மகனின் திருமணத்தின்போது அம்மாவின் அந்தரங்கம் வெளியே கசிந்தால்... மஜா மா - மாதுரி தீட்சித்

 









மஜா மா

இந்தி

மாதுரி தீட்சித், கஜராஜ் ராவ், சைமன் சிங்

 

அமெரிக்காவில் வேலை பார்க்கும் இளைஞருக்கு காதல் பூக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் காதலியின் பெற்றோர் வசதியானவர்கள். அதேசமயம் பையன் மட்டுமல்லாமல் அவன் மணம் செய்துகொள்ளும் குடும்பம் பாரம்பரியமாக கலாசாரம் கொண்டதாக அமைய வேண்டும் என பெண் வீட்டார் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மணமகனின் அம்மா லெஸ்பியன் என்ற உண்மை தெரிய வருகிறது.. இதனால் நடக்கும் சமூக, குடும்ப களேபரங்கள்தான் கதை.

எல்ஜிபிடியினரின் கதையை தைரியமாக எடுத்து இயக்கி அவர்களின் பிரச்னைகளை கூற முனைந்த இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பல இயக்குநர்களும் பிற்போக்கில் புராணம், இட ஒதுக்கீடு, வன்முறை என செல்லும்போது சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை சொல்ல முயன்றிருக்கிறார் மஜா மா இயக்குநர்.

இந்த படமே, மாதுரி தீட்சித்தின் நடிப்பை நம்பியுள்ளது. அவரும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அப்பா, மகன், மகள் என தான் பலமென நம்பிய குடும்ப உறுப்பினர்கள் பலரும் அவர்களின் சுயநலத்தை மட்டுமே மனதில் வைத்து நடந்துகொள்வதைப் பார்த்து விரக்தி கொள்கிறார். ஒருகட்டத்தில் குடும்பத்தினர் அதை நியாயமாக்கி பேசும்போதும், அதை மறுத்து மாதுரி கோபமாக பேசும் காட்சிகள் அருமை.

 குறிப்பாக எல்ஜிபிடியினருக்காக போராடும் மகள் தன் அம்மா யாரென  ஒப்புக்கொள்ள முடியாதபோது, மாதுரி தீட்சித் மகளிடம் கோபமாக பேசும் காட்சி. அடுத்து மகனின் திருமணத்திற்காக லை டிடெக்டர் சோதனையில் பங்கேற்று, இறுதியாக விரக்தியான தொனியில் அமெரிக்க நாட்டுக்காரரைப் பார்த்து பேசும் காட்சி. தனது தேர்வுகளை பிறரின் கையில் கொடுத்துவிட்டு அமைதியாக ஆசைகளை மறைத்து வைத்து வாழும் பெண்ணின் பாத்திரம். நிறைய இடங்களில் மாதுரியின் முகபாவமே போதுமானதாக இருக்கிறது.  வசனங்களே தேவையில்லை. மகன், மாதுரியை  பேய் ஓட்டுபவரிடம் கூட்டிச் செல்லும் காட்சியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இந்த காட்சி மாதுரியின் நடிப்பை வெளிப்படுத்துகிறது என்றாலும் கூட, அமெரிக்காவில் படித்த இளைஞர், எல்ஜிபிடியினர் பற்றி குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருப்பார்?  இத்தனைக்கும் அவரது அக்கா எல்ஜிபிடியினருக்காக போராடும் போராட்டக்காரர். அவரே கூட முதலில் அம்மாவின் அடையாளம் பற்றி பேச தயங்கினாலும் பின்னர், அவருக்கு ஆதரவாக இருக்க முயல்கிறார்.

உண்மையில் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். குடும்பம் நடத்தலாம். ஆனால் அதற்கு காதல் தேவையில்லை. உண்மையில் மாதுரி தான் உணர்ந்த காதலைப் பற்றி தனது கணவரிடம் கூறும் காட்சி , அற்புதமானது. பாரம்பரிய கலாசார மனங்களுக்கு மஜா மா ஏற்ற படம் அல்ல. மாதுரி தனது லெஸ்பியன் இணையரை ஏன் கைவிட்டார் என்பதற்கான காரணங்கள் படமாக பார்க்கும்போது  எளிதாக புரியும். இருவர் காதலிக்கிறார்கள். ஓரினச்சேர்க்கைதான். அதில் ஒருவர் மட்டும் காதலை திடீரென முறித்துக்கொண்டு சென்றால் அந்த வலி எப்படியிருக்கும் என்பதை கன்ஞ்சன் பாத்திரம் விவரிக்கிறது.

சமூகங்களும், உறவுகளும் எப்படி பல்வேறு பெயர்களில் அன்பை கொலை செய்கின்றன. உறவுகளின் பெயரில் சுரண்டுகின்றன என்பதை இயக்குநர் நன்றாக காட்சிப்படுத்தி கூறியிருக்கிறார். பொதுவாக அடிமையாக ஒடுங்கி வாழ்பவர்களுக்கு சுதந்திரமாக வாழ்பவர்களைக் கண்டால் கோபம்  வரும். தனக்கு கிடைக்காததை இன்னொருவன் அனுபவிக்கிறானே என்ற ஆற்றாமையும், வன்மமும்தான் அது. மாதுரியை சுற்றியிருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

 ஆண்களுக்கு மட்டும் தனி வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு சமூக வாழ்க்கை சார்ந்த அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் சீர் குலைக்கிறது.

எல்ஜிபிடியினரின் உணர்வுகளை மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ வீட்டு உறுப்பினர்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதே இறுதிப்பகுதி காட்சிகளாக உள்ளன. நடைமுறையில் இந்தளவுக்கு தாராள மனப்பான்மை சற்று கடினம். ஆனாலும் அதை சினிமாவில் காட்சியாக பார்க்கும்போது  நன்றாக இருக்கிறது. இதேவேளையில்தான் தமிழ்நாடு காவல்துறையில்  பணியாற்றிய மாற்றுப் பாலினத்தவர் ஒருவர், மேல்மட்ட அதிகாரிகளின் வசை, தொல்லை தாங்க முடியாமல் வேலையை விட்டு விலகுவதாக கூறிய செய்தியையும் நாம் வாசிக்கிறோம்.  உலகில் தவறுகளே செய்யாத, பலவீனங்களே இல்லாத மனிதர்கள் மட்டும்தான் வாழ வேண்டுமா? ஒருவர் தனது இயல்பில் சுதந்திரமாக பலவீனங்களோடு உயிர்வாழ்வது குற்றமா?

நிறைய விஷயங்களை மனதோடு உரையாட நினைக்கிற படம். வாய்ப்பு கிடைத்தால்  பாருங்கள்.  

கோமாளிமேடை டீம்

--------------------------------

Director: Anand Tiwari
Production company: Leo Media Collective
Written by: Sumit Batheja

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்