பால்ய கால தோழியால் எதிர்மறை குணங்களைக் கொண்டவன் மனந்திருந்த வாய்ப்பு கிடைத்தால் - கதலோ ராஜகுமாரி

 













கதலோ ராஜகுமாரி

நரரோகித், நமீதா பிரமோத்

இசை – இளையராஜா, விஷால் சந்திரசேகர்

 

சினிமாவில் வில்லனாக நடிக்கும் அர்ஜூன் சக்ரவர்த்தி, நிஜத்திலும் ஆணவம் பிடித்தவராக யாரையும் மதிக்காத இயல்புள்ளவராக இருக்கிறார். அவரை டேட்டிங்கிற்கு அழைத்த இளம்பெண், அவரது ஈகோ பற்றி விமர்சித்துவிட்டு உன்னோடு காதல் மட்டுமல்ல வாழ்வதும் கடினம் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். இதனால் அர்ஜூன் மனதளவில் தான் ஏன் இப்படி ஆனோம் என யோசிக்கிறார். அதற்கு விடையாக பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்டவர், தன்னை அப்படி மாற்றிய சிறுவயது தோழியைத் தேடி கிராமத்திற்கு செல்கிறார். அவர் தனது தோழியைச் சந்தித்தாரா, தனது பிரச்னைக்கு தீர்வு கண்டாரா என்பதே கதை.

நர ரோகித் நடித்துள்ள கதை என்பதற்காகவே பார்த்த படம். அவரும் ஏமாற்றவில்லை. ஆனால் கதை சொன்ன இயக்குநர் அவரை ஏமாற்றிவிட்டார்.

அர்ஜூன் சக்ரவர்த்தியாக, தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற வில்லன். ஆனால் அவர் சொல்லியதை அனைத்தும் இயக்குநர் கேட்பது என்பது நம்புகிறது போல இல்லை. தெலுங்கு சினிமா உலகமே ஹீரோக்களை நம்பித்தானே இருக்கிறது. இந்த நிலையில் வில்லன் எப்படி இந்தளவு செல்வாக்காக இருக்க முடியும் என தொடக்கமே ஒட்டவில்லை. படம் தொடக்கத்தில் பருத்திவீரன் படம் போல தொடங்குகிறது. பிறகு எப்போதும் போல தெலுங்குபடம்தான் என நிம்மதி தரும் வகையில் பயணிக்கிறது.

 

அர்ஜூன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பதல்ல. அவர் உளவியல் பூர்வமாகவே அன்புக்கும், அங்கீகாரத்திற்கும் ஏங்குகிற ஆள். ஆனால் அதெல்லாம் கிடைக்காததால் சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆணவமாக அதி கோபமாக நடந்துகொள்கிறார். இந்த காட்சிகள் அனைத்திலும் நர ரோகித் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளோ, பிற விஷயங்களோ ஊக்கமூட்டும்படி அமையவில்லை. அர்ஜூன் பாத்திரத்தின் பிரச்னைகளை பார்வையாளர்கள் உணருவது கடினமாகவே இருக்கிறது.

 

காட்சிகள் அனைத்துமே நாம் ஊகிக்கும்படி இருக்கிறது. இதை இயக்குநரின் பலவீனமாக இங்கு கூறவில்லை. ஆனால் அப்படியான காட்சிகளை சற்று ஆச்சரியப்படும்படி எடுத்திருந்தால் பார்க்க ரம்யமாகவே இருந்திருக்கும்.

கதையில் ட்விஸ்ட் என்பது சீதா, சிறுவயதில் தவறு செய்த அர்ஜூனை தலைமை ஆசிரியரிடம் மாட்டிவிட்டு, நட்புக்கு துரோகம் செய்தாளா என்பதுதான். அந்த விஷயத்தை அர்ஜூன் தெரிந்துகொள்ளும்போது தன் தவறை உணருகிறாற்போல எந்த காட்சியும் இல்லை. அவர் உருவாக்கிய திட்டங்களே அவருக்கு பின்னடைவாக மாறுவது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. அதை சீதா எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பார்க்க காத்திருந்தால், அவரும் அர்ஜூன் போலவே அவனைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் கோபப்பட்டு பேசுகிறார். இத்தனைக்கும் கிராமத்தில் அறிவாளி, பிறருக்காக உதவி செய்பவள், நிதானமான பெண் என பெயர் எடுத்தவர். ஒரு காட்சி ஒரு மாதிரியும், அடுத்த காட்சி முதல் காட்சியை உடைப்பது போலவுமே படம் நெடுக எடுத்திருக்கிறார்கள்.

இதனால் படத்தில் எந்த பாத்திரம் வலுவாக, பலவீனமாக இருக்கிறது என கூறவே முடியாது. அனைத்து பாத்திரங்களும் ஆற்று நீரில் வைக்கப்பட்ட அகல் விளக்குகள் போல சிறு அலைகளுக்கு கூட அலைபாய்கிறார்கள்.  

படத்தில் உருப்படியான விஷயம், இளையராஜாவின் பாடல்கள். விஷாலின் பின்னணி இசை. இரண்டுமே படத்தை சராசரி தெலுங்குப் பட பாடல்களிலிருந்து சற்று உயர்த்துகிறது. ஆனால் காட்சிகள் இசைக்கு எந்தளவிலும் உதவவில்லை.

படத்தின் இறுதிக்காட்சி கூட மிகவும் செயற்கையாக இருக்கிறது. அர்ஜூன், சீதாவை பழிவாங்கி அவளது சந்தோஷத்தை அழிக்க கிராமத்திற்கு வருகிறான். நட்பாகிறான், பேசுகிறான் என எல்லா விஷயங்களையும் செய்துவிட்டு, அவன் மனம் மாறும்போது அவன் போட்ட திட்டங்களே அவனுக்கு எதிரியாகிறது.

இதனால் சீதா அவனை புறக்கணிக்கிறாள். அர்ஜூன் எப்போதும்போல அந்த புறக்கணிக்கப்பட்ட வெறுப்பை தொழிலில் காட்டுகிறான். வில்லனாக மீண்டும் வெற்றி பெறுகிறான். உண்மையில் அவனது பால்ய கால தோழியை நோக்கி திரும்ப அவன்தானே முயலவேண்டும். சீதாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு அன்பை சம்பாதிக்க வேண்டும். ஆனால் படத்தில் சீதாதான் அர்ஜூனை தேடி வருகிறாள். காதலை ஊருக்கே சொல்கிறாள். அவனை கட்டியணைத்து ஒன்றாக சேர்கிறாள். உண்மையில் இதை அர்ஜூன்தான் செய்திருக்கவேண்டும்.

நமீதா பிரமோத், சீதா பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். பிறரின் துன்பம் கண்டு மனம் இளகும் பாத்திரம். யாரையும் நம்பாமல் பிறருக்கு வழிகாட்டி உதவுபவர், இந்தளவு தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பாரா  என்ன?

படமாக வேண்டாம் கதையாகவே படித்துக்கொள்ளலாம்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்