விரும்பிய வேலையைச் செய்தாலே பணம் தேடிவரும்! - ரிச்சர்ட் பிரான்ஸன் - டோன்ட்கேர் மாஸ்டர் - என். சொக்கன்
வாசிப்பு....
ரிச்சர்ட் பிரான்ஸன்
டோண்ட்கேர் மாஸ்டர்
என்.சொக்கன்
கிழக்கு பதிப்பகம்
வர்ஜின் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர் இவர் என்று ரிச்சர்டை காட்டினால் யாருமே நம்ப மாட்டார்கள். காரணம், கோட் போட்டு டை கட்டி போஸ் கொடுக்கும் ஆள் கிடையாது. மீட்டிங்குகளில் பாதியிலேயே பலூனில் பறக்க போய்விடுவார். பேசுவதிலும் பெரிய விற்பன்னர் கிடையாது.
ஆனால் உலகில் வர்ஜின் குழுமங்கள் தொடங்காத நிறுவனங்கள் கிடையாது. ஏராளமான நிறுவனங்களை மனம்போன போக்கில் தொடங்கவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வென்றவர், தற்போது, விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் முயற்சிகளை செய்தபடி இருக்கிறார்.
நூலின் தொடக்கம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடக்கம் போல எழுதப்பட்டுள்ளது. பலூனில் பறந்துகொண்டிருப்பவர், கடலில் குதித்தாரா அல்லது பலூனில் உள்ள எரிபொருள் இருக்கும்வரை அதிலேயே பயணித்து கீழே விழுவாரா என படிக்கும்போதே பதற்றம் ஏற்படுகிறது.
ரிச்சர்ட் பிரான்ஸன் |
நூலில் இதுபோல ஏராளமான சம்பவங்கள் உள்ளன. இந்த ஒன்றை மட்டுமே சொல்வதற்கு காரணம், இது தொடக்கம்தான் என்பதற்காகவே.
ரிச்சர்ட் தான் வாழ்வில் முதல் வெற்றி பெற்றது ஸ்டூடண்ட் இதழ் மற்றும் வர்ஜின் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில்தான். இதழைப் பொறுத்தவரை சிறப்பாகவே உருவாகி வந்தால் போதும் என நினைத்தார். பின்னாளில் அதனை மாற்றிக்கொண்டு பிஸினஸை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மாற்றிக்கொண்டார். மாறாதது, சேவையை புதிதாக ஆன்மா கெடாமல் பார்த்துக்கொண்டதுதான். இதனால்தான் வர்ஜின் நிறுவனம் பாடல், விமான சேவை, வாகன சேவை, பைக் சேவை என பல்வேறு நிறுவனங்களாக தொடங்கினாலும் அவையெல்லாமே வெற்றி பெற்றுள்ளன.
அதற்கும் அவர் சொல்லும் வாசகம் ஒன்றுதான். பணத்தின் பின்னே போகாதீர்கள். விரும்பிய வேலையை மனப்பூர்வமாக செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தேவையான பணத்தைக் கொண்டுவரும் என்று சொல்லியிருப்பார். அனைத்து தொழிலதிபர்களுக்கும் ஊக்கமூட்டும் வார்த்தை இது.
நூல் மொத்தம் 174 பக்கங்கள்தான். எனவே, வேகமாக வாசித்துவிடலாம். ஈவ் பிரான்ஸனிடம் கற்றுக்கொள்ளும் பாடங்களை மகன் ரிச்சர்ட் பிரான்ஸன் மறப்பதே இல்லை. அதுவே. வர்ஜின் அட்லாண்டிக் சர்வீஸ் இழப்பின்போது கைகொடுக்கிறது. எதை இழந்து எதை பெறுவது என கற்றுக்கொடுக்கிறது.
நூலில் அவரது வாழ்க்கை நமக்கு சொல்வது, சிறப்பான திட்டமிடுதல் பலன் கொடுக்கும்தான். ஆனால் மிகவும் யோசிக்காதே, சரியான சேவையை உன்னால் கொடுக்கமுடியும் என தோன்றினால் குதி, குதித்தே விடு என்பதுதான்.
அசாதாரண துணிச்சல், பேரம் பேசும் திறன், கற்பனைத்திறன், நேர்மை ஆகியவற்றை மட்டுமே வைத்து ரிச்சர்ட் பல்வேறு விஷயங்களை சாதித்திருக்கிறார். நூலை சிறப்பாக எழுதியுள்ளார் என்.சொக்கன்.
ஒரு நிறுவனத்தை தொடங்கி அதனை நீண்ட நாட்களுக்கு எப்படி நடத்துவது என்பதை எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது இந்த நூல்.
கோமாளிமேடை டீம்
நன்றி
கணியம் சீனிவாசன்
கருத்துகள்
கருத்துரையிடுக