இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

 












கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா?

அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார்.

ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

‘’’இங்குள்ள பிள்ளைகள், பள்ளியை விட்டு நிற்கும்  இடைநிற்றல் அளவு அதிகம். மேலும் குழந்தை திருமணமும் அதிகம் நடக்கிறது. இதைத் தடுத்து வழிகாட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி  ஆசிரியர் யாரேனும் இங்கே தங்கியிருப்பது முக்கியம்’’ என ஆச்சரியமான காரணத்தைச் சொல்கிறார்.

பள்ளிகளுக்கான நூல்கள், சிறுவர்களுக்கான உடைகளை வாங்க கேளமங்களத்திற்கு சென்று வருகிறார். சிலசமயங்களில் தெரிந்த ஆசிரியர் மூலம் பொருட்களை வாங்கி வைக்க சொல்லிவிட்டு பிறகு அங்குசென்று பொருட்களை வாங்கி வருகிறார். நேரடியாக செல்லும்போது, பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு செல்கிறார் ஜான்சன்.

 தொடக்கப் பள்ளிக்கு வரும் பிள்ளைகள் சிலசமயங்களில் தொடர்ச்சியாக ஒருவாரம் கூட வராமல் நின்றுவிடுவது உண்டு. அவர்களைக் கூட்டி வர பள்ளி உள்ள இடத்திலிருந்து அரை கிலோமீட்டரிலுள்ள வீரபத்திரம் கோட்டைக்கு செல்லவேண்டிய தேவையும் உள்ளது. ஜான்சன், நேரடியாக பிள்ளைகளின் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். பிறகு பெற்றோரிடம் பிள்ளை வராத காரணத்தை தெரிந்துகொண்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருகிறார்.

மாணவர்கள், வகுப்பிற்குள் வரும் ஒவ்வொரு முறையும் உயிரெழுத்துகளை அவர்கள் சொல்லவேண்டும் என கூறிய ஜான்சனின் கட்டாய விதியால் இன்று இரண்டாவது, மூன்றாவது படிக்கும் மாணவர்களால் தமிழ் வாக்கியங்களை திணறல் இல்லாமல் வாசிக்க முடிகிறது. ‘’இதற்கு முன்னர் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர், எங்கள் பிள்ளைகளைப் பற்றி ஜான்சன் அளவுக்கு கவலைப்படவில்லை. பள்ளிக்கு ஜான்சன் ஆசிரியரான பிறகுதான் பிள்ளைகள் புதிய விஷயங்களைக் கற்கிறார்கள்’’ என்றார் கடம்பகுட்டை பஞ்சாயத்தைச் சேர்ந்த ஜே முருகேசன்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கனவை உறுதியாக வளர்த்துக்கொண்டு படிக்கவேண்டும் என ஜான்சன் நினைக்கிறார். அதற்கு உதவ விரும்புகிறார். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் அதை நிறைவேற்றட்டும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

மூலம் சிவகுரு

images - pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்