செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

 









மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது.

அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம்.

பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும்.

வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம்.

பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இருந்தால் அந்த செய்தியை எப்படி எழுதுவீர்கள் என யோசித்து திட்டமிடுங்கள்.

அரசு அல்லது தனியார் அமைப்பு, நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு செய்தியை வெளியிடுவது இதழியல் அறமல்ல. அச்சு, காட்சி ஊடகம் என எதில் பணியாற்றினாலும், இந்த முறையில் உண்மையான பத்திரிகையாளர்கள் இணைய மாட்டார்கள்.

மக்களின் பயத்தை ஊதிப் பெரிதாக்கி அதை காசாக்குவது மலினமான குணம். நீங்கள் எழுதும் செய்தி மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவுறுத்தலாக இருக்கவேண்டும். நோயாளிகள் அதிசயமான முறையில் குணம் காண்கிறார்கள். நினைத்துப் பார்க்க முடியாத சாத்தியம் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்பு என போலி நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்க கூடாது. எதையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே எழுத வேண்டும்.

 


கருத்துகள்