மருத்துவத்தை மக்களுக்காக மாற்ற முயன்றதற்காக பழிவாங்கப்படும் சிறந்த மருத்துவன்! - டாக்டர் ரொமான்டிக் - முதல் பகுதி - கொரியா
டாக்டர் ரொமான்டிக்
மருத்துவம் மக்களுக்கானதா, மக்களில் செல்வந்தர்களாக உள்ளவர்களுக்காக என்பதைப் பேசும் படைப்பு.
டாக்டர் கிம் டீச்சர் |
முதல் காட்சியில் ஏழை ஒருவருக்கு மருத்துவம் தேவைப்பட்டும் அவருக்கு சிகிச்சை வழங்கப்படவிலை. காரணம், அங்கு வந்துள்ள விஐபி ஒருவருக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதால், அதைப்பற்றியே அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் சிகிச்சை கிடைக்காத மனிதர் இறந்துபோய்விடுகிறார். அவரது அம்மா, இயலாமையில் அழ, கோபம் கொள்ளும் அவரது மகன், அடுத்த நாள் பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு வந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறான். அப்போது அவனை தடுக்கும் மருத்துவர், அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, உன்னை அவமானப்படுத்தியவர்களை திறமையால் தோற்கடி என்று செய்தி சொல்லிவிட்டு காணாமல் போகிறார்.
அந்த சிறுவன் அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகளை மறக்கவே இல்லை. நாட்டிலேயே அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகிறான். குறிப்பாக தனது அப்பா இறந்துபோன மருத்துவமனையில் பணிக்கு சேருகிறான். அவனது லட்சியம், தனது திறமையை அந்த மருத்துவமனைக்கு நிரூபிப்பதுதான். ஆனால் அவனது தீர்க்கமான நேர்மை அங்குள்ள பலருக்கும் பீதியைத் தருகிறது. அங்குள்ள சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் யூன் இதனால் எரிச்சலடைகிறாள்.
டோல்டம் மருத்துவமனைக் காட்சி |
அவளுக்கும் இன்டெர்ன் மருத்துவர் காங்(மருத்துவராகும் பையன்தான்) முட்டிக்கொள்கிறது. ஆனால் சில நாட்களிலேயே காங்கிற்கு, யூனின் நல்ல நோக்கம் புரிபடும்படி சில சம்பவங்கள் நடக்கின்றன. அவனுக்கு அவள்மேல் காதலும் வருகிறது. அதற்குபிறகு அங்கு நடக்கும் பல்வேறு சதிகளால் காங், டோல்டம் எனும் பாடாவதி மருத்துவமனைக்கு தண்டனை காலத்திற்காக அனுப்பபடுகிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர் அவனுக்கு ஆச்சரியம் தருகிறார். அவர் ரௌடியா? மருத்துவரா? என அவனுக்கு எதுவும் புரிவதில்லை. காங்கிற்கு காதல் பூத்து அவன் அறுவை சிகிச்சை மருத்துவராகி மக்களுக்கு உதவ நினைக்கிறான். அதற்குள் அவனை சதிக்குள் சிக்க வைத்து வேறிடத்திற்கு அனுப்பிவிடுகிறான். அங்கு முன்னாள் காதலி யூனை சந்திக்கிறான். எதனால் அவள் அங்கு வந்தாள், அவள் உடல்நிலை வேறுமாதிரியும் உள நிலை வேறுமாதிரியும் உள்ளது. அதற்கு காரணம் என்ன? என்பதை மெல்ல அறிந்துகொள்ள முதல் பாகம் உதவுகிறது.
இப்பாகத்தின் இறுதியில் டீச்சர் கிம் என்பவர் யார் என்பதை காங், கண்டுபிடிக்கிறான். அதோடு கிம்மிற்கு நிறைய சவால்கள் வெளியில் காத்திருப்பதை அவன் அறியமாட்டான். அவனுடைய காதலுக்கும் எதிரி உருவாகியிருப்பதை கண்ணார பார்க்கிறான். அப்புறம்? … அடுத்த சீசன் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.
டாக்டர் யூனுடன் காங் |
டாக்டர் ரொமான்டிக்கில் ஹீரோ, டீச்சர் கிம்தான். காங்கிற்கு தொடக்க காட்சிகள் கிடைத்தாலும், மடோனா பாட்டை அலற விட்டு ரசிப்பது, எப்போதும் கேசினோவில் இருப்பது, எமர்ஜென்சி வார்டிலேயே ஆபரேஷன் செய்வது, உதவியாளர்களை கண்டமேனிக்கு திட்டுவது என பின்னி எடுக்கிறார் இந்த நடிகர்.
யூனாக நடித்தவர், பெரும்பாலும் முதல் இரண்டு எபிசோடுகளில் ஆக்ரோஷமாக இருந்தாலும் காங், தனது காதலை படாரென சொல்லியபிறகு அவளால் வெட்கத்தை ஒளிக்கவே முடியவில்லை. அதற்குப் பிறகுதான் அவளுக்கு கொடூரமான விபத்து நடக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழிந்தபிறகு மோசமான மனநிலை பாதிப்பு, விரல்கள் இயக்கம் சீர்படாமலும் டோல்டம் மருத்துவமனையில் இருக்கிறாள் யூன்.
டோல்டம் மருத்துவமனை நிர்வாக அதிகாரி, தலைமை நர்ஸ், இயக்குநர் என அனைவருமே அசத்தியிருக்ககிறார்கள். டோல்டம் நகரை விட்டு ஒதுங்கியுள்ள மருத்துவமனை என்பதால் இதில் பயன்படுத்தியிருக்கும் கேமரா நிறங்கள் இயல்பாக நன்றாக இருக்கின்றன.
காதலை விடுங்கள். மருத்துவம் என்பது எளிய மக்களுக்கானதா, அல்லது விஐபி செல்வந்தர்களுக்கானதா என்பதை விவாதித்த முறை முக்கியமானது. அந்த வகையில் இது மருத்துவ தொடர்களில் முக்கியமானது.
மருத்துவத்தை காதலிக்கும் மக்கள் மருத்துவன்
கோமாளிமேடை டீம்
நன்றி
எம்எக்ஸ் பிளேயர்
கருத்துகள்
கருத்துரையிடுக