திருடப்படும் பைக்குகள் எங்கு செல்கின்றன? - அலசல் ரிப்போர்ட்

 



Dirt Bike, Motocross, Motorcycle, Motorbike, Bike


சென்னை பெருநகரில் மாதம்தோறும் அறுபது பைக்குகள் திருடப்படுகின்றன. இதனை பதிவு செய்வதில் காவல்துறை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படி திருடப்படும் பைக்குள் என்னாவாகின்றன என்று அந்த உலகைப் பார்க்க உள்ளே நுழைந்தால் பொல்லாதவன் பட அனுபவம் இன்னும் பெரிய கான்வாஸில் கிடைக்கிறது. 

குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குளை திருடர்கள் நோட்டமிட்டு பார்த்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதன் லாக்கை லாவகமாக உடைத்து திறந்து விடுகின்றனர். இதற்கு மாஸ்டர் கீ உதவுகிறது. இந்த நேரத்தில் காவல்துறை ரோந்து வருமே, அதற்கு சமாளிக்க அருகிலுள்ள தியேட்டரில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பிரச்னையாக இருக்கும் கேமராக்களிடமிருந்தும் தப்பித்தான் பைக்கை திருடி கொண்டு செல்கிறார்கள். 

இந்த வியாபாரம் இரண்டு வகையில் நடைபெறுகிறது. ஒன்று, பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். எனக்கு பைக் வேண்டும் என்று சொல்லும் கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு முக்கியமான ஆட்கள். 

இந்த பிராண்ட் பைக் வேண்டும் என ஏஜெண்டுகளிடம் சொல்லி சிலர் வாங்குகிறார்கள். இந்த வியாபாரம் நம்பகமானது. இதில் பணம் முழுக்க மோடியின் டிஜிட்டல் இந்தியாவை பின்பற்றி நடைபெறுகிறது. வாட்ஸ்அப்பில் வியாபாரம் பேசி முடிந்தவுடன், டிஜிட்டல் வாலட் வழியாக பணம் வந்து சேர்ந்துவிடும். திருடர்கள் கூட்டம், இத்தொழிலிலுள்ளவர்களின் சிபாரிசு இல்லாமல் யாரிடமும் எந்த டீலும் செய்வதில்லை என்பது திருட்டுத்தொழிலுக்கு முயல்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி. 

இப்படி திருடப்படும் பைக்குகள் உடனே கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை என வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் பைக் திருடப்பட்டதாக புகார் சென்னையில் பதிவானாலும் கூட பைக்கை தேடி போலீசார் வேறு வேறு நகரங்களுக்கு செல்வது கடினம். பெரும்பாலும் குற்றவாளிகள் நினைக்கும்படியே போலீசாரும் நடந்துகொள்கிறார்கள். இந்த புரிந்துணர்வுதான் பொல்லாத பிசினஸ் பிரச்னையில்லாமல் நடைபெற உதவுகிறது.

திருட்டுத்தொழில் சார்ந்த அத்தனை விஷயங்களும் யூடியூபில் கொட்டிக்கிடக்கின்றன. களத்தில் சந்திக்கும் பிரச்னைகளை அவரவரே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். திருடும் பைக்குகளுக்கான ஆவணங்களை தயாரித்து தர சில பைக் ஷோரூம் ஆட்களும் திருடர்களின் கையில் உள்ளனர். இதற்கு விபத்தில் சிக்கிய பல்வேறு பைக்குகள் உதவுகின்றன. பைக்கின் பூட்டை உடைத்து திறந்து அதனை திருடி வருபவர்களுக்கு கிடைக்கும் ஊதியம்  6 ஆயிரம்தான். ஆனால் அதனை வாடிக்கையாளருக்கு விற்பவருக்கு, ரூ. 1 லட்சம் வரை கிடைக்கிறது. 

ஓட்டுவதற்காக வாகனங்களைத் திருடுவது ஒருவகை. மற்றொன்று வண்டி பாகங்களை குறைந்த விலைக்கு விற்கும் மார்க்கெட் எப்போதும் இருக்கிறது. இந்தவகையில் பைக்குகள் அதன் மதிப்பை விட அதிக விலைக்கு போகிறது. 

ஆக, பைக்குகளை சாதாரண லாக்குகளோடு டிஜிட்டலாகவும் பாதுகாக்க ஏற்பாடுகளை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. 

டைம்ஸ் ஆப் இந்தியா 

சிந்து கண்ணன்













கருத்துகள்