்டில் இயங்கும் மான்டேரோஸா முதலீட்டு நிறுவனம், 5 தனித்தனி முதலீட்டு நிதியாக 360 பில்லியன் டாலர்களை உருவாக்கி இயக்கி வருகிறது.  இந்த பணம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இத்தகவல் லீகல் என்டிட்டி ஐடென்டிஃபையர் டேட்டா, இந்தியன் எக்சேஞ்ச் டேட்டா ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.

மான்டேரோஸா நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், ஜடின் மேத்தா. இவர், ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்கு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.  ஜடின் மேத்தா, அமெரிக்காவில் வைர வணிகம் செய்து கொண்டிருந்தவர்,  அந்த நாட்டிலிருந்து ஒரு பில்லியன் டாலர்களை கொள்ளையடித்துக்கொண்டு இந்தியாவுக்கு தப்பி வந்த வரலாறு கொண்டவர். இப்படி குற்ற வரலாறு கொண்டவரின்  மகனுக்கு, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் அதானி தனது  மகளான கிருபாவைத்  திருமணம் செய்துகொடுத்துள்ளார்.  

மான்டேரோஸா முதலீட்டு நிறுவனத்தில், அதானி குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்தது. பிறகு இத்தொகை அதானி பவர், அதானி என்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இப்படி வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து பெரும் முதலீட்டுத்தொகை, அதானி குழுமத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த நியூ லியாயினா முதலீட்டு நிறுவனம், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தில், 420 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வாங்கியது. இது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 95 சதவீதமாகும். ஆனால் இது பற்றிய ஆவணங்களில் லியாயினா முதலீட்டு நிறுவனம், பிற அதானி குழும நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதாக பதிவாகியுள்ளது.  

ஏமிகார்ப் என்ற தனியார் நிறுவனம், நியூ லியாயினா என்ற முதலீட்டு நிறுவனத்தை இயக்குகிறது. ஏமிகார்ப் நிறுவனம், அதானி நிறுவனத்தின்  நிதி உதவியைப் பெற்று இயங்கும் துணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் வலையமைப்பை மேம்படுத்தி பராமரிக்கிறது.

ஏமிகார்ப் நிறுவனம், ஏழு அதானி குழும முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. 17 வெளிநாட்டு போலி முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது. இந்த நிறுவனங்கள் வினோத் அதானிக்கு தொடர்புடையவை. மொரிஷியஸிலுள்ள 3 நிறுவனங்கள், அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கும் வெளிநாட்டு பங்குதாரர்களாக செயல்பட்டுள்ளன.

ஏமிகார்ப் நிறுவனத்திற்கு இன்னொரு முகமும் உண்டு. அமெரிக்காவிலிருந்து, மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்  என்று சொல்லி மலேசிய நாட்டு மக்களிடமிருந்து 4.5 பில்லியன் டாலர்கள்  பணத்தைப் பெற்று ஏமாற்றிய மோசடித் திட்டம் நடைபெற்றது. அதில்,  ஏமிகார்ப் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடிக்கு ஒன்எம்டிபி மோசடி(1MDB International fraud scandal) என்று பெயர். இதுபற்றி பில்லியன் டாலர் வேல் (Billion dollar whale) என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

பங்குச் சந்தையில் ஒரு தொழில் நிறுவனத்திடமிருந்து, மற்றொரு நிறுவனத்திற்குச் செல்லும் முதலீட்டு பணப்பரிமாற்றத்தை ‘டெலிவரி வால்யூம்’ என்று நிதி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பணப்பரிமாற்ற தகவல்களை சேகரித்து அறிக்கைகளைத் தயாரித்து, பங்குச்சந்தை நிலவரத்தை அறியலாம்.

அதானி குழும நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் முதலீட்டு பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு 30 – 47 சதவீதம் என ஒழுங்கற்ற அளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஒழுங்கற்ற சீர்கேடான இயல்பில் நிறுவனத்தின் முதலீடு நடைபெறுவது,  ஒட்டுமொத்த பங்குச்சந்தை வணிகத்தை அழிக்கும் அல்லது நிறுவனத்தின் பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தும். இதற்கு சந்தேகம் ஏற்படுத்தும் அளவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் முக்கியமான காரணமாகும்.

அதானி குழும பங்குகளில், முறைகேடு செய்துள்ள எழுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் பலரையும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தண்டித்துள்ளது. இதில் அதானி குழுமத்தின் பங்கு விலையை முறைகேடான வகையில் உயர்த்திய முதலீட்டாளர்கள் பலரும் அடங்குவர்.

2007ஆம் ஆண்டு ஒழுங்குமுறை அமைப்பான செபி,  அதானி குழுமத்திற்கு எச்சரிக்கை ஒன்றை செய்தது. பங்குச்சந்தையில், பங்கு விலை முறைகேட்டில் ஈடுபட்டவரான கேட்டன் பரேக்குடன் அதானி நிறுவனங்கள் தொடர்பு வைத்திருந்தால், அவருக்கு உதவினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றது செபி. உண்மையில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், பங்குச்சந்தையில் செயல்பட முடியாதபடி அதானி குழும நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால்,  மத்திய அரசு தலையிட்டதால், சிறு அபராத தொகையை மட்டும் அதானி குழுமம் கட்டும்படி நிலைமை மாறியது. மத்திய அரசின் ஆதரவு, அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.  

2007ஆம் ஆண்டு 14 அதானி குழும  நிறுவனங்கள் தம் பங்குகளை கேட்டன் பரேக்கின் நிறுவனங்களுக்கு மாற்றின. அதானி குழும பங்குகள், கேட்டன் பரேக் மூலம் பங்கு முறைகேட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதே உண்மை. ஆனால், நிறுவனப் பங்குகளை இப்படி மாற்றியது சட்டப்பூர்வமான நிதி முதலீடு போன்றதே என அதானி குழுமம், செபி அமைப்பிடம்  வாதிட்டது.

ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு செயல்பட தடை விதிக்கப்பட்ட தனிநபர்களைச் சந்தித்தது. இவர்கள் கூறியதன் அடிப்படையில், கேட்டன் பரேக்கிடம் வணிக பரிவர்த்தனை செய்தவர்கள், அவரிடம் இன்றும் விசுவாசத்தோடு இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள் என தெரிய வந்தது.

வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட போலி நிறுவனங்களில் உள்ள நிதியை, இந்தியாவில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு கொண்டு வருகிறார்கள். மீதியுள்ள நிதியை பிற அதானி குழும நிறுவனங்களுக்கு மாற்றுகிறார்கள். இதன் மூலம் ஒரு நிறுவனத்தை வெளிப்பார்வைக்கு பணப்புழக்கம் கொண்டதாக, வருமானம் ஈட்டக்கூடியதாக காட்டலாம். இப்படி நிதியை செலவழிக்காதபோது, முதலீட்டுத் தேவையுள்ள பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்திய அரசு பங்குச்சந்தை சட்டப்படி, முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஆனால் இந்த விதியை அதானி குழுமம் தொடர்ச்சியாக மீறி வருகிறது. இதற்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.

மொரிஷியஸில் வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள முதலீட்டு நிறுவனம், அதானி குழுமத்தின் நிறுவனத்திற்கு 11.71 பில்லியன் டாலர்களை முதலீட்டு நிதியாக வழங்கியது. முதலீட்டு நிறுவனம் என்ன செயல்பாடுகளை செய்து பெற்ற நிதியை முதலீடாக வழங்குகிறது என்ற தகவலே கிடைக்கவில்லை முதலீட்டு நிதியை பெற்ற நிறுவனம், 9.84 பில்லியன் டாலர்களை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கடனாக வழங்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், வினோத் அதானியின் நிர்வாகத்தில் எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட் என்ற நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனம் செய்யும் தொழில், பணியாற்றும் ஊழியர்கள்,  வலைத்தளம் என எந்த தகவல்களும் நமக்குக் கிடையாது. அபார்ட்மென்ட் ஒன்றில் அமைந்துள்ளதாக காட்டப்படும் நிறுவனம்,  அதானி பவர் துணை  நிறுவனம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இயங்கும் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி,  ஒரு தொழில் நிறுவனம் லாபத்தில் இயங்குவதைப் போல காட்டும் பணியையும் அதானி குழுமம் செய்து வந்தது. இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றிலிருந்து நிறைய சொத்துகள்,  வினோத் அதானியின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வர்த்தக நடவடிக்கை எதற்காக செய்யப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

தனியார் நிறுவனத்தில் உள்ள சொத்துகள், பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனத்திற்கு மாற்றப்படும் வர்த்தக செயல்பாடு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டால் அது பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்த வருமானம் பற்றி எதிர்மறையான கருத்தை பிறருக்கு தரும் என்பதால் கவனமாக அதை தவிர்த்திருக்கிறார்கள்.

அதானி குழுமத்தில் கணக்கு தணிக்கை, நிதிச்செயல்பாடு என்பது எப்போதும் விதிகளை மீறியதாக பல்வேறு குளறுபடிகளைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. இதற்கு உதாரணமாக, இந்த குழுமத்தில் உள்ள நிதி மேலாண்மை இயக்குநர் பதவிக்கு எட்டு ஆண்டுகளில் இதுவரை ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளதைக் சுட்டிக் காட்டலாம்.

அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு கணக்கு தணிக்கை செய்ய ஷா தந்தாரியா என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய செயல்பாடுகளை அறியும் வகையில்  வலைத்தளம் ஏதும் இல்லை. ஆய்வு செய்ததில், ஷா தந்தாரியா நிறுவனத்தில் நான்கு பங்குதாரர்கள், பதினொரு ஊழியர்கள் உள்ளனர். நிறுவனத்தின் ஆவணங்களின் படி, மாதம்தோறும் அலுவலக வாடகையாக 32 ஆயிரம் ரூபாயை செலுத்தி வருகிறது. ஷா தந்தாரியா கணக்கு தணிக்கை செய்த தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டுத் தொகை 640 மில்லியன் டாலர்களாக உள்ளது.  

அதானி குழுமத்தின் கணக்கு விவரங்களை ஷா தந்தாரியா நிறுவனம் மேற்பார்வை பார்த்து அனுமதி கொடுக்க முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், அதானி குழும பரிவர்த்தனைகள் அந்தளவு குழப்பமானவை.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மட்டுமே 150 துணை நிறுவனங்கள் உள்ளன. இதெல்லாம் கடந்து ஏராளமான கூட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உதாரணமாக அதானியின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்கள், மொத்தமாக 578 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளன. 2022ஆம் ஆண்டில் மேற்சொன்ன நிறுவனங்களில் மட்டுமே 6,025 வணிகப் பரிவர்த்தனைகள் (பிஎஸ்இ) நடந்துள்ளன

அதானி கேஸ், அதானி என்டர் பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஆண்டு கணக்குத் தணிக்கையை ஷா தந்தாரியா நிறுவனம் பொறுப்பேற்று செய்கிறது. ஆனால் இதற்கென இவர்கள் நியமிக்கும் கணக்கு தணிக்கையாளர்களுக்கு வயது 23 இலிருந்து 24 வயதுக்குள்தான் இருக்கும். இவர்கள்தான் அதானி கேஸ், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை ஆராய்ந்து கையொப்பமிடுகிறார்கள்.

வணிகப்பள்ளியில் படித்துவிட்டு அப்போதுதான் வெளியே வரும் அனுபவமில்லாத இளைஞர்கள், நாட்டின் அதிகாரமிக்க மனிதர்களால் நடத்தப்படும் பெரு நிறுவனங்களின் கணக்குகளை எப்படி ஆய்வு செய்து உடனே ஒப்புதல் அளிக்க  முடிகிறது?

‘’விமர்சனங்களை திறந்த மனதோடு எதிர்கொள்கிறேன். அனைத்து விமர்சனங்களும் என்னை நானே சுயமாக மேம்படுத்திக்கொள்ள உதவும் வாய்ப்பு’’ என்று அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். ஆனால் தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், விமர்சகர்களைக் கண்காணித்து அவர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பி வருகிறார், தனக்கு நெருக்கமான அரசு அதிகாரம் மூலம் எதிரிகளை நசுக்குவதோடு, தன்னை கேள்வி கேட்கும் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார் கௌதம் அதானி.

 

இந்தியாவில் பிரமாண்டமாக இயங்கி வரும் அதானி குழுமம், பகிரங்கமான முறையில் மோசடிகளை செய்து வளர்ந்து வருகிறது என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு நம்புகிறது. நிறுவன முதலீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், குடிமக்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் அதானி குழும மோசடி பற்றி தெரிந்தாலும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதற்கு, அதானியின் மோசடியைப் பற்றிக் கேள்வி கேட்டால் கடுமையான முறையில் பழிவாங்கப்படுவோம் என்ற பயம்தான் காரணம்.

 

ஆக்கத்தலைமை 

இரா.முருகானந்தம்

தமிழ் மொழிபெயர்ப்பும் தொகுப்பும்

அன்பரசு சண்முகம் 


 

 

 

 

 


கருத்துகள்