உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்
சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன்
சூல்
சோ. தர்மன்
அடையாளம் பதிப்பகம்
நாவலாசிரியர்
சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே
சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற
ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை
500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார்.
நாவலில் நாம்
ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக
உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக
இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள்.
நாவலில் வரும்
குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம்
நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு
பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான்.
நீர்ப்பாய்ச்சி,
ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன்,
சுச்சி நாயக்கர் என ஏராளமான பாத்திரங்கள் நாவலில் சுவாரசியமான வாழ்க்கையை க் கொண்டுள்ளனர்.
நாவலை தொடக்கத்தில்
படிக்கும்போது, குறிப்பிட்ட நபர்களின் கதையாக தோன்றாது. ஏனெனில் நாவல் உருளக்குடி என்ற
ஊரையே முழுமையாக ஆவணப்படுத்துகிறது. அங்குள்ள பல்வேறு சாதிகள், கட்டுப்பாடுகள், நாட்டுப்புற
தெய்வங்கள், நம்பிக்கைகள், பாலியல் நகைச்சுவை என நிதானமாக நகர்கிறது.
இப்படி கதை
சொல்லும்போக்கு காரணமாக நூலை வாசிப்பவர்கள் உருளக்குடி ஊரின் பிரஜையாக மாறி அவர்களின்
வாழ்க்கையைப் பார்ப்பது போல காட்சி தோன்றுகிறது.
விவசாயம்
நன்றாக நடைபெற முன்பு குடிமராமத்து வேலைகள் நடைபெற்று வந்தன. இதன்மூலம் கண்மாயை சுத்தம்
செய்து வருவார்கள். சுத்தம் செய்த மண்ணைப்
பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள். அதை பராமரிக்க ஊரே நீர்ப்பாய்ச்சியை நியமித்து சம்பளம் கொடுக்கும்
ஏற்பாடு இருந்து வந்துள்ள தகவல், அவர்களின் கடமை, அந்த வேலையை எப்படி செய்கிறார்கள்
என்பதை படிக்க ஆச்சரியமாக இருந்தது.
ஆசிரியர்
விவசாயத்தின்மீது பேரார்வம் கொண்டவர். நீரால் விளைநிலங்கள் நனைந்து தானியங்களால் சூல்
கொண்டு மக்களுக்கு தானியங்களை பிள்ளைகளாக கொடுக்கவேண்டும் என நினைக்கிறார். அதெல்லாம்
சரிதான். ஆனால் நாவலில் ஓரிடம் வருகிறது. அதாவது
நாடார் ஒருவர் வியாபாரம் செய்தால் அவர் கீழ்சாதி என யாரும் பொருட்களை வாங்குவதில்லை.
அதே பொருட்களை பிள்ளைமார் விற்றால் வாங்குவதாக கூறப்படுகிறது. … இதையெல்லாம் இயல்பு.
மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற வகையில் நாவல் ஆசிரியர் நாவலெங்கும் கூறிக்கொண்டே செல்கிறார்.
கடவுளை ஒருவர்
கும்பிடவில்லை என்றால் அவர் மக்களுக்கு விரோதமாகத்தான் இருப்பார் என்ற கருத்தை, சூல்
நாவல் அதை வாசிப்பவர்கள் மனதில் விதைக்கிறது.
உண்மையில்,
அந்த இடத்தில் கிராமத் தலைவர் என்பவர் மக்களுக்கு நன்மை செய்பவர்கள் அதாவது, நல்ல குணம்
கொண்டவரா இல்லையா, நல்ல செயல்திறன் கொண்டவரை தலைவராக வாக்களித்து தேர்ந்தெடுக்கவேண்டும்
என்பதைத்தானே பேச வேண்டும். ஆனால் அதை நாவலாசிரியர்
பேச மறந்துவிடுகிறார். மக்களே வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்தான் அதுவும் உருளக்குடிகாரரே
தவறு செய்கிறார் என மக்களுக்குத் தோன்றினால், அதை அவர்கள் தட்டிக் கேட்பதில்லை. இப்போது
தவறு எங்கே இருக்கிறது?
சீமை கருவேலம்,
ஜிலேபி கெண்டை மீன்களை அரசு கிராம மக்களுக்கு கொடுத்து வளர்க்க சொல்கிறது. இதில், கடவுளைக்
கும்பிடாதவன் கெட்டதுதான் யோசிப்பான். அதைத்தான் செய்வான் என்று கூற என்ன இருக்கிறது?
அதாவது நாவலாசிரியர் கதையில் கூற விரும்புவது ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களை அனுசரித்து
செல்லும் குறுநில மன்னர் இருக்கும்போது சாதி தீண்டாமை இருக்கும்போது நாடு நன்றாக இருந்தது
என்று கூறுகிறாரா என்ன?
சுதந்திரமடைவதற்கு
முன்னர் நிலை வேறு. ஆனால் அதற்கு பிறகு நிலை வேறு. விவசாயம்தான் நாட்டிற்கான ஒரே தொழில்
என்பதிலிருந்து மாறி, உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவில் நாடு பல்வேறு பொருட்களை உற்பத்தி
செய்து வரும் நெருக்கடி. இந்த நிலையில் யாரும் விவசாயத்தை செய்துகொண்டு அதை மட்டுமே
நம்பிக்கொண்டு இருக்க முடியாது அல்லவா?
முழு நாடும்
தொழில்மயமாகிறது. இதை சோ.தர்மன் பேரழிவு என்பதாக குப்பாண்டி சாமி பாத்திரம் மூலம் உபதேசிக்கிறார்.
ஏனெனில் குப்பாண்டி, பழனியாண்டவர் மூலம் அனுகிரகம் பெற்று பிழைத்தவர். ஒரு துறவிதான்
அவரைக் காப்பாற்றி வம்சப் பெயரை மாற்றியமைக்கிறார். அதுவரை கதை நன்றாகத்தான் இருக்கிறது. அவர் கோவிந்தசாமியை
சபித்து அதன்படி அவர் உயிரை விட்டுவிட குப்பாண்டி சாமியாகிவிடும்போதுதான், ஊருக்கு
மட்டுமல்ல நமக்கும் ஐயையோ என்று ஆகிறது. இவரது பாத்திரம் நாவல் முழுவதும் கடவுளின்
அசரீரி போல ஒலிக்கிறது.
நிலம் கொள்ளும்
சூல் என்பது விவசாயம்தான் என்பதை மட்டுமே நாவலில் இருந்து அறியலாம். நாட்டுப்புற தெய்வங்கள்
பற்றிய கதை, துர்மரணம் நடந்தவர்களை அமைதிபடுத்த மக்கள் செய்யும் பரிகாரங்கள் ஆகியவை
நாவலின் தொடக்கத்தில் நிதானமாக சுவாரசியமான
மொழியில் விவரிக்கப்படுகிறது. சில கதைகளை படிக்கும்போது குறிப்பாக பேயோத்தவன் என்ற
கதை.. புன்னகையுடன் வாசிக்கலாம். ஆனால் அதேசமயம், பெரியாரை அவதூறு செய்வது, கடவுளை
கும்பிடாதவன் ஊரை அழிப்பான், அவனால் விவசாயம் அழிந்துவிடும் என்பது போன்ற கருத்துகளை
எந்த மனநிலையில் இருந்துகொண்டு ஆசிரியர் எழுதினார் என்று புரியவில்லை.
விவசாயத்தைக் காக்கவேண்டும் என்பது நல்ல விஷயம்.
ஊருக்கு நல்லது மக்களுக்கு நல்லது என்பது மன்னர் காலத்திலும் சரி, இப்போது அரசு வந்துவிட்டாலும்
கூட போராட்டங்கள் நடத்தித்தான் பல்வேறு காரியங்கள் நடக்கின்றன.
ஆனால் ஆசிரியர்
கூறும் கூற்றுப்படி, சாதி தீண்டாமை, சுரண்டல்களைப் பொறுத்துக்கொண்டு மேல்சாதிக்காரர்களின்
அதாவது நிலம் வைத்துள்ளவர்களுக்கு பிறர் உழைத்து சம்பாதித்து தரவேண்டும். அப்போதுதான்
நிலம் சூல் கொள்ளும். விளைச்சல் செழிக்கும். கிராமம் வளமாக இருக்கும். நாட்டைக் காக்க
முடியும் என செய்தி சொல்கிறார்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக