உண்மை மதிப்பை விட பலமடங்கு பங்கு மதிப்பு உயர்ந்தால்.. - அதானி மோசடி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை
1
மோசடி மன்னன் – அதானி
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 – தமிழாக்கம்
இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலதிபர்கள், பொறியாளர்கள்,
தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்டு. இந்த அம்சங்கள்தான் உலகளவில்
இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக மாற்றி வருகிறது. இந்தியப் பொருளாதாரம், அதன் தொழில் வளத்திற்கு முதலீடுகள்
பெருமளவு கிடைக்கும் ஆதாரமாக பங்குச்சந்தையைப் நம்பியிருக்கிறது. மக்கள், பங்குச்சந்தையில்
நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை நாளிதழ்களிலும், டிவி சேனல்களின் வழியாகக் கூட அறிவது
குறைவே.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின்
தலைவர், இயக்குநர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் பற்றி நேர்மையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள்
உடனே சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள்.
தொழில் நிறுவனங்கள் பற்றி எதிர்மறையாகப் பேசும், விமர்சிக்கும்
பங்குச்சந்தை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி பத்திரிகையாளர்களுக்கு
அச்சுறுத்தலும் நெருக்கடியும் உள்ள சூழ்நிலையில் பங்குச் சந்தையில் நடக்கும் பெருநிறுவன
மோசடிகள் பற்றி மக்களுக்கு செய்திகள் கிடைக்காமல் போகிறது.
நீங்கள் இனி வாசிக்கப்போகிற தகவல்கள், பெருநிறுவன தொழில்
வரலாற்றில் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தரக்கூடிய மோசடிகளில் ஒன்றைத்தான்.
பல்லாண்டுகளாக அதானி குழுமத்தில் நடைபெற்று வந்த வர்த்தக
மோசடிகள், பங்கு விற்பனை முறைகேடுகள், நிதி மோசடி ஆகியவற்றைப் பற்றித்தான் ஹிண்டன்பர்க்
ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கை விளக்குகிறது.
அதானி குழுமம், தனது மோசடிகளை இந்திய ஆளும் அரசில் உள்ள
செல்வாக்கான மனிதர்கள் மற்றும் உலகளவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உதவியோடு செய்து
வந்துள்ளது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தை மோசடிகளை, சிறுதொழில் செய்வதைப்
போல செய்து வருகின்றன.
அதானி குழும வளர்ச்சிக்கான மோசடியில், இந்திய அரசமைப்பின்,
பல்வேறு அடுக்குகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியில்
பணியாற்றிய பல்வேறு அதிகாரிகளிடம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு பேசியது. இதில் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில், செபி அமைப்பு மோசடி செய்த அதானி குழுமம் மற்றும் தனிநபர்களை தண்டிப்பதை விட
அவர்களை காப்பாற்றவே முயற்சி செய்துள்ள உண்மை தெரிய வந்தது.
அதானி குழுமம்
இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய வணிக குழுமம். இதன்
சந்தை மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இந்தியாவில் இயங்கும் இரண்டாவது பெரிய
வணிக குழுமமாக உள்ளது. உலகளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின்
தலைவர் மற்றும் இயக்குநரான கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
அதானி குழுமத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட
நிறுவனங்களின் எண்ணிக்கை 9. இதில் முக்கியமான நிறுவனங்கள் என ஏழு நிறுவனங்களைக் கூறலாம். இவற்றின் மொத்த மதிப்பைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.
இவையன்றி, அதானி குழுமத்திற்கு சொந்தமாக ஏராளமான தனியார் நிறுவனங்கள், குடும்ப அறக்கட்டளை
அமைப்புகள் உள்ளன.
கௌதம் அதானி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், அதானி
குழும பங்குகளின் விலை உயர்வால் கடந்த மூன்றே ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களுக்கும்
மேல் வருமானம் பெற்றுள்ளனர்.
அதானி குழுமம் நிறைய தொழில்களை செய்துவருகிறது அதில்
முக்கியமாக விமான நிலைய மேம்பாடு, சுரங்கங்கள், தகவல் மையங்கள், மின்சார நிலையங்கள்
ஆகியவற்றை கவனம் குவித்து நடத்தி வருகிறது.
பட்டியலிடப்பட்ட ஏழு அதானி நிறுவனங்களின் பங்கு விலை
கடந்த மூன்று ஆண்டுகளாக நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. இதன் விளைவாக,
அதானி குழுமம், இந்தியாவில் முக்கியமான பெரிய நிறுவனமாக வரிசைப்படுத்தப்படும் அளவுக்கு
அதன் சொத்து மதிப்பு அதிகரித்தது.
அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய இரு
நிறுவனங்கள் நிஃப்டி 50 இண்டெக்ஸிலும், எம்எஸ்சிஐ இந்தியா இண்டெக்ஸில் அதானியின் ஆறு
நிறுவனங்களும் இடம்பெற்றன. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்படும இந்திய பெரு
நிறுவனங்களில் இருந்து சொத்து மதிப்பு அடிப்படையில் பெரிய நிறுவனங்களை நிஃப்டி 50 பட்டியலில் சேர்க்கிறார்கள்.
அதானி நிறுவனங்களின் மதிப்பு உயர்வு
பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களுமே,
அதன் உண்மை மதிப்பை விட 85 சதவீதம் அதிக விலைக்கு மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வணிகப் பரிவர்த்தனை கணக்குளைப் பார்த்தாலே,
இவற்றின் பங்குகள் அதன் உண்மை மதிப்பை விட அதிக விலைக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன
என அறியலாம்..
பொதுவாக அடிப்படை கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் குறைந்த
விலை மதிப்பு கொண்டவையாகவே இருக்கும். எனவே, மெதுவாகவே பங்குகளின் விலை உயரும். ஆனால்
அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை உயர்வு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளுடன்
போட்டியிடும் அளவுக்கு வேகமாக இருந்தது.
அதானி குழும பங்கு மதிப்பு உயர்வு |
அதானி குழும நிறுவனங்கள் அதிகளவு கடன் சுமை கொண்டவையாக
உள்ளன. கடந்த காலத்தில் அதானி குழும நிர்வாகிகள் நிறுவனத்திற்காக முதலீட்டு நிதி பெறுவதில்
இந்திய அரசின் விதிகளை மீறியுள்ளனர். இதை ஒழுங்குமுறை அமைப்பான செபி, அதானி குழுமம்
மீது பதிவு செய்துள்ள வழக்குகள் மூலம் அறியலாம்.
நிறுவனத்தை வாங்குதல், பங்குகளைக் கையகப்படுத்துதல்,
பங்குகளின் விலையை அதிகரிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக அதானி குழுமம் தவிர
வேறு எந்த நிறுவனமாக இருந்தாலும் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்று ரிசர்வ்
வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடன் பெற்றுள்ள அளவு என்ற வகையில், அதானி குழும நிறுவனங்கள்
பெற்றுள்ள கடன் விகிதம், அதன் சக தொழில்துறை நிறுவனங்களோடு ஒப்பிட்டாலும் மிக அதிகம்.
இந்த வகையில் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள், எதிர்மறையான பணப்புழக்க
அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இதன் அர்த்தம், நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்பட்டு
முடங்கலாம் என்பதேயாகும்.
அதானி குழுமத்திலுள்ள ஐந்து நிறுவனங்கள், கரன்ட் ரேஷியோ அளவில் நிறுவனத்தை நடத்துவதற்கான நிதி
பலத்தை 1.0 க்கும் கீழாக கொண்டுள்ளன. இதனால் நிறுவனத்தின் செயல்பாடு, எளிதில் பாதிக்கப்படும்
அபாயம் அதிகம்.
அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதிக
பணப்புழக்கம் கொண்ட நிறுவனமாக அதானி போர்ட்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் 2022ஆம் ஆண்டு
அறிக்கைப்படி, 86 பில்லியன் டாலர்களை தனது சேமிப்பு நிதியாகக் கொண்டுள்ளது. அதானி போர்ட்ஸ்
நிறுவனம் மட்டுமே அதானி குழுமத்தில் சற்று நம்பிக்கையான அளவில் பணப்புழக்கம் கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதக் கணக்குப்படி, 52 பில்லியன் டாலர்களை நிதியாகக் கொண்டுள்ளது.
வணிக சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனம்,
ஃபிட்ச் குழுமம். இதன் வருமான ஆய்வு நிறுவனமான கிரடிட்சைட்ஸ், அதானி குழுமம் பற்றிய
ஆய்வைச் செய்தது. ஆய்வு முடிவுகளை அறிக்கையாக தொகுத்து 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
வெளியிட்டது.
இதில், அதானி குழும நிறுவனங்களில் அதிகளவு கடன் உள்ளது
என குறிப்பிட்டதோடு, தொழிலதிபரான அதானிக்கு கடன் சிக்கல் என்றும் தெளிவாக விளக்கியிருந்தது.
ஆனால் இந்த அறிக்கையின் தொனி, 2022ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் மங்கிவிட்டது. கிரடிட்சைட்ஸ் நிறுவனம், அதானி குழுமத்தை சந்தித்து
பேசியதுதான் இதற்கு காரணம். ஆனாலும் கூட தனது ஆய்வு உண்மைகளில் சிலவற்றை கிரடிட்சைட்ஸ்
மாற்றிக்கொள்ளவில்லை.
தற்போது வெளியாகியுள்ள கிரடிட்சைட்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில்,
மக்கள் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்குவதற்கான முதலீட்டு பரிந்துரைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
அதானி குழும நிறுவனங்கள் தொடர்ச்சியாக விரிவாக்க பணியில் உள்ளன. மேலும், அவற்றில் பெருகிக்கொண்டே
வரும் கடன் அளவு, குழும நிறுவனங்களின் நீண்டகால செயல்பாட்டிலும், பணப்புழக்கத்திலும்
பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனங்கள் கடன் பெறும் அளவு கூடிக்கொண்டே
சென்றால், கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ‘’அதானி, பல்வேறு
நிறுவனங்களின் பங்குகளை மலிவான விலைக்கு வாங்கிவிடும் திறமை கொண்டவர். ஆனால் இப்படி
வாங்குவதால் நிறுவனங்களின் கடன் அளவு கூடிக்கொண்டே வரும். எதற்காக இப்படி கடன் பெறுகிறார்
என்பதை ஆய்வு செய்யவேண்டியது அவசியம் ‘’ என்றார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரியொருவர்.
2021ஆம் ஆண்டு
அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை தயாரித்து அனுப்பியது. இதில், அதானி
குழும உறுப்பினர்களுக்கு செய்தி ஒன்று கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே செய்துகொண்ட நிதி
ஒப்பந்தங்களில் தேவையைப் பொறுத்து காலத்திற்கு ஏற்ப விதிகள் மீறப்படும். எதிர்காலத்திலும்
நிதி முதலீடு சார்ந்த விதி மீறல்கள் நடைபெறலாம்.(ப.69)
இப்படி விதிகள் மீறப்படுவதால், கடன் வழங்கியோர் கடனைக்
கட்டவில்லை என்றோ அல்லது கடன்தொகையை விரைவில் வழங்குமாறு கூறலாம். அப்படியொரு சூழ்நிலை
ஏற்பட்டால், கடன் வழங்கியோருக்கு கடனை திரும்பத் தர, அதானி குழுமம் எவ்வித உறுதியும்
அளிக்கமுடியாது. (ப.69,70) என கூறப்பட்டிருந்தது.
அதானி குழும நிறுவனங்கள், ஒன்றையொன்றைச் சார்ந்து பிரிக்கமுடியாதபடி,
நெருக்கமாக இணைந்தே இயங்கி வருகின்றன. பிற குழும நிறுவனங்களைப் போல பட்டியலிட்ட நிறுவனங்களின்
வகையிலும் கூட அதானி நிறுவனங்கள் தம் திறன்மிக்க செயல்பாடு அல்லது தோல்வி அடிப்படையில் தனித்துவமான நிறுவனங்களாக இல்லை.
அதானி குழுமத்தில் உள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நிதி
சார்ந்த நிலைகுலைவு ஏற்பட்டால் போதுமானது. குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்கள் அடுத்தடுத்து
சரிவைச் சந்திக்க நேரிடும். இறுதியில் ஒட்டுமொத்த அதானி குழுமமே பாதிக்கப்படும்.
முருகானந்தம் ராமசாமி
ஆங்கில அறிக்கையை கீழேயுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்...
https://hindenburgresearch.com/adani/
குறிப்பு -
தமிழாக்கத்தில் அதானி குழுமம் பற்றிய மோசடி விஷயங்கள் புரியவில்லை எனில் இந்த வார ஆனந்தவிகடனில் ஆசிரியர் தி.முருகன் எழுதியுள்ள கட்டுரையை வாசிக்கலாம். எளிமையாக என்ன நடந்துள்ளது என்பதை விளக்கியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக