பயனரின் தகவல்களை உளவறியும் ஃபெவிகான்ஸ்! - யார் தடுப்பது?
உளவு பார்க்கும் ஃபெவிகான்ஸ்!
இணையதளங்களில் பயன்படும் ஃபெவிகான்ஸ் (Favicons) மூலம் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இணைய உலாவியில் பல்வேறு வலைத்தள டேப்களை திறந்து வைத்திருப்பீர்கள். அதில் விக்கிப்பீடியாவை மட்டும் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? கிளிக் செய்யாமலேயே அறிந்துகொள்ளலாம். காரணம், அந்த டேப்பில் விக்கிப்பீடியா லோகோ இருக்கும். இப்படி வலைத்தளங்களை அடையாளம் காட்டும் சிறிய ஐகான்களுக்குத்தான் ஃபெவிகான் என்று பெயர்.
இப்படி திறந்து வைக்கும் வலைத்தளங்களில் உள்ள ஃபெவிகான்ஸ்கள், பயனரின் இணைய நடவடிக்கையைக் கண்காணிக்கிறது என இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை குற்றம்சாட்டியுள்ளது. ஒருவர் விபிஎன் அல்லது இன்காக்னிட்டோ வசதியை பயன்படுத்தினாலும் கூட இதனை தடுக்க முடியாது. இம்முறைக்கு சூப்பர் குக்கி என்று பெயர் சூட்டியுள்ளார் ஜெர்மனியைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜோனாஸ் ஸ்ட்ரெகில். ”இம்முறையில் ஒருவரின் வலைத்தள வருகை கண்காணிக்கப்படுவதோடு, இதனை பிற குக்கிகளைப் போல அழிக்க முடியாது” என்றார்.
தற்காலிக நினைவகத்தை அழித்தாலோ, ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்தினாலோ, கணினியை அணைத்துவிட்டு மீண்டும் இயக்கினாலும் கூட இதனை அழிக்க முடியாது. அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ஃபெவிகான் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதைப் படித்துதான் ஸ்ட்ரெகில், ஃபெவிகான்கள் மூலம் பயனரின் தகவல்களைப் பற்றி உளவறிய முடியும் என்பதை அறிந்துகொண்டிருக்கிறார். இதுபற்றிய முழுமையான விவரங்களை தனது வலைத்தளத்தில்(https://supercookie.me/workwise) பதிவு செய்துள்ளார்.
குறிப்பிட்ட வலைத்தளத்தின் முகவரியை தட்டச்சு செய்து அத்தளத்திற்குள் செல்லும்போது, அதன் வலைத்தள லோகோ கணினியிலுள்ள டேபில் தோன்றும். அப்படி தோன்றாதபோது, இணைய உலாவி, லோகோவிற்கான வேண்டுகோளை விடுக்கும். இப்படி சேகரிக்கப்படும் விவரங்கள் எஃப் கேச்சி (F-cache)எனும் கோப்பில் சேகரிக்கப்படுகின்றன. இதிலுள்ள விவரங்களை பிறர் அறியாமல் தடுக்க நம்மால் ஏதும் செய்யமுடியாது. இதனை இணைய உலாவி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.
தகவல்
Vice
https://www.vice.com/en/article/n7v5y7/browser-favicons-can-be-used-as-undeletable-supercookies-to-track-you-online
கருத்துகள்
கருத்துரையிடுக