ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

 





அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி

அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர்



அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டுள்ளார். இப்போது அம்ரித்பாலிடம் பேசுவோம்.  

இந்தியாவின் பிரதமராக சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் இருந்திருக்கிறார். திட்டக்குழுவின் தலைவரான மான்டேக் சிங் அலுவாலியா இருந்திருக்கிறார். ஆனால் உங்கள் பேச்சுகளில் சீக்கியவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டுமா? என்று பேசுகிறீர்களே?

மொகலாயர்கள் காலத்தில் சீக்கியர்கள், இந்துகள் ஆகியோர் பெரிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் கூட பஞ்சாப்பிற்கு சீக்கியர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நவீன கால அடிமைமுறை அதிலிருந்து வேறுபட்டது. இது, ஒருவரை உடலை விட மனதளவில் அடிமைப்படுத்துவதாக உள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு பல்வேறு உரிமைகள் சட்டத்தில், தாளில் உள்ளது. ஆனால் நிஜத்தில் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா என்ன?  நான், நகரில் கார்களை ஓட்டிச் செல்லலாம். சீக்கியர்கள் பிரதமராக அல்லது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அதே பிரதமர்தான் பெரும்பான்மையினரால் எளிதாக தாக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அரசியலமைப்பை நம்பாத காஷ்மீர் பிரவினைவாதிகள், மாவோயிஸ்டுகள், பிற ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியோரிடமிருந்து காலிஸ்தான் தனி நாடு கோரும் நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

மத்திய மாநில அரசுகள் ஒரு இயக்கமாக உங்களை அகிம்சை அல்லது வன்முறையான இயக்கமாக எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதுவரை குறிப்பிட்ட லட்சியத்திற்கு போராடும் இயக்கம்,  தீவிரவாத இயக்கம் என்றுதான் அழைக்கப்படும். ஆனால் அந்த இயக்கம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் பிறகு அந்த நிலத்தின் சட்டம், அதுதான் என இயக்கத்தின் செயல்பாடுகள் கூறப்படும்.

இந்தியா, தாலிபன்களை முதலில் தீவிரவாத இயக்கமாகவே பார்த்தது. ஆனால் இப்போது அந்த இயக்கத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எங்களுடைய அமைப்பு எங்களுடைய மக்களின் சுதந்திரத்திற்காக போராடவில்லை. இந்திய துணைக்கண்டத்தில் பல்லாண்டுகளாக உள்ள பிரச்னையைத் தீர்க்கும் தீர்வுகளைக் கொண்டுள்ளோம்.

ஒருங்கிணைந்த பஞ்சாப், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை என்பது சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்து நீங்கள் பெற்றது அல்லவா? ஆனால் உலகம் இப்போது அந்த காலகட்டத்திலிருந்து வெகுவாக மாறிவிட்டது. உங்களது காலிஸ்தான் நாட்டிற்குள் காஷ்மீரின் பிரிவினைவாதிகள் இயக்கம் எப்படி பொருந்தும்?

நீங்கள் கூறும் காஷ்மீர், அன்று பஞ்சாப்பின் பகுதியாகவே இருந்தது. ஆனால் அதற்காக, எதிர்காலத்தில் காஷ்மீர் பஞ்சாப்பின் பகுதியாக மாற்றப்படும் என்று அர்த்தமல்ல. ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பஞ்சாப்பிற்கு சொந்தமானவைதான். காஷ்மீரிலுள்ள மக்கள் அவர்களின் மத அடையாளத்திற்கும், காஷ்மீர் மக்கள் என்று அழைக்கப்படுவதற்காகவும் போராடுகிறார்கள். பஞ்சாப் விஷயத்திற்கு வந்தால் பாகிஸ்தானிலுள்ள லாகூர், மற்றும் பிற பஞ்சாப் பகுதிகளைப் பற்றி பேசிய பிறகுதான் காஷ்மீருக்கு வரவேண்டும். இப்போது நாங்கள் இந்தியாவில் பஞ்சாப்பை பிழைக்க வைக்க முயன்று வருகிறோம்.

பஞ்சாப்பின் மேற்கு பகுதியில் உள்ள (பாகிஸ்தானின்) முஸ்லீம்கள், பிரிவினைக்கு முன்னர் இருந்த ஒருங்கிணைந்த பஞ்சாப் சிந்தனையை எதற்காக ஏற்கவேண்டும்? ஆதரிக்க வேண்டும்?

காரணம், மொழிசார்ந்த நெருக்கடி தீவிரமாக உள்ளது. இந்து, முஸ்லீம் அல்லது சீக்கியர்கள் என யாராக இருந்தாலும் ஒருங்கிணைந்த பஞ்சாப்பில் அவர்கள் பஞ்சாபியர்கள்தான். அதுதான் அவர்களது தனித்த, மொழி அடையாளம். பஞ்சாபி மக்கள் பாகிஸ்தானில் இருந்தால், அவர்கள் மீது அரபி கலாசாரம் திணிக்கப்படுகிறது. துபாயில் பஞ்சாபி முஸ்லீம்களை யாரும் முஸ்லீம்களாக கருதுவதில்லை. அவர்களை சீக்கியர்கள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ‘’பஞ்சாபி முஸ்லீம்கள், தூய்மையான முஸ்லீம்கள் கிடையாது’’ என்கிறார்கள். ‘’ஒரு ஜாட் என்பவன் எப்போதும் முஸ்லீமாக முடியாது’’ என்று நான் கூறுகிறேன். பஞ்சாபி என்ற அடையாளத்திலிருந்து சீக்கியர் அடையாளம் உருவாக கூடாது என்று நினைக்கிறேன்.

 மத அடையாளங்களை விட கலாசார அடையாளங்கள் வலிமையானது என்று அதை பரிந்துரைக்கிறீர்களா?

ஒருவரின் மத அடையாளமும், கலாசார அடையாளமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தால் ஒருகட்டத்தில் அந்த சண்டை உங்களை காயப்படுத்தும். இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இந்துக்களுக்கும், பஞ்சாபி இந்துக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பஞ்சாபி இந்துகள் தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் அதற்கு கொடுத்த விலை என்ன தெரியுமா? அவர்கள் பஞ்சாப்பின் வேலைவாய்ப்பின்மை, நீர் உரிமைகள், போதைப்பொருட்கள் பிரச்னை பற்றி பேச மறுக்கிறார்கள். அரசு, பஞ்சாபி அடையாளத்திற்கு எதிராக போரிட பஞ்சாபிய மக்களை  பயன்படுத்துகிறது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக மாறுகிறார்கள். பஞ்சாபி மக்கள், சொந்த மாநில அடையாளத்தை தொலைத்துவிட்ட குஜராத் மாநில இந்துக்கள் போல பணக்காரர்கள் அல்ல.

ரஞ்சித் சிங் காலத்தில் கூட அந்திய மொழியான பெர்சிய மொழியை அலுவலக மொழியாக பயன்படுத்தி வந்தனரே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 அப்போது அந்த மொழிக்கான தேவை இருந்தது. அப்போது பஞ்சாபி, பெர்சியா என இருமொழிகளைப் பயன்படுத்தினர். மாநிலங்கள் தங்கள் மரபான மொழியைப் பயன்படுத்த முயலவில்லை. அவர்கள் புதிய மொழி அல்லது அந்நிய மொழியைப் பயன்படுத்தினர். இதன் விளைவாக, மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தனர். அன்றைய மாநில அரசு, சுயநலமாக தந்திரமாக நடந்துகொண்டது. இன்று வலதுசாரிகள் இந்து, இந்தி இந்துஸ்தான் என ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு குரல் கொடுக்கின்றனர். இதன் விளைவாக மதம், மொழி, வரலாற்று மதிப்புகள், தனித்துவம், பன்மைத்துவம் என எங்களின் கலாசாரமே முழுக்க அழிக்கப்படுகிறது.

சீக்கியர்களுக்கு இடையில் உள்ள சாதிப்பிரச்னை பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கிராமத்தில் கூட ஆறு குருத்துவாராக்கள் உள்ளனவே?

சந்துவோன் குருத்துவாரா, எந்த சாதி மக்களையும் புறக்கணிக்கவில்லை. சாதி சார்ந்து மக்களை உள்ளே வழிபாட்டிற்கு அனுமதிப்பது என்ற கொள்கையை பின்பற்றவில்லை. ராஜஸ்தான், உ.பி யை விட சாதி சார்ந்த குற்றங்கள் பஞ்சாப்பில் குறைவு.

குருத்துவாராவில் உள்ள பொது சமையல் கூடம் ஒன்றுதான். இங்கு நிறைய பழங்குடி மக்கள் அடையாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ரவிதாஸா சீக்கியர்கள், மஸாபி சீக்கியர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் தலித் அடையாளத்திற்குள் வருவார்கள்.

 கம்போஜ் சீக்கியர்கள், ஜாட் சீக்கியர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாட் சீக்கியர்கள் வேறு சீக்கியர்களுடன் மண உறவு செய்துகொள்ள மாட்டார்கள். இதெல்லாம் வாழ்க்கைத் தரம் சார்ந்தது. கலாசாரம் சார்ந்து நிறைய வேறுபாடுகள் உள்ளது. சீக்கியர்கள், பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்களை செய்கிறார்கள். இதுதான் சீக்கிய கலாசாரம். இப்படி திருமணம் நடைபெறும்போது பெற்றோர் அவர்களுக்குப் பிடித்த மனிதர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அசுதோஷ் சர்மா

ஃபிரன்ட்லைன்


கருத்துகள்