உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)
உறவுப்பாலம்
இலங்கை சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட்
விலை 150 பக்கம் 254
நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள், தமிழ் சிறுகதைகள், ஆங்கிலச் சிறுகதைகள். இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம், ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம்.
மொத்த கதைகள் இருபத்தைந்து அதில், 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம். மோசமில்லை. சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும், இன்று என் மகன் வீடு திரும்புகிறான், அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன.
முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது. பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை. இதற்குள், அங்கு நடைபெறும் பிரச்னைகள், அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது.
இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது. இக்கதையை அங்கு நடைபெறும் காவல்துறை அடக்குமுறை எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள கட்டாயம் வாசிக்கலாம். இதில் மகனை காணாமல் தேடும் தாயின் பரிதவிப்பு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மகனை காணாமல் அவனது பல்கலைக்கழகத்திற்கு முன்னே நின்று கொண்டு அவனைத் தேடும் தாயின் அவலமான காட்சியும், போர் காரணமாக இப்படி இளைஞர்கள் காணாமல் போவதையும் சொல்லுகிறது. நேரடியான அரசியல் கதை கிடையாது. ஆனால் இந்த சம்பவம் அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளை அறியும் ஆவலை ஏற்படுத்துகிறது.
அக்கா - சரத் விஜய சூர்யா எழுதிய கதை. சு. வேணுகோபால் எழுதும் வகையிலான கதை. உறவுகளுக்குள் நேரும் முறைதவறிய உறவுமுறையை காட்டுகிற கதை. கல்யாண வாழ்க்கை சுகத்தை கொடுக்காமல் சுமையாக பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை தோளில் ஏற்றிவிட அதன் விளைவாக, தனக்கான சுகத்தை தேடி அடைய நினைக்கும் பெண்ணின் கதைதான் அக்கா. உறவுமுறைகளுக்குள் நடைபெறும் தலைகீழான மாற்றத்தை காணும் காட்சியாக அமைதியாக பார்த்து கதைசொல்லியாக தம்பி இருக்கிறான். இயலாமையும பரிதவிப்புமான கதையின் இறுதிப்பகுதி சரியா, தவறா என எந்த முடிவையும் படிக்கும் வாசகருக்கு எடுக்கும் வாய்ப்பை வழங்குவதில்லை. கதையை நமக்கு சொல்லும் தம்பி போலவே அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறோம்.
தமிழ் சிறுகதைகளில் சொல்லுவதற்கு ஏதுமில்லை.
ஆங்கிலச் சிறுகதைகளில் ஒப்பாரி கதை நன்றாக எழுதப்பட்டுள்ளது இது சாதி சார்ந்த அழுத்தம் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை சொல்லும் கதை. பெரிய மனிதர் இறந்துவிட்டார். அவருக்கு அவரின் செல்வ வளம், செல்வாக்கு ஆகியவற்றை ஊரூக்கு சொல்லும்படி ஒப்பாரி பாட்டு பாடவேண்டும். ஆனால் பாட்டுப்பாட சொல்லிவிட்ட பெண்கள் வரவில்லை. என்ன காரணம் என்று தேடிப்போனவர் என்ன செய்தார் என்பது இறுதிப்பகுதி. தங்கள் ஆயுளின் ஒட்டுமொத்த துன்பத்தையும் பாடலில் இறக்கி வைப்பதுபோல ஒப்பாரி இறுக்கமாக உள்ளது.
எல்லோரும் ஒன்று சேர்ந்தபோது என்ற கதை மௌரீன் சேனவிரத்ன என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ளது. இக்கதை, அதிக சோகம், அதீத மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு உள்ளாகும் பெண்ணின் மனம் எப்படி பேதலித்துப் போகிறது என்பதை பொன்மணியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவது போல எழுதப்பட்டுள்ளது. இயக்கத்தில் சேரும் பிள்ளைகள், வெளிநாட்டில் வாழும் பெண்பிள்ளை என யாருமில்லாத நிலையில் வயதான காலத்தை பொன்மணி கழிக்கிறார். இது அவருடைய உளவியலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அவரது பிள்ளைளள் திடீரென ஒன்று கூடும்போது, அவரின் மனநிலை இன்னும் மோசமான நிலைக்கு செல்லுகிறது. இதனை அவரது பிள்ளைகள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதே இறுதிப்பகுதி. அன்புக்காக ஏங்கும் மனம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் கதை இது.
அடுத்து ட்ரம் கலைஞன் - காமினி அக்மீமனா, குரங்குகள் - புண்யகண்ட விஜேநாய்க
என்று இருகதைகள் வசீகரமாக எழுதப்பட்டுள்ளன.
ட்ரம் கலைஞன் கதை, ஊருக்குள் புதிதாக குடிவரும் இளைஞன் எப்போதும் குறிப்பாக இரவில் இசைக்கிறான். இசை, தேர்ந்ததாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களின் தூக்கம் கெடுகிறது. ஆனால் இதனை நேரடியாக அவனிடம் யாரும் சொல்லுவதில்லை. அக்கலைஞனது வருகையால் அப்பகுதி முழுக்க எரிச்சலும், இயலாமையுமாக மக்கள் பேசித்திரிகிறார்கள். அவன் ஏன் ட்ரம் இசைக்கிறான் என்ற மர்மத்தை சொல்லுவது போல, அங்குள்ள சூழலை படம்பிடித்தது போல எழுதியிருக்கிறார் ஆசிரியர் காமினி. புனைவா, நிஜமா என்று தோன்றும்படியான மர்ம அழகு கொண்ட சிறுகதை இது.
குரங்குகள் கதை, மனத்தின் இயல்பான தன்மைக்கும் அதை அடக்கும் வெளிப்புற சூழல்களுக்குமான போராட்டத்தை ஆசிரியர் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஏறத்தாழ அதனை சிறப்பாகவே சொல்லிவிட்டார் எனலாம். பௌத்த துறவ மடத்தில் வாழும் சிறுவனுக்ககு துறவு என்பது திணிக்கப்பட்டதாக உள்ளது. சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை பார்த்து வியப்பவனுக்கு குரங்குகள் புதிய நண்பர்களாக வந்து சேருகின்றன. அவை அவனது எந்த ருசியுமற்ற வாழ்க்கை மாற்றுகிறது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை சொல்லிச்செல்கிறது கதை.
நன்றி
பாலபாரதி
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக