உடைகளை விற்க செக்ஸ் கூட ஒரு மகத்தான கருவி- கால்வின் கிளைன் உருவாக்கிய விளம்பரங்கள்
மார்க் வால்பெர்க் - கேட் மோஸ் விளம்பரம் |
புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் |
விளம்பர இயக்குநர் மடோனா பேட்ஜர் |
அமெரிக்காவில்
வணிக ரீதியாகவும் கலாசா ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பிறர் ஏற்றுக் கொள்வது கடினம்.
அந்தளவு செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தாராள இயல்பில் வேகமாக
முன்னேறி வருகின்றனர். துணிக்கடைகளில் ஆண், பெண் என மொழு மொழு பொம்மைகளை வைத்திருப்பதை
பார்த்திருப்பீர்கள். சிலர் அதை வெறியுடன் வேட்கையுடன் பார்த்துக்கொண்டே கடைகளை கடப்பார்கள்.
அப்படியான வசீகரத்துடன் பார்க்க படு கச்சிதமான உடல் அமைப்புடன் ஆண், பெண் பொம்மைகள்
செய்யப்பட்டிருக்கும். உண்மையில் இதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றும் என
நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
சிக்ஸ்பேக்
உடல் கொண்ட ஆண், ஆணைப் போன்ற உடல் கொண்ட பெண் என இருவரும் வரும் ஆடை விளம்பரங்கள் தொடக்கத்தில்
இருந்தே இளைஞர்களை கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய ஆண்,
பெண் மாடல்களை வைத்து எடுக்கும் விளம்பரங்கள் பிரபலம். தொண்ணூறுகளில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திய மடோனா
பேட்ஜர், புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் ஆகியோர்தான் கட்டழகு ஆண், பெண் ஆகியோரைக் கொண்ட விளம்பரங்களை முதன்முதலில் எடுத்தனர். ஒருவகையில்
இந்த விளம்பரம் பார்ப்பவர்களின் மனதில் காம உணர்வை எழுப்பியது. கால்வின் கிளைன் நிறுவனத்தின்
உள்ளாடை தயாரிப்புகளுக்கான விளம்பரம் அது.
கால்வின்
கிளைன், லீவிஸ் வரை பல்வேறு பிராண்டுகள் இதுபோன்ற விளம்பரங்களை எடுத்து தங்களது ஆடைகளை
விற்று வருகின்றன. உண்மையில் சிக்ஸ்பேக் கொண்ட ஆண்கள், பெண்களைக் கவரும் பிம்பம் என
நிறையப் பேர் நினைப்பார்கள். உண்மையில் அவை ஆண்களையும் கவருகிறது என்பதே உண்மை.
தற்போது
ஓடிடி தளங்களில் வெளியாகும் லீவிஸ் விளம்பரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். விளம்பரத்தில்
அவர் மட்டும்தான் இருக்கிறார். நடனமாடும் ஒரு தளத்தில் தன் பாட்டிற்கு ஆடுகிறார்.கீழே
உருள்கிறார். அவர் அணிந்துள்ள பேன்ட், மேல்சட்டை
லீவிஸ் நிறுவனத்துடையது. தீபீகா, ஆண் போன்ற உடல் தன்மை கொண்டவர். இந்த விளம்பரம் ஆண்களை
மட்டுமல்ல பெண்களையும் விரும்ப வைக்கும் இயல்பு
கொண்டது.
இன்று ஒருவர்
எம் பில், பி ஹெச்டி என படித்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டிஅவரின் ஆளுமையை
வெளிப்படுத்தும் வண்ணம் அணியும் உடை, நேர்த்தியான சிகை அலங்காரம் மக்களிடையே பெரும்
அங்கீகாரத்தை அளிக்கிறது. இதையெல்லாம்தான் ரேமண்ட், விமல், பி என் ராவ் ஆகிய நிறுவனங்கள்
கருத்தில் கொண்டு தங்கள் துணிகளை விற்கிறார்கள். எனக்குத் அறிமுகமான நண்பர் ஒருவர்,
பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் பிராண்டுகள் பார்ப்பார்.
அதுதொடர்பாக
விவரங்கள் கேட்டால் மூச்சு விடாமல் பேசுவார். அவர் அணிவதும் ஏரோ ஷர்ட், லீவிஸ் , கெல்வின்
கிளைன் பேண்ட் வகையறாக்கள்தான். மட்டமான உடைகளை, பிராண்ட் அல்லாதவற்றை ஒருவர் அணிந்திருந்தால்
பார்வையாலேயே எரித்துவிடுவது போல பார்ப்பார். நான் எம்எஸ்ஆர் தேங்காய் எண்ணெய்யை நூறு
மில்லி 35 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்தியபோது, அந்த நண்பர் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட
வர்ஜின் தேங்காய் எண்ணெய்யை 750 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்திக்கொண்டிருந்தார். இவரது
அறைக்கு சிலசமயங்கள் போனபோதுதான் பிராண்டுகள் இத்தனை இருக்கிறதா, இதையும் மனிதர்கள்
பயன்படுத்துகிறார்களா என்று மெல்ல மெல்ல தெரிந்துகொண்டேன். பிராண்டுகளின் உலகம் அத்தனை
பெரியது. அது ஏற்படுத்தும் பெருமை, புகழ் என்பதெல்லாம் வேறு ரகம்.
காலம்தோறும்
நிறைய விஷயங்கள் மாறி வருகின்றன. தொழில்நுட்பங்கள் வேகமாகின்றன. இதன் வழியாக ஏராளமான
இளைஞர்கள் புதிய பிரபலமாக உருவாகி வளர்கிறார்கள். இன்று இன்ஸ்டாகிராம், ட்விட்டர்,
யூட்யூப் வழியாக ஏராளமான இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக, இன்ப்ளூயன்சர்களாக உருவாகி
வருகிறார்கள். ஆனந்தவிகடனில் இப்படி மக்கள் மீது செல்வாக்கு செலுத்தும் சிலர் பற்றி
தனி தொடரே எழுதி வருகிறார்கள். கட்டுரையாளர் வித்யா காயத்ரி தேடித்தேடி இன்ப்ளூயன்சர்களைப்
பற்றி எழுதி அவர்களை பிரபலமாக்கி வருகிறார்.
இணையம் மூலமாக ஒருவர் எளிதாக சினிமா பிரபலத்தை போல
பிரபலமாக முடியும். இணையத்தில் அலைந்து திரிபவராக இருந்தால், ஜி பி முத்துவைப் பற்றி
கேள்விப்படாமல் இருக்க முடியாது? டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர், அந்த ஆப் தடையான
பிறகு பல்வேறு சமூக வலைத்தளங்களுக்குள் வந்து ஆல்பங்கள், சினிமா, பிக் பாஸ் என ஒரு
சுற்றே வந்துவிட்டார். இத்தனைக்கும் அவரின் திறமை என்பது அவரின் வெகுளித்தனமான கிராமத்து
பேச்சுதான். அது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது, நாம் மறந்துவிட்ட, நமக்கு தெரிந்த
யாரோ ஒருவரை முத்து நினைவுபடுத்துகிறார். அதனால்தான்
அவர் கடிதம் படிக்கும் வீடியோவைக் கூட பல லட்சம் பேர் பார்த்து ரசித்து சிரிக்கிறார்கள்.
அதேசமயம் இப்படியான ஆட்களை வைத்து பொருட்களை விற்பனை செய்யவும் பெருநிறுவனங்கள் முன்
வருகின்றன. இன்று திரைப்படங்களை வெளியிடும்போது, அந்த படத்தின் நாயகன், நாயகி ஆகியோர்
இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களுக்கும் நேரம் ஒதுக்கி அவர்களுக்கு காசு கொடுத்து படத்தை
பிரபலமாக்குகிறார்கள்.
திறமை என்பது
ஓகே. ஆனால் மார்க்கெட்டிங் செய்வது அதை விட முக்கியம். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
விண்டோஸ் ஓஎஸ், ஆப்பிளின் ஓஎஸ்சிலிருந்து உருவான காப்பிதான். ஆனால் அதை சிறப்பாக மார்க்கெட்டிங்
செய்த காரணத்தால் உலகம் முழுக்க விண்டோஸ் ஓஎஸ் பரவி, மைக்ரோசாப்ட் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது. விண்டோஸை
விட சிறப்பான அம்சங்களை கொண்ட லினக்ஸ் தனிப்பட்ட பயனர்களுக்கான கணினியாக வெற்றி பெறவில்லை.
காரணம், அதை விளம்பரப்படுத்த தனி நிறுவனங்கள் இல்லை. அது தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்ந்த
ஓஎஸ்ஸாகவே இருந்தது. இப்போது அரசு கணினிகளில் பதியப்படுவதால் மாணவர்களிடையே பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
இன்று கே
பாப், ஓடிடி படங்கள், பிவிஆர் சினிமா, ஐமேக்ஸில் ஆங்கில திரைப்படங்கள், இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ், ட்விட்டர் மோதல்கள், யூட்யூப்பில் பயண அனுபவ வீடியோக்கள் என உலகம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
இணையம் இல்லையென்றால், பலருக்கும் தினசரி வாழ்க்கையில் பொழுதுபோக்கு இல்லாமல் கை நடுங்கத்தொடங்கிவிடும்.
இதில்தான் விளம்பரங்களும் பொருட்களை வாங்குவதும் கூட எளிதானதாக மாறியிருக்கிறது. செயற்கை
நுண்ணறிவு அல்காரிதம் மூலம் நாம் பயன்படுத்தும் இலவச இமெயில், சமூக வலைத்தள சேவைகள்
மூலம் ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அதை வைத்து ஒருவரின் தினசரி தேவைகள் முதல்
என்ன யோசிக்கிறார், சிந்திக்கிறார், சாப்பிடுகிறார், யாருக்கு வாக்களிக்கிறார் என்பது
வரையில் கணிக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக