விலங்குகளை கால்நடை பராமரிப்பாளர் நேசிக்கத்தொடங்கும் புள்ளி! - பால்து ஜன்வர் - பசில் ஜோசப், ஸ்ருதி

 


பால்து ஜன்வர்

பால்து ஜன்வர்

பால்து ஜன்வர்



ஷம்மி திலகன் - பால்து ஜன்வர்









பால்து ஜான்வர்

மலையாளம்

இயக்குநர் - சங்கீத் பி ராஜன்

பசில் ஜோசப், திலீஷ் போத்தன், ஷம்மி திலகன்

 

அனிமேஷன் நிறுவனம் தொடங்கி அதில் தோல்வி கண்ட இளைஞன், பிரசூன் கிருஷ்ணகுமார். அவருக்கு அரசு வேலையாக கிராமம் ஒன்றில் கால்நடைகளை சோதித்து நோய் தீர்க்கும் வேலை கிடைக்கிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்கு செல்பவனின் வாழ்க்கையே படத்தின் கதை.

பிரசூன், நகரத்து நாகரிக ஆள். அவருக்கு கிராமம், அங்குள்ள மனிதர்கள், விலங்குகளை நேசிக்கும் பாங்கு என அனைத்துமே புதிது. கூடுதலாக அவரின் தலைவராக இருப்பவர், எம்எல்எம் நிறுவனங்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கும் பிரசூனுக்கும் விரைவில் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் பணி சார்ந்து அவருக்கு பெரிய அறிவு கிடையாது. அவரின் பெண்தோழிதான் பிரசூனுக்கு நிறைய உதவிகளை செய்கிறாள். பிரசூன் கால்நடை கண்காணிப்பு ஆய்வாளராக வேலையை தீவிரமாக செய்ய நினைக்கிறார். ஆனாலும் மருத்துவ நிலைய தலைவர், உள்ளூர் வார்டு உறுப்பினர் ஆகியோரின் அரசியல், சுயநலம் சார்ந்த காரணங்களால் நிறைய  பேரிடம் பிரசூன் அவமானமும் பட்டுக்கொண்டிருக்கிறான்.

நகரம், அனிமேஷன், நாகரிக உடைகள் என்று திரியும் பிரசூன், விலங்குகள் மீது நேயம் கொண்டு எப்படி மாறுகிறான் என்பதை படம் பல்வேறு காட்சிகளாக விளக்குகிறது. அவனாக ஈடுபாடு கொண்டு பசுவையும் கன்றையும் காப்பாற்றும் காட்சிதான் இறுதிக்காட்சி.

படம் நெடுக அங்கதத் தன்மை அனைத்து பாத்திரங்களின் வழியாகவும் வெளிப்படுகிறது. அதுவே படத்தை மாறுபட்ட இயல்பு கொண்டதாக தனித்துவமாக மாற்றுகிறது.

அனைத்து உயிர்களுக்கும் மேலாக மனிதர்களை நினைத்துக்கொண்டிருக்கும் அகந்தையை, ஆணவத்தை உணர்ந்து அதை களையும் நொடியில் பிரசூன் நினைத்துப் பார்க்க முடியாத தன்னிறைவை அடைகிறான். இறுதிக் காட்சியில் கன்றை நெஞ்சோடு அணைத்துப் பிடித்து தூக்கி வரும் காட்சி அதற்கு உதாரணம்.

பிரசூன் கிருஷ்ணகுமார் பாத்திரத்தில், பசில் ஜோசப் நன்றாக நடித்திருக்கிறார். கூடவே கிராமத்து பாதிரியார் வேடத்தில் திலீஷ் போத்தன் நடித்திருக்கிறார். எப்போதும் பட்டை சாராயத்தை தேடும் வார்டு உறுப்பினரின் பாத்திர உருவாக்கம்  சிறப்பாக உள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் தன்னை காப்பாற்றிக்கொள்ள அவர் செய்யும் உத்திகள் ஆஹா… ஏறத்தாழ இவரைப் போலவே கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மதத்தை உன்னதமாக போற்ற வைக்கும் பரப்புரைகளை பாதிரியார் செய்கிறார்.

எல்லாம் ஓருயிர்தான் நேசிக்க மனமிருந்தால்…

கோமாளிமேடை டீம்

 

 


கருத்துகள்