குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

 








லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்  ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.  இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை.

நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை  வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞராக கூட மாறலாம். கர்ப்பகாலத்தில் அம்மா கேட்கும் பாடல்களை, குழந்தையும் கேட்க, ரசிக்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரு வணிக வளாகம் ஒன்றில் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மால் ஒன்றில்  பெண்களுக்கான உடை பிரிவில் ஜான்சன் பேபி பவுடர் வாசனையை  ஏசியில் ஸ்ப்ரே செய்தார்கள். அதேசமயம் உணவுப்பிரிவில் மென்மையான செரி வாசனையை பரவச் செய்தனர். சில வாரங்களிலியே அங்கு உடை விற்பனையும், உ ணவு விற்பனையும் கூடியது.  பொதுவாக மால்களில் மெல்லிய ரிதமான இசை பாடிக்கொண்டிருக்கும். மேக்ஸ், ட்ரெண்ட்ஸ் போன்ற கடைகள் இப்படித்தான் இயங்குகின்றன. இந்த இசையும் கூட ஒருவரின் இறுக்கத்தை தளர்த்தி அவரை நெகிழ்வாக்குகிறது.

 அறிவியல் ரீதியான முறைகள் சரி என்றாலும் மேக்ஸ் (வடபழனி (விஜயா மால்), சென்னை, தமிழ்நாடு) போன்ற நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதுண்டு. இங்கு, பில் போடும்போது திடீரென ஒரு அமைப்பின் பெயரைச் சொல்லி அதற்கு ஒரு ரூபாய் எடுத்துக்கொள்கிறோம் என்று இயந்திரம் போல பேசுவார்கள். வாங்கும் துணிக்கு காசு கொடுக்கிறோம் சரி. நன்கொடைக்கு எதற்கு காசு. வளைகுடா நாட்டில் மேக்ஸின் தலைமை அலுவலகம் உள்ளது. ஆனால் ஒரு ரூபாய் நன்கொடையை,  துணி வாங்கும் வாடிக்கையாளர் தலையில் கட்டுகிறார்கள்? கேட்டால் நல்ல விஷயத்திற்கு  மக்களும் பங்களிக்கவேண்டும் என கம்பி கட்டும் கதையைச் சொல்லுவார்கள்.

 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்குகிறோமே என நினைத்து பை கூட கொடுக்க மாட்டார்கள். அதற்கு தனியாக காசு கொடுக்க வேண்டும். இப்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் நிறைய உண்டு. கவனமாக இருங்கள். பையிலுள்ள பணத்தை பல்வேறு பெயர்களைச்  சொல்லி திருடுகிற கூட்டம் நிறைய உள்ளது. சரி, பட்ட அனுபவத்தை கூறியாயிற்று. இதில் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது, இசையும், மணமும் நமது இயல்பை சற்றே திசை திருப்புகின்றன.

காதல், கல்யாணம், களேபரம் என ஆனால்தான் பெருநிறுவனங்களுக்கு மகிழ்ச்சி. அப்போதுதான் நீங்கள் காதலிக்கு தனேராவில் புடவை வாங்கிக் கொடுத்து, பானிகிரகா கல்யாண மண்டபத்தில் கல்யாணம் செய்வீர்கள். பிறகு, உங்களது அசுர பாய்ச்சலில் சில ஆண்டுகளில் குழந்தை பிறக்கும். அதற்கு லெஜண்ட் சரவணன் கடையில் துணி எடுக்கலாம். இது சைக்கிள் சுழற்சி போல. நடந்துகொண்டே இருக்கும். பிராண்டுகள் மாறினாலும் செயல்கள் மாறாது.

குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் அம்மாக்கள் புகைபிடிப்பவரா, மது அருந்துபவரா, காய்கறி உணவு உண்ணுபவரா, லேஸ், சீட்டோஸ் சாப்பிடுவாரா என்பதை கவனிப்பது முக்கியம். இதைப் பொறுத்து வயிற்றில் உள்ள குழந்தைகளின் எதிர்கால பழக்க வழக்கங்கள் அமையும் என 2017ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற அறிவியல் இதழ் கூறியது.

 இன்று பெருநிறுவனம் தனது வாடிக்கையாளர்களை குழந்தையாக இருக்கும்போதே உருவாக்கிவிட மெனக்கெடுகிறது. ஒரு நிமிட விளம்பரப்படத்தில் எத்தனை வெட்டுகள் இருக்கின்றன என்பதை ஒருவர், சினிமாவின் அடிப்படை தெரிந்தாலும் புரிந்துகொள்ளலாம். ஒரு நிமிடத்திற்குள் பார்ப்பவரை ஈர்க்கவேண்டும் என்பதுதான் திறமை. அதற்காகவே விளம்பர ஏஜென்சிகள் மெனக்கெடுகின்றன.

இப்போது கோபிகோ என்ற காபி சாக்லெட் கதையைப் பார்ப்போம்.

இன்று சண்முக லிங்கம் அண்ணாச்சி கடை முதற்கொண்டு ஸ்பென்சர், மோர், ரிலையன்ஸ் ஸ்மார்ட் வரையில் கோபிகோ சாக்லெட் இல்லாமல் இருக்காது. அனைத்து இடங்களிலும்  கோபிகோ புகழ்பெற்று மக்களை ஈர்த்து அடிமைப்படுத்தி இருக்கிறது. வெறும் சுவையால் மட்டுமல்ல; அதன் விற்பனை தந்திரங்களாலும்தான்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மிட்டாய் தயாரிப்பு நிறுவனம்தான் கோபிகோ. இந்த நிறுவனம், காபி சுவையில் மிட்டாய் ஒன்றை தயாரித்தது. அதை, மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு சாம்பிள் போல வழங்கியது. அவர்கள், அதை கர்ப்பிணிகளுக்கு கொடுப்பதுதான் அவர்களுக்குள் உள்ள கமிஷன் ஏற்பாடு. காசு வாங்கியவர்கள் வேலையைச் சரியாக செய்தனர். இதனால் கர்ப்பிணிகள் புதிய காபி சுவை கொண்ட சாக்லெட்டை சாப்பிட்டனர். இதற்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகள் யாரும் சொல்லாமலேயே கோபிகோவின் சுவைக்கு அடிமையாகி இருந்தனர்.  குழந்தையாக அம்மாவின் வயிற்றில் கருப்பையில் இருந்தபோதே மிட்டாயின் சுவையை உணர்ந்து அதன் வாசனை, சுவையை அனுபவிக்கத் தொடங்கியிருந்தனர். இதன் விளைவாக புதிய தலைமுறையே சாக்லெட்டை வேறொரு உயரத்திற்கு வளர்ச்சிக்கு கொண்டு சென்றனர். இங்கு நான் சொல்வது நடந்த உண்மையைத்தான். கற்பனை அல்ல.

உணவு, குளிர்பானம், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை வயது வந்தவர்களை விட குழந்தைகளுக்கு கூறவே மெனக்கெடுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனலில் விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். ஓடிடியில் விளம்பரங்களை தவிர்த்தாலும் கூட டிவி என்பது எங்கும் உள்ள ஜனரஞ்சமாகிவிட்டது. டிவி பார்ப்பதில்லை என்பவர்கள் ஆண்ட்ராய்ட் டிவி வழியாக யூட்யூப் வீடியோக்களை பார்ப்பார்கள் அல்லவா?  அங்கும் கூகுள் நிறைய விளம்பரங்களை ஒளிபரப்பிக்கொண்டுதான் உள்ளது.

 படம் - பின்டிரெஸ்ட் 

 

 

 

கருத்துகள்