சாப விடுதலைக்காக குன்லூன் கல்லறைக்குச் செல்லும் தொல்பொருள் குழு! - குன்லூன் டாம்ப் - சீனதொடர்-

 




குன்லூன் டாம்ப்











குன்லுன் டாம்ப் 2022

சீன டிவி தொடர்

மூல நாவல்- கேண்டில் இன் தி டாம்ப் – ஸாங் மூ யே

ராகுட்டன் விக்கி ஆப்

சாகசத் தொடர்

இயக்குநர் – ஃபெய் ஸென் ஷியாங்

 

 

 

ஓல்ட் ஹூ, ஃபேட்டி, ஒல்ட் ஜின், ஷிர்லி யாங் இந்த நால்வரும் தொன்மையான பொருட்களை தேடித் திரியும் ஆட்கள். கல்லறைகளுக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து வந்து விற்பதுதான் வேலை. ஒருமுறை இப்படியான வேலைக்கு செல்லும்போது ஓல்ட் ஹூ (ஹூ பாயி), ஃபேட்டி (வாங் கை சுவான்) ஷிர்லி யாங் ஆகியோரை வைரஸ் ஒன்று தாக்குகிறது. தொன்மை கலாசாரப்படி கல்லறைக்குள் நுழைபவர்களை தாக்கும் சாபம் இது. இதன் பெயர் ரெட் ஸ்பாட் கர்ஸ். இதன்படி இதற்கு பரிகாரமாக தீயசக்தி ராஜ்யமான குன்லுன் எனும் இடத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் போகாவிட்டால் வைரஸ் தாக்கி உயிர் போய்விடும் அபாயம் இருக்கிறது.

இந்த மூவரையும் பயன்படுத்தி பொக்கிஷங்களை சம்பாதிக்க தொன்மை பொருட்களை விற்பவரும் செல்வந்தருமான மிங்க் யூ ஒரு மறைமுகத் திட்டம் வகுக்கிறார். இதன்படி, பொக்கிஷங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் தன் தந்தை குன்லூன் டாம்பில் இறந்துபோய்விட்டார். உடலை மீட்க வேண்டும் என்கிறார். இதை சொல்லும்போதே கேட்கும் நமக்கே காரணம் இம்புட்டு வீக்காக இருக்கிறதே என தோன்றுகிறது. புத்திசாலியான ஓல்ட் ஹூ,  அபார அறிவாளியான ஷிர்லி என இதை கண்டு மயங்குவார்களா என்ன?

அவர்களுக்கு சொத்து, பொக்கிஷத்தை விட உயிர் முக்கியம் என தோன்றுகிறது. எனவே செல்வந்தர் மிங் யூ சொல்வதற்கு ஒப்புக்கொள்கின்றனர். உண்மையில் மிங் யூ எதிர்பார்த்த பொக்கிஷங்கள் கல்லறையில் கிடைத்ததா, கல்லறை திருடர்கள் மூவரின் சாபம் நீங்கியதா என்பதே முக்கியமான கதை.

சாகசக் கதை. பெரும்பாலும் க்ரீன் மேட் போட்டு எடுக்கிறார்கள். ஆனால் அதிலும் எத்தனை சவால்கள், சுயநலம், பேராசை, ஆபத்துகள், உயிரிழப்புகள், மனிதர்களின் ஒற்றுமை, பிரிவினை என இவற்றைப் பார்க்கத்தான் இந்த தொடரைப் பார்க்கவேண்டும்.

ஓல்ட் ஹூவுக்கும், ஷிர்லி யாங்கிற்குமான வெளியே சொல்ல முடியாத காதலும், நெருக்கமும் தொடரைப் பார்க்கத் தூண்டுகிறது. சீனக் கலாசாரத்தில் ஊறியவரான ஹூ பாயி தனது காதலை தொடர் நிறைவுபெற்ற கடைசி அத்தியாயத்தில் கூட சொல்ல மாட்டேன்கிறான். ஆனால் என்ன அவருக்கு சேர்த்து ஷிர்லி யாங் சொல்லுகிறார். அப்போது கூட ஹூ பாயி, ஷிர்லியிடம் பொது இடத்தில் எதற்கு, வீட்டில் போய் சொல்லிக் கொள்ளலாம் என்கிறார். காதலில் கூட இந்தளவு தன்னடக்கம் இருக்க முடியுமா?

தொடரில் காமெடிக்கு ஃபேட்டி, செல்வந்தர் மிங் யூ, மிங் யூவின் மனைவி சுனா ஆகியோர் பயன்படுகிறார். இதற்கு அடுத்து கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்ய சக்திகளை அறியும் இளம்பெண் ஒருவர் வருகிறார். இவரை எதற்கு தொடரில் வைத்தார்கள் என்றால், இறுதிப்பகுதியில் பதில் கிடைக்கிறது. அதுவரை இவருக்கான காட்சிகள் ஏதோ இல்யூசன் போலவே காட்டுகிறார்கள்.

குன்லூன் டாம்ப் தொடரில் உருப்படியான விஷயம் தேவையில்லாமல் கதையை நீட்டி முழக்கவில்லை.  கதையை நிதானமாக தொடங்கி ஓநாய்த் தாக்குதல், கடவுளின் அம்மாவின் கண்கள், கடல் உயிரினம் ஒன்றின் தாக்குதல், பல்லிகளில் வன்முறை தாக்குதல், ஐஸ் பூச்சியின் படை, தன்னைத்தானே தியாகம் செய்து கொள்ளும் சடங்கு என நிறைய விஷயங்களை தொடரில் கூறியிருக்கிறார்கள். இவை பார்க்க சுவாரசியமாக உள்ளன. அகழாய்வு போன்ற விஷயங்களை மூலமாக கொண்ட தொடரில் அறிவியல் பூர்வமான விஷயங்களைக் காட்சியாக, வசனங்களாக கூறுவார்கள். இதெல்லாம் தெரிந்துகொள்வது நல்லதுதானே?

தொடரில் உணர்ச்சிப் பூர்வமான இடங்கள் சில உண்டு.  பழங்குடி இனத்தவரான கெமா, அவரின் சகோதரர் பர்ஸ்ட் ஆகியோரை ஓல்ட் ஹூ சந்திப்பது. ஓநாய் தாக்குதலில் கால்களை இழந்த கெமாவிற்கு சக்கர நாற்காலியை ஓல்ட் ஹூ கொடுப்பது, அதை கெமா மலர்ந்த முகத்துடன் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் ஏற்கும் காட்சி.

சகோதரர் ஃபர்ஸ்ட், ஓல்ட் ஹூவின் துணிச்சலான குணத்தைக் கண்டு பரவசமாக அவருக்கு துஜி என பெயர்சூட்டுவது, தனது தங்கையை முடமாக்கிய வெள்ளை முடி ஓநாயை கொன்றே தீர்வது என முயன்று தனது உயிரை இழப்பது, சண்டை போடுவதற்கு மட்டுமேயான நபர் என பலரும் நினைத்த பீட்டர், இறுதியில் மாதுளைப் பழம் ஒன்றின் ருசியை நினைத்து பார்த்தபடியே புன்னகையுடன் உயிரை விடுவது என நெகிழ்வான காட்சிகள் தொடரில் உண்டு.  

சாப விடுதலை

கோமாளிமேடை டீம்

 

 

 


கருத்துகள்