ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

 















மைக்

மலையாளம்

இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத்.

இசை – ஹெசம் அப்துல் வகாப்

தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம்

இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது.

சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.  

பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்புத் தந்தையாகிறார். ஆனால் இது சாரா தாமஸிற்கு பிடிக்கவில்லை. தன்னை ஆணாக மாற்றிக்கொண்டால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் . சுதந்திரமாக இருக்கலாம் என நினைக்கிறாள்.  

இப்படி இருக்கையில் ஒரு பேருந்து பயணத்தில் ஆன்டனி ஜான் என்பவரைச் சந்திக்கிறாள். மதுபோதையில் எப்போதும் இருக்கும் வாலிபரை அவளுக்கு ஏனோ பிடித்துப் போகிறது. அவளுக்கும் தான் ஆணைப்போலவே இருக்கவேண்டுமென ஆசை. எனவே இருவரும் தங்கள் வீடுகளுக்கு செல்லும் வழியில் ஒன்றாக பயணிக்கிறார்கள்.

சாரா, ஆணாக மாறும் அறுவை சிகிச்சையை செய்துகொள்ள நினைக்கிறாள். அவளது அம்மா கூட அதை மறுக்கவில்லை. ஆனால் கிறிஸ்துவ பாதிரியார் மறுக்கிறார். எனவே அவள் தனது ஆண் நண்பர்களின் உதவியை நாடுகிறாள். அவர்களும் உதவமுடியாது என கழன்று கொள்கிறார்கள். இந்த நிலையில் அவளுக்கு ஆன்டனி நினைவுக்கு வர அவனுடைய உதவியை நாடுகிறாள். அவன் வீட்டுக்குப் போகிறாள். சாரா, ஆன்டனியின் அறையில் தங்குகிறாள்.

அறுவை சிகிச்சைக்கு இடையிலான காலங்களில் ஆன்டனி ஏன் குடிநோயாளியாக மாறினான் என்பதை புரிந்துகொள்ள முயல்கிறாள்.  சாரா, ஆன்டனி என இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அதுவே அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது.

சாரா, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு மைக் என்ற ஆணாக மாறினாளா இல்லையா, ஆன்டனியின் வாழ்க்கை என்னவானது என்பதே இறுதிப்பகுதி.

அனஸ்வரா ராஜன், சாரா தாமஸ் / மைக் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இவரின் நடிப்பால்தான் சற்றேனும் பார்க்கும்படி இருக்கிறது.  ஆன்டனியாக சாஜீவ் நடித்திருக்கிறார். இவரின் ஃபிளாஷ்பேக் சரியான உருவாக்கப்படவில்லை. அம்மா மீதான பாசத்தை இவர் வெளிப்படுத்தும் விதம் யதார்த்தமாக இல்லை. அன்பு, கோபமாக வன்முறையாக வெளியே வருகிறது. அம்மாவை இழந்த குற்றவுணர்ச்சி ஆன்டனியை உயிர் வாழும் பிணமாக மாற்றுகிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடத்தில் பரவாயில்லை. நடிக்க முயன்றிருக்கிறார்.

ஆண், பெண், பாலினம் சார்ந்த பாகுபாடுகள் ஆகியவற்றை பேச நினைத்த அல்லது பேசிவிடும் வாய்ப்புள்ள கதை. இறுதியில் சராசரி காதல் கதையாக மிச்சமாகிறது.

பெண், தன் பாலினம் சார்ந்து சமூகத்தில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள், அடையாளச் சிக்கல்கள் ஆகியவற்றை சாரா தாமஸ் பாத்திரம் (அனஸ்வரா ராஜன்) பேச வாய்ப்பிருந்தது. அதையும் அவர் பல்வேறு கேள்விகளாக ஆன்டனியிடம் வாய்ப்புள்ள போது கேட்டுக்கொண்டே இருக்கிறார்.   பதிலை அவராக தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்புகிறார். இறுதிக்காட்சியில் சாராவுக்கு ஆலோசனையாக சொல்லப்படும் கருத்துகள் முக்கியமானவை. சாரா பாத்திரம் முழுமையாக உருவாக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.  

குடும்பத்தில் மகளாக பெற்றோரிடம் கிடைக்காத அன்பு, சாராவுக்கு அறியாத மனிதராக இருந்து நண்பராக மாறிய ஆன்டனியிடம் கிடைக்கிறது. ஆன்டனியிடம் நேசம் பெருகியபிறகு சாராவின் மனதில் நடக்கும் போராட்டம் என்னவாக இருந்திருக்கும்?

 நான் பெண் என்பதற்காகவே நேசிக்கப்படுகிறேன். ஆணாக மாறினால் இதுபோல நேசம் கிடைக்காது என யோசித்து அறுவைசிகிச்சை அறையில் அழுகிறாள்.  ஆன்டனி அவளது விருப்பத்தை எதற்காக என ஒருமுறை மட்டுமே கேட்கிறான். பிறகு அவளை தடுக்கவோ, விருப்பத்தை மாற்றிக்கொள்ளவோ கூறுவதில்லை. அவனுக்கு அம்மா இறப்பிறகு பிறகு சாரா தாமஸ் மட்டுமே வாழ்வதற்கான பிடிப்பு.

அனஸ்வரா ராஜனின் பாத்திரம் மேலோட்டமான சித்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தைப் பார்க்கும் யாருக்கும் குழப்பமே வரும். அறிவு முதிர்ச்சியற்ற இளம்பெண். அதனால் இப்படி கேள்வி கேட்கிறாள் என. பெண்ணாக இருப்பதன் பிரச்னை பற்றி ஆன்டனிக்குச் சொல்வதற்காகவே, சாராவை சில ஆண்கள் உணவகத்தில் பின்புறமாக சீண்டுவது, அவளை மட்டுமே உற்றுப் பார்ப்பது ஆகிய காட்சிகள் காட்டப்படுகின்றன.

குறிப்பிட்ட லட்சியம் அல்லது நோக்கத்திற்காக போராடுகிறாள் ஆனால் அதில் பாலின பாரபட்சம் காட்டுகிறார்கள் என்றால் சாரா தாமஸின் பாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியதாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

ஹெசம் அப்துல் வகாப்பின் இசையை சொல்லாவிட்டால் எப்படி? இவரின் இசைதான் காட்சிகள் கடத்தமுடியாத உணர்வுகளை நமக்குள் கடத்துகிறது. ஜீவனே, நீ எனும் இரு பாடல்களை நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மயக்கம் என்ன சேட்டா?

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்