மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

 









சாண்ட் சீ - பிரதர் ஹாவோ


 









சாண்ட் சீ (2018)

சீன டிவி தொடர்

53 எபிசோடுகள்

ராகுட்டன் விக்கி ஆப்

இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி

திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென்

அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.

 அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.  பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது…

இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.

 

பள்ளி மாணவன் லீ சூ, ஒருநாள் தனது பால்யகால தோழியின் வீட்டில் இருந்து வித்தியாசமான சிறு மரப்பெட்டியைத் திருடுகிறான். அவன் அதை திறக்கும்போது அதற்குள் இருந்து சிறு கருநிற பாம்பு, அவனை கடித்துவிடுகிறது. அவனுக்கு அது கனவு போல தோன்றுகிறது.  

அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு இரவில் நடக்கும்போது, பைத்தியம் பிடித்தது போல உள்ளவன் ஒருவன்,  லீ சூவை பெட்டியைக் கொடு என கேட்டு அவனை அடித்து சித்திரவதை செய்கிறான். கீழே விழும் லீ சூவை விடாமல் கண்ணாடி ஒன்றால் முதுகில் கிழித்து மேப் ஒன்றை வரைகிறான். பிறகு அங்கேயே  இறந்தும் போகிறான். இதனை லாஜிக்காக யோசித்து பார்ப்பதே கடினம். ஏனென்றால் இரவில் அந்த இருட்டில் எப்படி மேப் ஒன்றை வரைய முடியும்? தயவு செய்து நம்புங்கள். ஒட்டுமொத்த கதையே லீ சூவின் முதுகை.. அதாவது மேப்பை நம்பித்தான் உள்ளது.

இதற்குப் பிறகு மருத்துவமனையில் உள்ள லீ சூவை, அறிமுகம் இல்லாத ஆட்கள் சந்தித்துப் பேசி அவனை அவர்களோடு அழைத்துச் செல்கிறார்கள். இதன் அர்த்தம், அவனை கடத்திவிடுகிறார்கள் என்பதே. லீ சூவை, வூ சி என பொக்கிஷங்களை கண்டுபிடிப்பவர் சந்தித்து பேசுகிறார்.

இவர், அவனது முதுகில் உள்ள மேப்பை ஆச்சரியமாக பார்க்கிறார். அவனைத் தன்னோடு குடோங்ஜிங் என்ற யாரும் இதுவரை பார்க்காத பாலைவன நகரம் உள்ள இடத்திற்கு அழைத்துச்செல்கிறார். உண்மையில் குடோங் ஜிங் என்ற பகுதி எங்குள்ளது. அங்கு எதற்கு பள்ளி மாணவன் செல்லவேண்டும், வூ ஷி என்ற மனிதர் யார், அவருடைய நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்ள நீங்கள் சாண்ட் சீ எனும் சீன டிவி தொடரைப் பார்த்தே ஆகவேண்டும்.

தொடர் சாகச அனுபவத்தை பார்வையாளர்களுக்கு முழுமையாக வழங்குகிறது. இந்த தொடரில் வரும் கிளைக்கதைகளை தனியாகவே பிரித்து தனித்தொடராக எடுக்கலாம். அந்தளவு பாத்திரங்கள் தனித்துவமானவர்களாக இருக்கிறார்கள்.

வூ ஷி பாத்திரம் தொடக்கத்தில் லீ சூவிடம் நடந்துகொள்ளும் முறை சற்று கொடூரமாக தோன்றலாம். பிறகு மெல்ல வூ ஷி பாத்திரம் மிக மென்மை கொண்டதாக பிறரின் நலன் விரும்புவராக காட்டுகிறார்கள். ஏனென்றால் இந்த தொடரில் நாயகன் அவர்தான். அவர் காட்சியில் இருக்கிறார். அல்லது அவர் இல்லாதபோது பிறர் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லாதபோது அவர் சொன்ன வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் ஷின் ஹாவோ பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 வூ ஷியின் மூன்றாவது மாமா ஒருமுறை சொல்லுவார். எதிரியான வாங் குடும்பத்தினர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். எனவே ‘’நீ எதையும் பிறர் அறியும்படி செய்யக்கூடாது. நீ என்ன யோசிக்கிறாய் என யாருக்கும் தெரியக் கூடாது’’ என்கிறார். தொடர் முழுக்கவே வூ ஷி அப்படித்தான் இருக்கிறார்.

பண்டைய காலத்தில் இருந்து மிஸ்டிக் நைன் என ஒன்பது குடும்பங்கள் தொல்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள்தான் சீனாவில் ஜியூமென் சங்கத்தைத் தொடங்குகிறார்கள். இந்த அமைப்பு, வணிக விதிகளை உருவாக்கி கலைப் பொக்கிஷங்களை சரியான முறையில் பங்கிட்டு விற்றுக்கொடுக்கிறது. இதற்கு காலப்போக்கில் உருவாகும் எதிரிதான் வாங் குடும்பம். இவர்கள், ஜியூமென் அமைப்பில் உள்ளவர்களை பிரிவினை செய்து, அமைப்பை உடைத்து தங்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அதையும் சாதிக்கிறார்கள்.

 இதைத் தடுக்கும் பொறுப்பில் வூ ஷி இருக்கிறார். இவர் யாரென தொடரில் நீங்கள் பார்க்கும்போதுதான் எந்தளவு எளிமையாக இருக்கும் மனிதர் என தெரிந்துகொள்வீர்கள். இவரைக் கொலை செய்ய வாங் குடும்பம் சூ நான் (அலினா ஸாங்) என்ற பெண் கொலையாளியை தயார் செய்கிறது. தொடர் நெடுக வலம் வருபவர், தனது அழகால் திமிரால் வூ ஷிக்கு எரிச்சல் ஊட்டிக்கொண்டே இருப்பார். சீன அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் பார்வையாளர்களான நாம் அதைப் பொறுத்துக்கொள்ளலாம்.

பொக்கிஷத் தேடுதலில் வயதான பேராசை கொண்ட பணக்காரர், அவரின் இளமை பூரிப்பான இளம் மனைவி, கூலிப்படை என சீன டிவி தொடர்களுக்கென ஒரு டெம்பிளேட்டை உருவாக்கிவிட்டார்கள் போல…

இதெல்லாம் தாண்டி குடோங் ஜிங் பாலைவனப் பயணம் நம்மை வசீகரிக்கிறது. பாலைவன வெம்மை தாண்டி, வூ ஷிக்கும், லீ சூவுக்குமான நெருக்கமான உறவு, பாலைவனத்தில் சந்திக்கும் நெருப்பு புயல், உடலுக்குள் புகுந்து நீரால் பெரிதாகி பிறரைக் கொல்லும் ஒட்டுண்ணிப் புழு, ஏரியில் இரவில் மட்டுமே பெருகும் ஜெல்லி மீன், கருப்பு முடி கொண்ட பறக்கும் பாம்பு, கனவு காண வைக்கும் வெள்ளைப் பாம்பு, பிணத்தை தின்னும் பிணப்பூச்சி, இரும்பு வேலிகளை அரணாக கொண்ட மர்ம கோவில், உடலின் காயத்தில் இருந்து ரத்தத்தை பீறிடச்செய்யும் கற்கள் என தொடரில் பார்த்து ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு.

 இதில் வாங் குடும்பம் என்ன தேடுகிறார்கள், எதை அடைய நினைக்கிறார்கள் என்று யோசித்தால் பலரும் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் அடைய நினைப்பது பணம் அல்ல. அதிகாரத்தை என்பதை பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும்போது ஏற்படும் வியப்பு அளவிடமுடியாத ஒன்று. வாங்க குடும்பத்தின் தொழில்நுட்ங்கள், அவர்களின் தந்திரமான நிறைய வழிமுறைகள் அவர்கள் பற்றி அறிய ஆவலைத் தூண்டுகின்றன.

தொடரில் வரும் பிரதர் ஹாவோ, மருத்துவர் லியாங் வான், மாஸ்டர் பிளாக் ஆகியோர் தனித்தன்மை கொண்ட பாத்திரங்களாக உள்ளனர். வாங் குடும்பத்தின் பீனிக்ஸ் பறவை டாட்டூ கொண்ட பெண்ணான லியாங்கிற்கும், ஸாங் ரீ சான் என்ற ஜியூமென் தலைவருக்கும் இடையிலான காதல் உறவு சிறப்பாக உள்ளது. ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்து அன்பிற்கும் அங்கீகாரத்திற்கும் நல்ல கணவன் வேண்டுமென கனவு காண்பவராக லியாங் பாத்திரம் உள்ளது. இதில் நடித்துள்ள நடிகை யாங் ரோங் தனது உணர்வுகளை பிரமாதமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.

கலாசார பொக்கிஷங்கள் தனிநபரின் லாப நோக்கத்திற்கானது அல்ல. அது அரசுக்கானது, தேசிய சொத்து என்ற வகையில் சொன்ன செய்தியில் முக்கியத்துவம் பெறுகிற தொடர் இது.

உப்புக்கும் புளிக்குமாக யோசித்துக் கொண்டிருக்கிற சலிப்பான வாழ்க்கையை வாழ நினைத்தவர்கள், பாலைவனப் பயணத்தில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே ஓடுகிறார்கள். அதற்கென நிறைய விஷயங்களைக் கற்கிறார்கள். இதன் பிறகு, அவர்கள் இயல்பான உலகிற்கு செல்லும்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்களின் நுண்ணுணர்வு, புத்திசாலித்தனம், கற்கும் அறிவு கூடியிருக்கிறது. போரில் ஈடுபட்டவன்தானே, அமைதியைப் பற்றி பேச முடியும்......


துரத்தும் பாலைவன பாம்பு

கோமாளிமேடை டீம்  

    

 

 


கருத்துகள்