ஆராய்ச்சிக்காக திருமணத்தைக்கூட மறந்துபோகும் கல்லூரி பேராசிரியர் - ஃபிளப்பர் - ராபின் வில்லியம்ஸ்

 












ஃபிளப்பர்

ஆங்கிலம்

ராபின் வில்லியம்ஸ்

 

பிலிப் என்ற ஞாபக மறதி கொண்ட ஆராய்ச்சியாளர், ஆய்வு செய்து ஃபிளப்பர் என்ற புதிய பொருளைக் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அவரது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் விளைவுகளும்தான் கதை.

மேரி ஃபீல்ட் என்ற கல்லூரி நிதி இல்லாமல் தடுமாறுகிறது. அதை அதன் தலைவரான பணக்கார தொழிலதிபர் மூட நினைக்கிறார். அதைக் காப்பாற்ற அந்த கல்லூரி ஏதாவது கண்டுபிடிப்புகள் செய்து தன்னை தக்கவைக்க வேண்டும். அதேநேரம், கல்லூரி முதல்வர் சாராவின் காதலர் பிலிப் அதற்கான முயற்சியில் இருக்கிறார். பிலிப், ஞாபக மறதி கொண்ட பேராசிரியர். ஆனால் ஆராய்ச்சியில் கெட்டிக்காரர். அவரது நண்பர் , பிலிப்பின் ஆராய்ச்சியை காப்பி அடித்து… நேரடியாக சொல்லிவிடலாம். திருடி புகழ்பெற்றால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் பிலிப் வேலைசெய்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். கிறுக்குத்தனம் கொண்ட மனிதர்.

ஞாபக மறதியால் தனது காதலி சாராவுடன் சர்ச்சில் நடக்கும் திருமணத்திற்கு கூட போக முடியாத நெருக்கடி. இந்த நிலையில் அவரது ஆராய்ச்சியில் உருவாகும் ஃபிளப்பர் எப்படி சொந்த வாழ்க்கை நெருக்கடிகளை தீர்த்து, அவர் வேலை செய்யும் கல்லூரியின் பிரச்னைகளையும் களைகிறது என்பதே கதை. படத்தில் ராபின் வில்லியம்ஸ் இருக்கும்போது ஜாலிக்கென்ன குறை.

ராபின் வில்லியம்சின் வீட்டில் உள்ள ரீபோ எனும் உதவி ரோபோ, வீட்டை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் என அனைத்துமே பார்க்க ரசிக்க சுவாரசியமாக உள்ளது. அதிலும் ரீபோ சூழலுக்கு ஏற்ப பல்வேறு காட்சிகளை தனது சிறு திரையில் காட்டுவது அசத்தல்.

படம் குழந்தைகளுக்கான நகைச்சுவை படம்தான். அதிலும் ராபின் வில்லியம்ஸ், தனது காதல் உறவு முறிந்துபோனதை நினைத்து வருத்தப்பட்டு பேசும் காட்சி நெகிழ்ச்சியானது. படத்தில் இறுதியில் காட்டும் காட்சி இன்று நிஜமாகிவிட்டது. மணப்பெண் ஓரிடத்திலும் மணமகன் ஓரிடத்திலும் இருந்துகொண்டு கணினி மூலம் மணம் செய்வது இன்று பழகிவிட்டது. படத்தில் அதைக் காட்சியாகவே காட்டியிருக்கிறார்கள். பிலிப்புக்கு ஞாபகமறதி இருப்பது சாராவுக்கு தெரியும். எனவே, அவரே கல்யாண நேரத்திற்கு பிலிப்பை நெருங்கிய உறவினர்கள் மூலம் கூட்டி வந்து மணம் செய்துகொண்டிருக்கலாமே? இரண்டுமுறை திருமணம் ரத்தாகி, அதைச் சொல்லி பிறகு மூன்றாவது முறையும் திருமணம் ரத்தாகும் சூழல் வரை ஏன் செல்லவேண்டும்? வேறு வழியில்லை. அப்படி நடந்தால்தான் கதை நகரும்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் பாத்திரங்கள் ரீபோ, பிலிப்பின் எந்திர உதவியாளர். வடிவம் எந்திரமாக இருந்தாலும் அல்காரிதத்தில் இயங்கினாலும் கூட பிலிப்பின் மன உணர்வுகளை புரிந்துகொண்ட நண்பன். அவருடன் மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து நிலைகளிலும் கூடவே பயணிக்கிறது. தனது உணர்வுகளை சிறு திரை மூலம் வெளிக்காட்டுகிறது. இப்படி ரீபோ வரும் அனைத்துகாட்சிகளிலும் நகைச்சுவை அல்லது சிறு புன்னகையேனும் நமக்கு வந்துவிடுகிறது.

ரீபோ, பிலிப் சாரா மீது கொண்டுள்ள காதலை பேசும்போது பதிவு செய்து அதை சாராவின் வீட்டுக்குப் போய் போட்டுக்காட்டுவது சிறப்பான காட்சி.

இங்குதான் நட்பால் எந்திரம் புரிந்துகொள்வதை காதலால் புரிந்துகொள்ள முடியவில்லையோ என தோன்றுகிறது. இயக்குநர் இதை மனதில் நினைத்து செய்திருப்பாரா என்று தெரியவில்லை. ரீபோ திருடர்களால் உடைக்கப்பட்டு பிறகு கணினி வழியாக பேசும் காட்சியும் சிறப்பாக உள்ளது.

இதற்கடுத்து, ஆராய்ச்சியாளர் பிலிப்பின் வீட்டருகில் உள்ள சிறுவன். இவன் வீட்டு ஜன்னல் அருகேதான் இரு அடியாட்கள் வானத்தில் எம்பி பிறகு கீழே வந்து விழுவதும், ஆராய்ச்சியாளர் பிலிப் தனது காரில் பறந்து வந்து மரத்தில் சிக்கிக் கொண்டு மீள்வதும் நடைபெறுகிறது. இவர்களைப் பார்ப்பதும், அதிர்ச்சியில் கனவா, நினைவாக என தெரியாமல் அலறுவதும் என சிறுவன் நடிப்பில்  அதகளப்படுத்தியிருக்கிறார்.

நெகிழ்வுத்தன்மை வாழ்க்கைக்கும் நல்லது

கோமாளிமேடை டீம்                    

Release date: 26 November 1997 (USA)
Director: Les Mayfield
Box office: 17.8 crores USD
Budget: 8 crores USD

நன்றி 
விக்கிப்பீடியா 

கருத்துகள்