இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

 










இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக


இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு  மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம். 

அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.  சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவதாக தெரிவித்தனர்.

மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு 74. 6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஏப்ரல் 25ஆம் மாதக் கணக்குப்படி, இதுதான் உலகில் அதிகமான மக்கள் பின்தொடரும் சமூக வலைத்தள கணக்கு. 2014, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், வாட்ஸ்அப் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தியது. எழுத்தாளர் ஜெயமோகன் கூறியது போல கேலி, அவதூறு, சிறுபான்மையினர் மீதான பயத்தை ஏற்படுத்தியே நாட்டின் பல்வேறு இடங்களிலும் வெற்றியைப் பெற்றது. இன்றளவில், தனது சமூக வலைத்தள குழுக்களை  வைத்தே பல்வேறு வெற்றிகளை பாஜக பெற்று வந்தது. இம்முறை  அதன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மீது அதிக நம்பிக்கையுடன் உள்ளது பாஜக. அதில்தான் தேர்தல் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்துமே இளைஞர்களுக்காகத்தான். அவர்களை எளிதாக வாக்களிக்கச் செய்து இந்தியாவை வளப்படுத்தவே இந்த அரிய சீரிய முயற்சி. 

மக்கள் அதிகம் நேரம் செலவழித்து கட்டுரையைப் படிப்பதைவிட அதிகவேகமாக ரீல்ஸ்களைப் பார்ப்பதை விரும்பிவருகிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள். எனவே பாஜக அவர்களுக்கு ஏற்றபடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தனது வீடியோக்களை கிரியேட்டிவிட்டியோடு  உருவாக்கி வருகிறது. பாஜகவின் இணையக்குழு மட்டுமல்லாது, அந்த கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவருமே சமூக வலைத்தளங்களில் வெறியோடு வேலை செய்து வருகிறார்கள். 

தினசரி ஐந்து அல்லது ஆறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வகையில் இவர்கள் பதிவிடும் மொத்த வீடியோக்கள் அளவு அறுபது சதவீதமாக உள்ளது. எதிர்க்கட்சியைத் தாக்குவது, அரசு திட்டங்களைக் கூறுவது, வாக்குறுதிகளை அளிப்பது என வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

2014ஆம் ஆண்டு பத்து வயது சிறுவர், சிறுமிக்கு புரியும் வகையில் தங்களது கட்சியை வடிவமைத்தனர் என்றால் 2024ஆம் ஆண்டு இருபது வயது இளைஞர்களை குறிவைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பயன்படுத்துகிறது காவிக்கட்சி.

இன்று 80 கோடிப்பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதில் 50 கோடிப்பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். 2014ஆம் ஆண்டு இணையத்தைப் பயன்படுத்தியவர்களின் அளவு 24 கோடிக்குள்ளாகவே இருந்தது.  இதுபற்றிய தகவலை ஐசியூபிஇ அமைப்பு (2021 அறிக்கை) வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் இன்ஸ்டாகிராமிற்கு உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக 22.9 கோடியாக உள்ளது. நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் வேலை செய்து விட்டு வருபவர்கள், தூங்கும் முன்னர் தங்களது ஸ்மார்ட்போன்களின் மூலம் சமூகவலைத்தளங்களை சோதித்து பார்த்துவிட்டுத்தான் தூங்குகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான் பாஜக வேலை செய்கிறது. 

தேர்தல் பிரசாரங்களைப் பொறுத்தவரை இணையத்தில் அதிக ஆக்ரோஷத்துடன் இறங்கி வேலை செய்வது பாஜகதான். இதில் பிற கட்சிகள்  அவர்களை வெல்லவே முடியவில்லை. தேர்தல் சமயத்தில் மோடியை பிரதிநிதித்துவப்படுத்திய விளம்பரங்களே இணையத்தை ஆக்கிரமித்தன.  இந்தியாவில் சமூக வலைத்தளத்தின் சக்தியைப் புரிந்துகொண்டு வென்ற வர் மோடி என்றால் அமெரிக்காவில் பராக் ஒபாமா இந்த வகையில் வெற்றி பெற்றார். ஒபாமா, இணையத்தின் இன்னொரு புறம் பற்றியும் கூறியிருக்கிறார். ஆனால் மோடி அதை கமுக்கமாக சொல்லாமல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார். தனக்கு எதிராக இருப்பவர்களை முடக்க அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளது. உண்மையைக் கூறுபவர்களை அதிகாரத்திலுள்ள அரசு நினைத்தால் முழுமையாக முடக்க முடியும். அதை நாளிதழ்களில் வரும் பல்வேறு வழக்கு, ரெய்டு செய்திகளைப் பார்த்தாலே நீங்கள் அறியலாம்.  

பாஜகவினருக்கு,  மோடி செய்த பல்வேறு சாதனைகளைப் பற்றியே இணையத்தில் பரப்புமாறு கூறப்பட்டுள்ளதாம். ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் சமூக வலைத்தள கணக்கில் பகிரப்படும் செய்திகளை பிறருக்கு பகிரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 'சேவா ஹை சங்கல்ப்',' விகாஸ் ஹை லக்‌ஷியா' என பல்வேறு ஸ்லோகன்களை உருவாக்கி அதில் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். ராகுல், அர்விந்த் கெஜ்ரிவால் என அரசியல் கட்சி தலைவர்களுக்கென தனி சீரிஸ் உள்ளது.  எல்லாமே உண்மையான தகவல்களா என்று கேட்க கூடாது. அனைத்துமே கேலி, அவதூறு அடிப்படையில் இருப்பவைதான். கர்நாடகாவில் வரும் மே பத்தாம்தேதி வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அதற்கான வேலையை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

பாஜகவில் சமூக வலைத்தளங்களை கவனிக்கவென 36 குழுக்கள் உள்ளன. ஒரு குழுவில் பத்து முதல் 35 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் பல்வேறு மாநிலங்கள், சட்டமன்றத்தொகுதி, மக்களவைத் தொகுதி என செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் வலதுசாரி கட்சியான பாஜகவிற்கு எதிரான அனைத்து கருத்துகளை கீழே தள்ளி ட்ரோல் செய்து பிறரை மிரட்டுவது வரையில் செய்கிறார்கள். 

மோடி, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுவரையில் 585 வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இப்படி பதிவிடும் வீடியோக்களை மாணவர்கள், இளைஞர்கள் பார்க்கிறார்களா என்பதையும் மோடி கவனித்துக்கொள்கிறார்.

ஓப்பன் 

அமிதா ஷா

8 மே 2023

 ஆங்கிலக் கட்டுரையை தழுவியது.

image -pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்