முன்னாள் காதலியின் காதலை சேர்த்துவைத்து தன்னுடைய காதலைக் காப்பாற்றும் நாயகனின் கலாட்டா கதை! - அல்லுடு அதுர்ஸ் - சாய் சீனிவாஸ்
அல்லுடு அதுர்ஸ்
படத்தின் கதை என்று பார்த்தால், காதலே செட் ஆகாது என்று நினைத்து விரக்தி அடைந்தவனுக்கு ஏற்படும் காதலும், அதில் ஏற்படும் பிரச்னைகளும்தான். எளிமையான லைன்தான். ஆனால் படத்தை எடுக்கும் இயக்குநருக்கு என்ன குழப்பமோ, சோறு வைக்க நினைத்து அதற்குள் நூடுல்ஸை வேக வைத்து பருப்பு குழப்பில் சாஸ் ஊற்றி படத்தை எடுத்திருக்கிறார். இதனால் படத்தில் எந்த காட்சியும் நிறைவு தரவில்லை.
சாய் சீனிவாஸ் நடித்த சீதா என்ற தெலுங்குப்படம் பலரும் தெலுங்குப்படம் என்றால் இப்படித்தானா எனும்படி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இப்படியொரு படமா? பெரிய சறுக்கல்.
சீனு, பள்ளி செல்லும்போது வசுந்தரா என்ற சக மாணவியைப் பார்க்கிறான். அவள் செய்யும் உதவிகளால் மெல்ல ஈர்க்கப்படுகிறான். ஆனால் அது காதலாக மெல்ல மாறும்போது அவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறாள். இந்த நேரத்தில் இனி பெண்களே வேண்டாம் என வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். கட்டுமான நிறுவனத்தில் வேலை. அப்போது நண்பன், ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள ரயில் பிடிக்கப் போகிறான். துரோகி என அவனைப் போட்டுத்தள்ள செல்லும் சீனு, அந்த பெண்ணின் அப்பாவான பிரகாஷ்ராஜை சந்திக்கிறான். அங்கு சந்திக்கும் கௌமுதி என்ற பெண்ணைப் பார்த்ததும், வாழ்ந்தா இவளோடுதான் வாழவேண்டும் என முடிவெடுக்கிறான். ஆனால் அதற்கு பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம், காதலால் ஏற்கெனவே ஒரு பெண்ணை இழந்திருக்கிறார்.
அந்த பெண் காரணமாகவே கௌமுதி கூட மனதில் காதல் இருந்தாலும் சீனுவை ஏற்க மறுக்கிறாள். அவளின் குடும்பத்திற்கு அக்காவை காதலித்து ஏமாற்றி கஜா என்பவனால் ஆபத்து காத்திருக்கிறது. இதனை எப்படி சீனு எதிர்கொண்டான், வென்றான் என்பதுதான் இறுதிப்பகுதி.
படத்தில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் மட்டும்தான் ஆறுதலாக உள்ளன. படத்தில் கௌமுதியை பெண் பார்க்க வரும் அமெரிக்க மாப்பிள்ளை சத்யா, எல்லாவற்றையும் கற்பனை செய்துகொண்டு நடைமுறை பிரச்னையை சமாளிப்பார். இந்த படத்தை பார்க்கும் நாமும் கூட அப்படித்தான் மோசமான பல காட்சிகளை அட இப்படி இருக்கலாமே என நினைத்துக்கொள்ளலாம் கற்பனைக்கு என்ன தடை உள்ளது.
வரவேற்கமுடியாத மாப்பிள்ளை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக