பூமிக்கு அடியிலுள்ள மர்மத்தை சீலன் நண்பர்கள் குழு கண்டுபிடித்ததா? - பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - பாலபாரதி

 


சென்னை புத்தக காட்சி 2021

நந்தனம் 



பூமிக்கு அடியில் ஒரு மர்மம் | Buy Tamil & English Books Online | CommonFolks


பூமிக்கு அடியில் ஓர் மர்மம்

யெஸ். பாலபாரதி

வானம் பதிப்பகம்

பக்கம் 164 ரூ. 140


விகடன் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியின் மற்றொரு சிறார் நாவல். கதை நடைபெறுவது நாகப்பட்டினத்தில். அங்கு வாழும் சிறுவர்கள் சீலன், புகழ்மணி, அன்வர் ஆகியோர்தான் நாயகர்கள். இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள சுயம்புநாதர் கோவிலிலுள்ள சுரங்கம் பற்றிய தகவல் கிடைக்கிறது. இவர்களோடு கண்ணன், ஜெமி, ஜெஸி ஆகியோர் இணைந்துகொள்கிறார்கள்

சுரங்கம் என்றாலே உடனே நமக்கு என்ன தோன்றும்? ஆகா, பொக்கிஷத்தை அடையப்போகிறோம் என்கிற கற்பனை சந்தோஷம்தானே? அதேதான் கதையின் மாந்தர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். 

கதையின் போக்கில் பாலபாரதி சொல்லும் பல்வேறு விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆட்டிச சிறுவனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குழு. அவனது செயல்பாடு வினோதமாக தோன்றினாலும் அவன்தான் குயிலானோடு இயல்பாக பழகுகிறான். அவனது நண்பர்கள் குயிலானை எதிரியாக பார்க்கும்போது கூட கண்ணன் அப்படி பார்ப்பதில்லை. 

அவனை விட்டுக்கொடுக்காத ஜெமி, ஜெஸி பாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

பாட்டியிடம் சீலன் பேசும் காட்சி முக்கியமானது. தகவல்தொடர்பில் நாம் பேசும் வார்த்தைகளை நாகரிகமாக பேசவேண்டுமா? அல்லது அடுத்தவருக்கு புரியும்படி பேசவேண்டுமா என்பதை சொல்லும் சொல்லாடல் முக்கியமானது. 

நாவலின் கதை தரங்கம்பாடி, சுயம்புநாதர் கோவில், சுரங்கம், அதில் பார்க்கும் ஓவியம் என நமக்கு எழுத்தில் அற்புதமான அனுபவம் தருகிறது. ஆனால் இதற்கு ஈடுகொடுத்து அதனை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் இடத்தில் பிள்ளையின் ஓவியங்கள் தடுமாறுகின்றன. 

நூலில் சில எழுத்துப்பிழைகள் திருத்தப்படுவது முக்கியம். ஆனால் அது வாசிப்புக்கு பெரியளவு இடைஞ்சல் கிடையாது. 

இன்று சிறார் நாவல்களில், கதைகளில் முஸ்லீம் பெயர்களில் சிறுவர்கள் வருவது எதனாலோ குறைந்துபோய்விட்டது. அதனை எழுத்தாளர் தீர்த்து வைப்பதோடு, பல்வேறு அறிவியல் சமாச்சாரங்களையும் இடையிடையே கதையில் புகுத்தியுள்ளளார். இது படிக்கும் சிறுவர்களுக்கு கதை எனும் அனுபவத்தோடு பல்வேறு தகவல்களையும் தெரிந்துகொள்ள உதவியிருக்கிறது. 


சிறப்பான அனுபவம் தரும் சாகச நாவல்

கோமாளிமேடை டீம்






 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்