சைபர் குற்றங்களை தடுக்க தயாராகிறது தமிழ்நாடு!
தயாராகிறது சைபர் குற்றத் தடுப்பு படை!
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றத் தடுப்பு பிரிவுகளில் கணினி வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று இந்தியா விலுள்ள அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மெல்ல அதிகரித்து வருகின்றன.இணையத் தொழில்நுட்பம் இன்று சிறு, குறு கிராமங்கள் வரை பரவலாகியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களை அணுக வங்கிகள், வணிகப் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் எளிமையாகியுள்ளன. அதேசமயம், இணையத்தை குறிவைத்து நடைபெறும் நிதிமோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு, நாட்டிலேயே முதல் மாநிலமாக சைபர் குற்றப்பிரிவு பணியிடங்களை முழுமையாக நிரப்பியுள்ளது. தற்போது , மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் பட்டதாரிகள் 185 பேரை, இணை ஆய்வாளர்கள் பதவியில் நியமித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்களை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் துணை ஆய்வாளர்கள், சைபர் குற்றங்கள் சார்ந்த விசாரணைகளில் தன்னார்வலர்களாகப் பணியாற்றுகின்றனர். இப்படி போதிய அனுபவமும், பயிற்சியும் பெற்றவர்களை தமிழகத்தில் உள்ள 46 சைபர் குற்றத்தடுப்பு காவல் நிலையங்களில் பணியமர்த்துகின்றனர். இவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை ஐஐடி மெட்ராஸ் மற்றும் எஸ்எஸ்என் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
மத்திய அரசின் சி டாக் (C-DAC) மையம், காவலர்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வையும், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை திறம்பட இயக்குவது பற்றிய பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. அனைத்து மாவட்ட கமிஷனர் அல்லது மாவட்ட காவல்துறை அதிகாரி அலுவலகத்தில் சைபர் குற்றத் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது. சைபர் குற்றங்கள் பற்றி மக்கள் கொடுக்கும் புகார்களை இத்துறைக்கு அனுப்புகின்றனர். இத்துறைக்கு கூடுதல் டிஜிபி ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்கிறார். இவர் காவல்துறையின் பிற பிரிவுகளிடையே ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வழக்குகளை தீர்க்க உதவுகிறார்.
”இப்போதுதான் சைபர் குற்றத் தடுப்பு பிரிவுக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். நூற்றுக்கணக்கான காவலர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பயிற்சியும் வழங்கி வருகிறோம் ” என்றார் காவல்துறை மூத்த அதிகாரியொருவர். ஏடிஎம் கார்டு மோசடி, போலியான பரிசு அழைப்பு, அரசு மானிய மோசடி, போலி வங்கி அழைப்பு ஆகியவையே பெரும்பாலான மக்களுக்கு பணம் பறிக்கும் வலையாக விரிக்கப்படுகின்றன. இணையத்திலுள்ள டிஜிட்டல் சாதனங்களில் ஏற்படும் தவறுகளை விட தவறான தகவல்களால் வழிநடத்தப்பட்டு மக்கள் செய்யும் தவறுகளே அதிகமாக உள்ளன. சைபர் குற்றங்கள் தொடர்பான அரசின் விழிப்புணர்வால் 50 சதவீத குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.
தகவல்
TOI
https://india.timesofnews.com/city/chennai/engineers-in-uniform-roped-in-to-crack-cybercrime-cases.html
கருத்துகள்
கருத்துரையிடுக