இதயப்பூர்வமாக கேட்கும் மன்னிப்பு, விரோதத்தை கரைக்கும் -சௌதி வெல்லாக்கா - தருண் மூர்த்தி

 




சௌதி வெல்லாக்கா







சௌதி வெல்லாக்கா 2022

மலையாளம்

இயக்கம் தருண் மூர்த்தி

இசை – பாலி ஃபிரான்சிஸ்

ஒளிப்பதிவு – சரண் வேலாயுதன் நாயர்



தென்னம் மட்டையின் நடுவிலுள்ள தண்டுப்பகுதி. அதுதான் படத்தில் விவரிக்கப்படும் மரண ஆயுதம். நண்பர்களோடு கிரிக் கெட் விளையாடும்போது பந்து எதிர்பாராதவிதமாக வயதான பெண்மணி மீது விழுந்து விடுகிறது. அதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு சிறுவனை தென்னை மட்டையின் தண்டை எடுத்து அடிக்கிறாள். இதில் சிறுவனுக்கு விழாமல் இருந்த பல் கூட பதற்றத்தில் விழுந்துவிடுகிறது. இந்த விவகாரத்தை அந்த முதிய பெண்மணி மீது துவேஷம் பாராட்டும் வீட்டுக்காரர், வழக்கு போடும் நிலைக்கு கொண்டு போகிறார். அந்த வழக்கும், வழக்கில் தொடர்புடையோர் வாழ்க்கையில் நெருக்கடியில் மாட்டுகிறது.  இறுதியில் வழக்கு என்னவானது என்பதே படம்.

நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்தும் படம் என இறுதியில்  சொல்லுகிறார்கள். ஆனால் படம் நெடுக, ஆணவத்தால் அகங்காரத்தால் வன்மத்தால் காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி நலிந்து போகிறது என்பதை அதே தன்மையில் சொல்லுகிறார்கள்.

படம் காட்சியமைப்பில் ஒருவருக்கு அரசு அமைப்புகளில் (காவல்நிலையம், நீதிமன்றம்) தேவையான ஒன்றைத் தேடினால் எந்தளவு விரக்தி கொள்ள நேரும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் கதையே நிதானமானது என்பதால், வேகமாக காட்சிகள் நகரவேண்டுமென நினைத்தால், அவர்கள் படத்தை கைவிட்டு வேறு படத்திற்கு நகர வேண்டியதுதான்.

படத்தில் காட்சியமைப்பு, இசை ஆகியவை இரண்டறக் கலந்து பார்க்க நெகிழ்ச்சியான உணர்வை மனதில் இறக்குகிறது. படத்தில் வரும் ஆயிஷா ராவுத்தருக்கு அதிக வசனங்கள் இல்லை. வேலை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் பேருந்தில் எலுமிச்சையை முகர்ந்துகொண்டு பயணிக்கும் காட்சி சொல்லாத விஷயங்களையெல்லாம் சொல்லுகிறது. முதலில் இவர் அறிமுகமாக்கும் காட்சி அவரை சற்று எதிர்மறையாகவே காட்டும். அதாவது மருமகளிடம் கோபம் கொண்டு மண்ணெண்ணெய் வாங்க செல்லும் காட்சி. அதை வாங்கி வரும்போதுதான் கதையில் திருப்புமுனையான சிறுவனை அடிக்கும் சம்பவம் நடக்கிறது.

மன்னித்து விடுங்கள் என்று கேட்டுவிட்டால் எளிதாக முடியக்கூடிய நிகழ்ச்சிதான். ஆனால் அதை மனிதர்கள் மனதில் கொண்டுள்ள வன்மத்திற்கு இரையாக பயன்படுத்துகிறார்கள்.. இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, குற்றத்தை பதிந்த என இருதரப்பினருமே பெரும் மன உளைச்சலில் பொருளாதார சிக்கலில் மாட்டுகிறார்கள்.

மருமகளின்(நஸி) சாடைப் பேச்சு கேட்க முடியாமல் ஆயிஷா ராவுத்தர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியும், சகோதரரிடம் உதவி கேட்பதும் மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகள். சகோதரர், வயதானவர்களை இளைஞர்கள் எப்படி ஒதுக்கி வைக்கிறார்கள் என்பதை சிறிய வாக்கியத்தில் சொல்லிவிடுகிறார்.  

தனக்கென வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு வாழ்வதும், மெல்ல மனம் கனிந்து சிறுவர்களைப் பார்ப்பதும். தான் செய்த நொடிநேர ஆவேச காரியத்தால் ஏற்பட்ட விளைவுகளை தீர்க்க முனைப்பு காட்டுவதும் ஆயிஷா ராவுத்தரின் பாத்திரத்தை மறக்க முடியாத ஒன்றாக ஆக்குகிறது.

மன்னித்தல் என்பதைவிட மன்னிப்பு கோருவது என்பது ஒருவரின் தன்மானத்தை சுருக்கிக்கொள்வதாக விட்டுத்தருவதாக மாறிவிட்டது. ஆனால் ஆயிஷா வழக்கின் இறுதியில் கோரும் மன்னிப்பு, தவறின் பொருட்டு மனந்திருந்துதலாக மாறுகிறது.

13 ஆண்டுகள் தனது நகையை விற்று குழந்தை மீதான வன்கொடுமை சட்டத்தில் தண்டனையைக் குறைக்க பல்வேறு இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு நடக்கிறார் ஆயிஷா ராவுத்தர். அவருக்கும், அவரை இதயப்பூர்வமாக நேசிக்கும் மகனுக்குமான இறுதி உரையாடல் கூட மறக்க முடியாததுதான்.இறுக்கமாகவே படம் நெடுக வரும் ஆயிஷா ராவுத்தர், அபிலாஷிடம் அவரை பலமுறை சந்திக்க வந்தேன் என்று சொல்லி உரையாடும் காட்சி, நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம்.

இறுதிக் காட்சியில் இளைஞரான அபிலாஷ், ஆயிஷா ராவுத்தருக்கு தனது மன்னிப்பைக் கூறும் விதமாக டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்து அவரின் அபராதத்தைத் தானே கட்டுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.

சத்தார் – சுஜித் சங்கர், ஆயிஷா ராவுத்தர் – தேவி வர்மா, பிரிட்டோ வின்சென்ட் – பினு பாப்பு, அபிலாஷ் – லுக்மன் என நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.  இதயப்பூர்வமாக ஒருவரை நம்புவதும், நேசிப்பதும் பலநேரங்களில் நம்மை நெருக்கடியான சங்கடங்களில் தள்ளுவதுண்டு. ஆனால் அப்படியான மனிதர்கள்தான் வாழ்க்கையை சமூகத்தை வலுப்படுத்துகிறார்கள். வெறுப்பை, வன்மத்தை நீக்கும் வழி, மன்னிப்பதும் அன்பு செலுத்துவதும்தான் என்பதை படம் நிதானமான போக்கில் சொல்லுகிறது.

இதயப்பூர்வமான மன்னிப்பு

கோமாளிமேடை டீம்


கருத்துகள்