குழந்தைகளே லட்சியம், விற்பனை நிச்சயம்!

 











வீட்டுக்குத் தேவையான சோப்பு. தரையைத் துடைக்கும் பொருட்கள், சலவைததூள், சலவை சோப்பு ஆகியவற்றை வீட்டின் மூத்தவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் சாப்பிடும் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் குழந்தைதான் முடிவு செய்யும்.

டிவிகளில் ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து, சாக்லெட் என்றால் கேண்டிமேன், கிண்டர் ஜாய், குவாக்கர் ஓட்ஸ், டோமினோ பீட்ஸா, சாண்ட்விட்ச் பிஸ்கெட்டுகள், ட்ராபிகானா ஜூஸ் என பலதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்கள் என நிறையப் பேரிடம் அவர்கள் பொருட்களைக் கேட்டுப் பெற முடியும்.

பொதுவாக குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே சில பிராண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டால் ஒருவரை எளிதாக மாற்ற முடியாது. சில குடும்பங்களில் அவர்களின் கலாசார இயல்புப்படி, பேஸ்ட் என்றால் கோல்கேட்தான், பிரஷ் என்றால் சென்சோடைன், குளியல் சோப்பு என்றால் சின்தால் என முடிவே செய்திருப்பார்கள். இந்த சூழலில் வளரும் ஒரு குழந்தை தனது தேர்வை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது.

உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவருவதற்கு ஜூனியர் என பெயரிட்டு பொருட்களை தயாரித்து விற்கிறார்கள். பால்யத்திலேயே குழந்தைகளை வாடிக்கையாளராக மாற்றிவிட்டால் பின்னாளில் அவர்கள் எளிதாக வேறு பிராண்டுகளுக்கு செல்ல மாட்டார்கள். மாறினாலும் அதே நிறுவனத்தின் வேறு பிராண்டுகளுக்கு மாறுவார்கள். கான்செப்ட் எளிதுதான். ஒருவரை நம்பினால் சந்தேகப்படமாட்டீர்கள்தானே? அதேதான் வணிகத்திற்கும் செட் ஆகிறது.

வணிகம் செய்வது எளிது. உணவுப்பொருட்களில் அடிக்கடி சாக்லெட், வெனிலா சுவை என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். எதற்கு? குழந்தைகளை ஈர்ப்பதற்குத்தான். ஜிஎஸ்கே நிறுவனத்தின் காலத்தில், ஹார்லிக்ஸில் தேன், சாக்லெட் என நிறைய ஃபிளேவர்கள் வெளிவந்தன. ஆனால் அவை பெரிதாக சோபிக்கவில்லை. இப்போதும் கிளாசிக் என்ற ஆர்லிக்ஸ்தான் நன்றாக பலராலும் விரும்பப்படுகிற சுவை கொண்டதாக உள்ளது. இதே ஆர்லிக்ஸ் குழந்தைகளுக்கு ஜூனியர் என்ற பெயரில் தனி ஆரோக்கிய பானத்தை தயாரித்து விற்கிறது. பெண்களுக்கு வுமன் என்ற பெயரில் தனி பானம் உள்ளது. பெரும்பாலும் சர்க்கரை, பால் சார்ந்த பொருட்கள்தான் இருக்கும். ஒரே கப் குடித்தால் போதும். ஊட்டச்சத்து கிடைக்கும், உயரமாக வளர்வார்கள் என்பதெல்லாம் உட்டாலக்கடி கதைகள்.  

நன்றாக யோசியுங்கள். இப்போதுவரை  நாம் பயன்படுத்துகிற பல பொருட்களை நமது குடும்பத்தினர் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வந்திருப்பார்கள். இதைத்தான் பொருட்களை தயாரிப்பவர்கள் புரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 ஐயாயிரம் ஆயிரம் ஆண்டு பழமையானது. பாரம்பரியமானது என்று ரீல் ஓட்டுவதெல்லாம் பொருட்களை விற்கத்தான். பெற்றோர் பயன்படுத்திய பொருட்கள், பிள்ளைகளுக்கு மறக்காது. பசுமையாக நினைவில் இருக்கும். அ வர்கள் அதை மனதில் வைத்து, பெற்றோரின் நினைவுகளுக்காக அதே பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதும் உண்டு.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஆப்பிள் கம்ப்யூட்டர் விலை அதிகமானது என அறிந்திருப்பீர்கள். இவர்கள், மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை அறிவித்து விளம்பரங்களை நாளிதழில் வெளியிடுவார்கள். பார்க்க ஏதோ மாணவர்களுக்கு உதவுவது போல தெரியும். ஆனால் அத்தனையும் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரம், வணிக உத்திதான்.

 ஆப்பிள் லேப்டாப் வாங்கினால், ஐபாட் டச் இலவசம் என ஒருமுறை விளம்பரம் செய்து நல்ல வருமானம் ஈட்டிய நிறுவனம்தான் ஆப்பிள். பொருள் இலவசம் என்றால் அதை பெறுகிற மனிதர்தான் விற்பனைப் பொருள் என்று கூறுவார்கள். அது உண்மை. விண்டோஸ் ஓஎஸ்ஸை பழகியவர்கள், லினக்ஸைப் பழக மாட்டார்கள். ஏன்? எளிமை, சொகுசுதான்.

ஆப்பிள், எலக்ட்ரானிக் பொருட்களை விற்கிற நிறுவனம். குழந்தைகளை குறிவைத்து பொருட்களை விற்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் மைக்ரோசாப்ட், லெனொவா, சாம்சங், ஹூவாய் என வேறு நிறுவனங்கள் பக்கம் போக மாட்டார்கள். போட்டியாளர்களை தொடக்கத்திலேயே தொலைத்து கட்டிவிடலாம். எல்லாம் வணிக மாயாஜாலங்கள்தான். சிறியதோ, பெரியதோ நீங்கள் ஒருமுறை பெற்றோர் வாங்கிக்கொடுத்து ஒரு பொருளை பயன்படுத்தினால் அது நாஸ்டாலஜியா வரிசையில் வந்துவிடும். அதை எப்போதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள். அதைத்தான் பெருநிறுவனங்கள் கச்சிதமாக புரிந்துகொண்டு உங்களை வலையில் சிக்க வைக்கிறார்கள். குறிப்பிட்ட பொருட்களையே தொடர்ந்து வாங்க வைக்கிறார்கள். மீளமுடியாத பயங்கரப் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.

image - PIXABAY

கருத்துகள்