நாம் போராடினால்தான் பிழைக்க முடியும்! - லைபாக்லை ஆன்ட்டி- ச.சுப்பாராவ்

 


சென்னை புத்தக காட்சி 2021

நந்தனம் ஒய்எம்சிஏ




லைபாக்லை ஆன்ட்டி - ச.சுப்பாராவ் - பாரதி புத்தகாலயம் | panuval.com




லைபாக்லை ஆன்ட்டி 

க.சுப்பாராவ்

பாரதி புத்தகாலயம்

ரூ. 100


வடகிழக்கு கலாசாரம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கதைகள் என்று கூறுகிறார்கள். உண்மையில் இத்தொகுப்பில் அதற்கு ஏற்றாற்போல இருப்பது நான்கு கதைகள் மட்டுமே. மொத்தம் பதினான்கு கதைகள் தொகுப்பில் உள்ளன. 

மற்றொரு மோதி என்ற சிறுகதை, ஏழ்மை ஒரு பெண்ணை எந்தளவுக்கு மனத்தை கரைத்து அவளது நிலையை தாழ்த்துகிறது என்பதை கூறுகிறது. எளிமையாக சொன்னால் பசிதான். அரிசி கிடங்கு அருகே ஏழைகளின் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு வரும் லாரிகள் எப்போதும் போக்குவரத்து பிரச்னைகளால் அடிக்கு நின்று கொண்டிருக்கும். அப்படி நிற்கும் லாரிகளிலிருந்து அரிசி, பருப்பை ஊசி வைத்து குத்தி திருடுவது அங்கு வாழும் சிறுவர்களின் வேலை. 

அப்படி செய்யும்போது, மோதி என்ற சிறுவன் பலியாகிறான். அவன் இறந்துபோனதற்கு அவன் அம்மா முதலில் அழுதாலும் பின்னர் மனம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு வர பசிதான் காரணமாக உள்ளது. அதன் காரணமாக அவள் எடுக்கும் முடிவுதான் சிறுகதையின் இறுதிப்பகுதி. உணர்வுப்பூர்வமான கதை. 

பாசனின் பாட்டி, சிறுகதை வங்காளி குடும்பத்திற்கும் பழங்குடி குடும்பத்திற்குமான நெருக்கமான உறவைப் பேசுகிறது. எப்படி இனங்களுக்கு இடையில் வரும் சண்டை நெருக்கமான உறவுகளை குதறிப்போடுகிறது என்பதை சிறப்பாக எழுதியிருக்கிறார் சுப்பாராவ். பாசன் என்ற சிறுவன், எப்படி பாட்டியின் மார்பை விட்டு அகலாமல் இருக்கிறான் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். இரு குடும்பத்திற்கான சண்டை, அது முடியும் இடம் என எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. இனவெறி எப்படி அங்கு ஒற்றுமையாக வாழும் குடும்பங்களை அழிக்கிறது என காட்சிபடுத்தியுள்ள சிறுகதை இது. 

நம்பிக்கை என்ற சிறுகதை அடுத்ததாக குறிப்பிடலாம். உண்மையில் இதன் தலைப்பை கனவின் மரணம் என்றே வைத்திருக்கலாம். மொழிபெயர்ப்பாளர் ஒருவரை இரண்டு பெண்கள் வெகு தொலைவிலிருந்து ச்ந்திக்க வருகிறார்கள். தாய், அவளின் மருமகள் இருவருமே தங்கள் குடும்பத்து ஆண் ஒருவரை தேடி வருகின்றனர். அவனை கதாபாத்திரமாக வைத்து மொழிபெயர்ப்பாளர் கதை எழுதியுள்ளார் என்று அவர்கள் கூறி, அக்கதையில் வரும் பாத்திரத்தை எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதுதான் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு சான்று. 

லைபாக்லை ஆன்ட்டி நூலின் தலைப்புக்கு ஏற்ற வாசிப்பில் ஏமாற்றாத சிறுகதையாக அமைந்துவிட்டது. லைபாக்லை ஆன்ட்டியின் வாழ்க்கை வழியாக எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி பெரும் நிறுவனங்களால் அழிகிறது என்பதை எழுத்து வழியாக ஆழமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அதுவும் அடிபட்டு அவர் மருத்துவமனையில் இருக்கும்போது, அவரை தீவிரவாதியாக கருதி காவல்துறை கைது செய்யவரும்போது தற்போதைய ஆரஞ்சு இந்தியா நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. லைபாக்லை ஆன்ட்டி உணவகம் நடத்திவிட்டு, கண்ணாடி பாட்டில் பொறுக்குவது, கட்டிட வேலைக்கு செல்வது என வாழ்க்கை கீழே விழும் சமயங்களில் அவர் தனது மனதை சோகமாக்கிக்கொள்வதில்லை. அதுவும் வாழ்க்கையின் இயல்பே என்று போராடுவதற்கு தயாராக இருக்கிறார். அது வாசிக்கும் யாவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. 


நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வாழும் நிறைய குடும்பங்களை இக்கதை நினைவுபடுத்துகிறது. உள்நாட்டுப் போர், தீவிரவாதம் அழித்த பல்வேறு நபர்களின் குடும்பங்கள் சந்திக்கும் உளவியல்ரீதியான போராட்டத்தை சிறுகதை துல்லியமாக சித்தரிக்கிறது. 

பொதுவாக இக்கதையிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பண்பாடு, மக்களின் மனநிலை ஆகியவற்றை சித்தரிக்கிறது என நினைப்போம். ஆனால் கதைகளின் தேர்வு நம்மை ஏமாற்றுகிறது. பதினான்கு கதைகளிலிருந்து நாம் ஓரளவு தெரிந்துகொள்வது, இனவெறி, சந்தேகம், படுகொலை, தீவிரவாதம் ஆகியவை அங்கு தீவிரமாக உள்ளது என்பதைத்தான். 

குறிப்பு

வடகிழக்கு மாநில கலாசார உடைகள், பழக்கங்களை குறிப்பிடும்போது நூலின் கீழே அதனைக் குறிப்பிடுவது வழக்கம். வடிவமைப்பாளரின் சோம்பேறித்தனமா? சுப்பாராவின் பழக்கமா என்று தெரியவில்லை. அனைத்து குறிப்புகளும் கதைக்கு உள்ளாகவே பிராக்கெட் போட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த செயல் வாசிக்கும்போது எரிச்சலைத் தருகிறது. 

குறிப்பிட்ட வார்த்தை மீண்டும் மற்றொரு கதையில் வரும்போது, அதனை அதே பக்கத்தில் குறிப்பிடலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். ஆனால் சுப்பாராவ், குறிப்பிட்ட கதையைச் சொல்லி அந்தக் கதைக்கு சென்று பாருங்கள் என்று கூறுகிறார். இது என்ன விதமான யுக்தி என்று புரியவில்லை. 


கோமாளிமேடை டீம் 























கருத்துகள்