இளவரசியைக் கரம்பிடித்து சுரங்க மாஃபியாவை ஒழிக்கும் போலீஸ்காரர்! - சர்தார் கப்பர் சிங் - பவன், காஜல்

 













சர்தார் கப்பர் சிங்

இயக்கம்

பாபி (கே.எஸ்.ரவீந்திரா)

கதை, திரைக்கதை, தயாரிப்பு

பவர்ஸ்டார் பவன் கல்யாண்

இசை

ராக்ஸ்டார் டிஎஸ்பி

 

கப்பர் சிங் படத்திற்கு பிறகு அதேபோல தயாரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். இங்கு கப்பார் சிங்கோடு சர்தார் கூடுதலாக சேர்கிறது. இது தனிக்கதையாக உருவாகிறது.

இந்த கதையில் குடும்ப பாசம் ஏதும் கிடையாது. தொடக்க காட்சியில், திருடர் கூட்டத்தை போலீசார் விரட்டி வர,  கழுத்தில் கத்தி வைத்தாலும் கூட துணிச்சலாக அவர்களைக் காட்டிக்கொடுக்கிறான் சிறுவன் ஒருவன். அவன்தான் நாயகன். சர்தார் கப்பர் சிங். அவன் ஆதரவற்ற சிறுவனாக இருக்கிறான். அவனைப்போலவே இருக்கும் இன்னொரு சிறுவனுக்கும் அவனே பெயர் சூட்டி தனது நண்பனாக்கிக் கொள்கிறான். இவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? நட்பிற்கு உதாரணமான சர்தார் கப்பார் சிங்கும், அவரது நண்பரான சாம்பாவும்தான். (பவன்-அலி= நட்பே துணை )

சர்தார் கப்பர் சிங் படம், தெலுங்கு பேசும் ஆந்திரத்தில் உருவாக்கப்படவில்லை. ரந்தம்பூர் எனும் இடத்தில், இன்றும் ராஜாக்கள் தொழில்களை கையகப்படுத்தி இயற்கை வளத்தை மக்களை நசுக்கி வரும் இடத்தில்  நடைபெறுகிறது.

முதல் படத்தில் சிறப்பாக இருந்த பவன் கல்யாணின் நடிப்பு, காமெடி, அதிரடியான சண்டை என எதுவுமே இந்த படத்தில் இல்லை என்பதே சோகமான விஷயம். ஹாஸ்ய குரு, பிரம்மானந்தம் காரு படத்தில் இருந்தும் கூட நகைச்சுவை எடுபடவில்லை. அவரும் முயற்சிக்கிறார். ஆனால் ஊர்வசியை வைத்து இரு பொருள்பட செக்ஸ் காமெடியை முயன்றிருக்கிறார்கள். தோற்றுப்போய்விட்டது. சுத்தம்…….

இந்த படத்தில் வில்லன்கள் சற்று அப்டேட்டாகி ஆட்டோமேட் துப்பாக்கிகளை வைத்து சுடுகிறார்கள். ஆனால் நாயகன் ஒருமுறைக்கு இரு தோட்டாக்கள் என அடிக்கடி லோட் செய்யும் துப்பாக்கியைப் பயன்படுத்தி வில்லன்களை சுடுகிறார். எப்போதும் போல வில்லன்கள் குறிபார்க்காமல் சுடுகிறார்கள். ஆனால் கப்பர் சிங் குறிபார்த்து சுட்டு வில்லன்களை அழிக்கிறார்.

படத்தில் இரண்டு ராஜபுத்திர குடும்பம். ஒன்றில் இளவரசி அர்ஷி இருக்கிறாள். மற்றொன்றில் பைரவ் சிங் என்பவர் இருக்கிறார். அர்ஷிக்கு, ராஜபுத்திர தளபதி ஹரி நாராயணன் பாதுகாப்பு. ஏறத்தாழ அவர்களது வரம்பில் உள்ள மக்களுக்கு அவரே ராஜா போல இருந்து பல்வேறு உதவிகளைச் செய்கிறார்.

இதிலும் கூட இளவரசி அர்ஷி மூலம் ஏதேனும் நல்ல விஷயங்கள் செய்வதாக காட்டியிருந்தால், அந்த பாத்திரத்திற்கு கொஞ்சமேனும் நம்பகத்தன்மை கிடைத்திருக்கும். யானை மூலம் இளவரசன் வருவான் என கனவு கண்டுகொண்டு வில்லனின் அட்டூழியங்களைப் பொறுத்துக்கொண்டு காத்திருக்கிறார்.

கப்பார் சிங் படத்தில் வரும் பாக்கியலட்சுமி இந்த வகையில் தனியாக ஃபேன்சி ஸ்டோரை நடத்தி வருவாள். தனது வாழ்க்கை தொடர்பான  முடிவுகளை அவளேதான் எடுப்பாள். இதையெல்லாம் மோசமாக எழுதப்பட்டு காட்சிபடுத்தப்பட்ட அர்ஷி பாத்திரம் நமக்கு நினைவுபடுத்திவிடுகிறது. கெட்டதிலும் நல்ல விஷயம் இதுதான். இதனால் சர்தார் கப்பர் சிங் பார்ப்பவர்கள், ஹரிஷ் சங்கர் எடுத்த கப்பர் சிங் படத்தை யூட்யூபில் பார்க்க நினைக்கலாம்.

படத்தில் சர்தார், சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டு வில்லனின் தொழில்களை முடக்குவதாக காட்டியிருந்தால் சற்று  சுவாரசியம் இருந்திருக்கும். படம் எப்போதும்போல அடிதடியாகவே சென்று அப்படியாகவே முடிகிறது. சாதி, மதம் சார்ந்த தீவிரமான கருத்துகள் கொண்ட தளபதி, சர்தாரை உடனே ராஜபுத்திர இளவரசிக்கு மணமுடிக்க ஒப்புக்கொள்வது ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை. பிரம்மாஜி காட்சிகள் எதிர்பார்த்த வகையில் சென்று முடிகிறது.

 படத்தில் சர்தார் இறுதியில் தலைப்பாகை அணிந்த வாசல் காவலாளியாகவே எஞ்சுகிறார்.

 மாறுவேஷம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்