தாத்தாவின் கடனை அடைக்க பொக்கிஷத்தை தேடிச்செல்லும் பேத்தி! - ஃபைண்டிங் ஓகானா
ஃபைண்டிங் ஓகானா!
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஹவாய்க்கு இடம்பெயருகிறது ஓர் குடும்பம். தாத்தாவின் வீட்டுக்கு வரும் சிறுமி, பொக்கிஷம் பற்றிய டைரியை தாத்தாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கிறாள். அப்புறமென்ன, பொக்கிஷ வேட்டைதான்.
படத்தின் கதையைப் பார்த்தால் ஏதோ இந்தியா ஜோன்ஸ் ஜூனியர் என்று பெயர் வைக்காமல் படம் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றும். ஆனால் படம் நெடுக குடும்ப பாசம், இயற்கை மீதான நேசம், முன்னோர்களுக்கு மரியாதை, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது என ஏராளமான சமாச்சாரங்களை வைத்து கண்கலங்க நெகிழ்ச்சியாக படம் சொல்கிறார்கள்.
நியூயார்க்கிலிருந்து வரும் குடும்பத்தின் டீன் ஏஜ் பையன், சிறுமி, அம்மா ஆகியோரோடு ஹவாய் தீவில் வாழும் தாத்தா, அவரின் நெருக்கமான இளம் பெண்ணும் அவளது தம்பியும்தான் கதை நாயகர்கள்.
ராபின்சன் பரௌன் என்ற தீவுக்கு வந்த வெள்ளைக்காரர், புனித குகையில் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கும் தகவலை நோட்டில் பதிவு செய்கிறார். ஆனால் உயிர்போகும் அபாயத்திலிருந்த அவரை சிறுமியின் தாத்தாவின் தாத்தாதான் தண்ணீர் கொடுத்து காப்பாற்றுகிறார். அதற்காகவே அந்த நோட்டை அவருக்கு பரிசாக கொடுத்துவிடுகிறார் ராபின்சன். தனது வீடு கூட அடமானத்தில் போய்விடும் அபாயத்தில் உள்ள தாத்தா, அந்த பொக்கிஷத்தை ஏன் எடுக்கவில்லை என்பதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை.
படத்தில் நடித்த சிறுமி, டீன் ஏஜ் பையன், அவனது காதலி, சிறுமிக்கு துணையாக வரும் கண்ணாடிச் சிறுவன், தாத்தா என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார். எப்படி பெரும் கலாசார மோகத்தில் தாய்மொழியை குழந்தைகள் மறந்துபோகிறார்கள் என்பதை தொடக்க காட்சியிலேயே உணர்த்திய இயக்குநருக்கு துணிச்சல் அதிகம்தான்.
டீன் ஏஜ் பெண்ணாக ஹவாயை விட்டுச்செல்லாமல் பாடகியாக நினைக்கும் பெண் சொல்லும் ஊர்ப்பாச வசனங்களும் சிறப்பாக உள்ளன. முன்னோர்களை புதைக்கும் இடங்களை எப்படி ஹவாய் மக்கள் பார்க்கிறார்கள் என்று சொன்னது முக்கியமானது.
இயற்கை நமக்கு கொடுத்த திறன்களை வைத்து பொருள் தேடுவதான் முக்கியம். பொக்கிஷ பேராசைக்கு எப்போதும் இயற்கையை பலி கொடுத்துவிடக்கூடாது என முடிந்தவரை அழுத்தமாகவே காட்சிரீதியாக சொல்லியிருக்கிறார். அதிலும் அண்ணன், தங்கை பாசக்காட்சிகள் சிறப்பாக உள்ளன.
சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போலாகுமா?
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக