ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

 









ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள்.

இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.

 இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த பொருள் அந்தளவு சுத்தமாகவெல்லாம் இருக்காது. மக்கள் ஒரு விஷயத்தை நம்பிவிட்டால், அதுபற்றி எந்த சந்தேகமும் வராது. இந்த உளவியல் உத்தியை பயன்படுத்தியே பதப்படுத்த்பட்ட பொருட்கள், உறைந்த ஐசில் வைக்கப்பட்ட பொருட்கள், கேன் உணவுகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

இந்தியாவில் யோகாசனம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த சாமியார் ஒருவர் திடீரென மளிகைப் பொருட்களை விற்கத் தொடங்கினார். அனைத்து பொருட்களும்  விலை மலிவானவை.. வாங்கிப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் தரமும் குறைந்துவிட்டது என. இந்த சாமியாரின் கடையில் நான் தேன் ஒன்றை வாங்கினேன். கால்கிலோ தேன் ரூ.65 க்கு விற்றார்கள். வாங்கி சாப்பிட்டு பார்த்தும் தெரிந்துவிட்டது. டுபாக்கூர் தேன் என்று. சாமியாரின் நாடு தழுவிய பக்தகோடிகள், கலப்பட்ட பொருட்களை மகத்தான வெற்றி பொருட்களாக மாற்றினர். இன்று சாமியாரின் நிறுவனம், உள்நாட்டில் மிகப்பெரிய மக்கள் பயன்பாட்டு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

அன்றைக்கு சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கால் கிலோ தேனை ரூ.120க்கு விற்றார்கள். சாமியாரின் தேன், சீனாவில் இருந்து பெறப்பட்ட சர்க்கரை சிரப்தான். அதற்கும் அலுமினிய சீல் எல்லாம் போட்டு விற்றார்கள். சாமியார், தான் கலப்படம் செய்து தேனை விற்றாலும் கூட தனது பொருள் தூய்மையானது என்றவர், பிற நிறுவனங்களின் பொருட்களை கலப்படம் என்று நாளிதழில் அவதூறு செய்து விளம்பரம் கொடுத்தார். அந்தளவு துணிச்சலானவர்.

உண்மையில் ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ, மிக மலிவான தேன் என விளம்பரப்படுத்தும் தேன் ரகங்களை விட சர்வோதயா சங்கம், காதியில் வாங்கும் பொருட்கள் கொஞ்சமேனும் நம்பகத்தன்மையுடன் உள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசு நிறுவனம் என்பதால் பெரிதாக விளம்பரம் இருக்காது. மக்கள் பலருக்கும் இப்படி ஒரு பொருள் இருக்கிறதென்றே தெரியாமல் போய்விட்டது.

வணிகத்தைப் பொறுத்தவரையில் பத்து விஷயங்களை வாடிக்கையாளர்களுக்கு சொன்னால் அதில் ஆறு பொய், நான்கு உண்மை இருக்கவேண்டும். மொத்தத்தில் பொருள் விற்க வேண்டும். அவ்வளவுதான். சொல்கிற பொய்யை வண்ணமயமாக திரும்பத் திரும்ப சொல்லவேண்டும். ஜெர்மனியில் ஹிட்லரின் தளபதி கோயபல்ஸ் எப்படி பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி அதை நம்ப வைத்தாரோ அதே கான்செப்ட்தான்.

ஒருமுறை மயிலாப்பூரில் தங்கியிருந்தபோது, பருப்பு பொடி தேவைப்பட்டது. அதை வாங்க பஜார் தெருவில் இருந்த மஞ்சரி ஸ்டோர் என்ற கடைக்குச் சென்றேன். அங்குதான் பருப்பு பொடி கேட்டேன்.

ஈரோட்டின் சக்தி மசாலா பிராண்டை வாங்கும் எண்ணமில்லை. காசு அதிகமாக இருக்கும். ஆனால் தரமிருக்காது. அம்பிகா அப்பளம் டிப்போ சென்று பருப்பு பொடி வாங்கலாம். ஆனால் அதற்கு நெடுந்தூரம் நடக்கவேண்டும். அதற்காகவே இருபது நிமிடம் செலவாகிவிடும். பஜார் தெருவில் இருந்த கடைக்காரர், 777 என்ற பிராண்டின் பருப்பு பொடியைக் கொடுத்தார். நூறுகிராம்  முப்பதோ முப்பத்தைந்தோ விலை சொன்னார்.

 வாங்கி வந்து பாதுகாப்பு சீல் உடைத்து சில முறை பயன்படுத்தியிருப்பேன். ஒருவாரம் கூட இருக்காது. திடீரென ஒருநாள் பொடியைப் பார்த்தால் அதில் கடுகு சற்று பெரிதாக தெரிந்தது. கடுகு இந்த சைசில் இருக்குமா  என்று பார்த்தால் அத்தனையும் சிறு வண்டுகள். இத்தனைக்கும் பருப்புபொடி பயன்பாட்டு கெடுநாட்கள் சில மாதங்கள் மிச்சமிருக்கும்போதே கெட்டுப்போய்விட்டது. பாதுகாப்பு சீலுக்கு கீழ்தான் வண்டுகள் உருவாகின்றன. அப்போது பாதுகாப்பு, சுத்தம் என்பதெல்லாம் என்ன? எல்லாம் மாயா, சாயா….கொடுத்த காசு போயே போயிந்தி….

இன்னுமொரு சம்பவம். ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அஜந்தா பஸ் ஸ்டாப் இருக்கும். அதற்கு எதிர்ப்புறம் சென்று, மயிலாப்பூரை நோக்கி நடந்தால் பாலத்தின் கீழேயே காமதேனு கூட்டுறவு அங்காடி இருக்கும். பெண்கள்தான் கடையைப் பார்த்துக்கொள்வார்கள். இங்குதான் மார்வெல் அக்ரோ என்ற நிறுவனத்தின் பருப்பு சாதப்பொடி ஒன்றை வாங்கினேன். விலை, அம்பிகாவுக்கு சமானம்தான்.

கடலைப்பருப்பு, உளுந்து, துவரை என பருப்புப் பொடிக்கான பொருட்களை தேர்ந்தெடுப்பார்கள். மார்வெல் நிறுவனம், பொட்டுக்கடலையை அரைத்து அதில் பருப்பு பொடி என ஸ்டிக்கர் ஒட்டி துணிச்சலாக விற்கிறார்கள். பொட்டுக்கடலையை பொடியாக்கி சோற்றில் போட்டு சாப்பிட நேர்ந்தது. அதில் விட்ட அமுல் நெய்தான் எனக்கு நஷ்டம். மனம் பொறுக்காமல் மார்வெல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை எழுதினேன். அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், நிறுவனரோ சாத்வீதமாக இனிமேல் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம் என சத்தியம் செய்திருந்தார். எப்படி?

நம்பர் 1 தரத்தில் பொட்டுக்கடலையை வாங்கி அரைத்து பருப்புபொடி என பெயர் சொல்லி விற்பார்கள் போல…..கமிஷன் வாங்கிக்கொண்டு தரமற்ற பொருட்களை அரசு கூட்டுறவு சங்கத்தில் அனுமதிக்கிறார்கள். அப்புறம் எப்படி அரசு கூட்டுறவு சங்கத்தில் மக்கள் வந்து பொருட்களை வாங்குவார்கள்? கொடுக்கிற காசுக்கு தரமற்ற பொருள்தான் கிடைக்கும் என்றால் அது எவ்வளவு பெரிய சுரண்டல்.  

பழச்சாறு குடிக்கப் போகிறீர்கள். பழச்சாறு பிழியும் இடத்தில் அட்டைப்பெட்டியில் நிறைய பழங்களை கண்களைக் கவரும் விதமாக வைத்திருப்பார்கள். எதற்காக? அந்த பழங்களிலிருந்து உங்களுக்கு பழச்சாறு பிழிந்து தருகிறார்கள் என நீங்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அது உண்மையல்ல. இன்று பழச்சாறு என்றாலே கொக்ககோலாவின் மாஸா, மினிட் மெய்ட், பெப்சியின் ட்ராபிகோனா ஆகிய பிராண்டுகள் நினைவுக்கு வரும். இவை பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள். எப்போதும் ஃபிரிட்ஜூக்குள் தான் இருக்கவேண்டும்.

தங்களது பிராண்ட் பொருட்களுக்கென ஃபிரிட்ஜ் வாங்கித்தரவும் பெருநிறுவனங்கள் தயங்குவதில்லை. அவர்களுடைய ஃப்ரிட்ஜில் அவர்களுடைய  பிராண்டுகள் மட்டும்தான் வைக்க வேண்டும். இப்படியெல்லாம் கெடுபிடியாக வணிகம் செய்து வருகிறார்கள்.   குளிர்பானம் புதிது என்பதை எப்படி அறிவது?

ஐஸ்கட்டிகளோடு குளிர்பானம் இருப்பதை விளம்பரத்தில் காட்டுவார்கள். அதுதான் நம்மை நம்ப வைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்பானங்கள் வேர்த்து வடிவது போல இருக்கும். குளிர்ந்த நீர்த்துளிகள் பாட்டிலில் படிந்திருக்கும். இதெல்லாம் குளிர்பானம் புதியது என்று சொல்வதற்கான செட் அப்தான். இல்லையெனில் காஃபீன் கலந்த உடலுக்கு கெடுதலான கார்பன்டை ஆக்சைடு கரைக்கப்பட்ட சர்க்கரை கரைசலை ஒருவர் குடிப்பாரா என்ன?

துரித உணவுகளை விற்கும் அனைத்து இடங்களிலும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமானவை என்று காட்ட சில மேஜிக்குகளை செய்வார்கள். காய்கறிகளை பிறர் பார்க்கும்படி வைப்பது அதில் ஒன்று. இறைச்சி, மீன் விற்கும் கடைகளில் சில நாட்கள் ஆன பதப்படுத்திய மீனைத்தான் வெட்டிக் கொடுப்பார்கள். ஆனால் உயிருடன் உள்ள, புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களை ஐஸில் வைத்து மக்களின் பார்வைக்கு வைப்பது முக்கியம். அப்போதுதான் மக்கள் அதை புதியது என நம்புவார்கள். உண்மையில் ஐஸ்கட்டிகளை தயாரித்து அதை எப்படி கடைகளுக்கு கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்த்தாலே பாதிப்பேர்  உவ்வே என வாந்தி எடுத்துவிடுவார்கள். அந்த ஐஸைத்தான் மக்கள் தூய்மையானது என நம்புகிறார்கள். விளம்பரங்களைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட மோசமான பொருளாக இருந்தாலும் அதை நல்ல பொருள், நீங்கள் வாங்கியே ஆகவேண்டும் என்று சொல்லி விற்கவேண்டும். அந்த வேலையை விளம்பரப்பட இயக்குர்கள் செய்கிறார்கள். காசு வாங்கிக்கொள்கிறார்கள். மக்கள் தங்கள் பர்சை திறந்து பணம் கொடுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்கள்தான் ஏமாற்றப்படுவார்கள்.   

 படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்