ஏழைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - மல்லிகா சாராபாய், கேரள கலாமண்டல வேந்தர்

 





தனது தாய் இறப்பின்போது.. மல்லிகா சாராபாய்

மல்லிகா சாராபாய்

பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய்



மல்லிகா சாராபாய், கேரளா கலாமண்டலத்தின் தலைவர்

குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான மல்லிகா, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தர்ப்பணா அகாடமியை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியை மல்லிகாவின் பெற்றோரான விண்வெளி அறிவியலாளருமான விக்ரம் சாராபாயும், கேரளத்தின் அனக்கார வடக்கத் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மிர்ணாளினி ஆகியோர் இணைந்து தொடங்கினர்.

கேரளத்தின் இடதுசாரி அரசு, கேரள கலாமண்டலத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நீக்கிவிட்டு, மல்லிகா சாராபாயை நியமித்துள்ளது. மல்லிகா சாராபாய் பரதநாட்டிய கலைஞர், சமூகசேவகர், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டியது.

கலாமண்டலத்தின் வேந்தராக ஆனது எப்படிஇருக்கிறது?

நாளிதழ்களில் படித்துத்தான் கலாமண்டலத்தில் வேந்தர், துணைவேந்தர் சார்ந்த விஷயங்களை அறிந்துகொண்டிருந்தேன். ஒருமுறை அகாடமியில் நாட்டிய நாடகத்திற்கான ஒத்திகை செய்துகொண்டிருந்தோம். அப்போது  கிடைத்த ஓய்வில் போனை எடுத்து பார்த்தபோது நிறைய மிஸ்டுகால் வந்திருந்தது.

எண்ணுக்கு அழைத்தபோது மூத்த காம்ரேட் பேசினார். ‘’கேரளத்தில் கலாமண்டலத்தின் வேந்தராக பதவியேற்க சம்மதமா?’’ என்று கேட்டார். நான் ஐந்து நிமிடங்கள் யோசித்துவிட்டு அது எனக்கு பெருமையான விஷயம் என்று கூறிவிட்டேன்.

 தர்ப்பணா அகாடமியை நிர்வாகம் செய்து வரும் அனுபவம், கலைஞராக எனது வேலை ஆகியவற்றை கலாமண்டலம் சிறப்பாக வளர பயன்படுத்துவேன். கலை உலகில் நான் 43 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். சிறுவயதில் இருந்தே கலாமண்டலம் என்ற பெயர், எனக்கு நம்பிக்கை அளித்து வந்த ஒன்று. ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நிறுவனத்தின் பெயர் சிறப்பாக பேசப்படவில்லை. எனவே, அனுபவம், அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி கலாமண்டலத்தை வளர்ச்சி பெறச்செய்வேன்.

கலாமண்டலத்தின் கலை மற்றும் படிப்பு சார்ந்த தரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் கடந்தமாதம் கலாமண்டலம் சென்று நான்கு நாட்களை செலவிட்டேன். அங்குள்ள ஊழியர்களிடம் பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள் ஆகியவற்றைக் கேட்டேன். அதற்கு பல்வேறு தீர்வுகளைப் பற்றி ஆலோசித்தேன். துணை வேந்தர், எம் வி நாராயணன், பதிவாளர் ராஜேஷ்குமார் ஆகியோரின் குழு சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.

கலைசார்ந்த விஷயத்தில் தரம் நன்றாகவே இருக்கிறது. அதேசமயம் காலம் சார்ந்து பல்வேறு மாற்றங்களை செய்யவேண்டும். இப்போது எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கலைகளை சற்று மாறுபாடாக மாற்றி புதிதாக்கி கொடுப்பதோடு, பல்வேறு பிரிவுகளுக்கும் அதை விரிவுபடுத்தவேண்டும்.

தர்ப்பணா அகாடமியில் நாங்கள் அரசின் கல்வி, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அமைச்சகத்தோடு இணைந்து பணியாற்றியுள்ளோம். சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துகளை கருப்பொருளாக எங்களது கலையில் புகுத்தி அரங்கேற்றியுள்ளோம். அதுபோல கலாமண்டலத்தில் எந்த செயல்பாடுகளும் இல்லை. தற்போது,, அங்கு  நிதி சார்ந்த பிரச்னை உள்ளது. அதை சீர் செய்யவேண்டும். 

சிறுவயதில் கலாமண்டலத்திற்கு  வந்து சென்ற நினைவுகளைக் கூற முடியுமா?

1978ஆம் ஆண்டு அம்மாவுடன் கலா மண்டலம் வந்து ஆறு வாரங்கள் தங்கியிருந்தோம்.  அப்போது கதக்களி கலைஞர் கலாமண்டலம் கோபி, இளம் கலைஞராக உருவாகிக் கொண்டு இருந்தார். சீனாவுடன் அரசியல் உறவுகள் சீரானவுடன்,  அந்த நாட்டிற்கு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அம்மாவையும், வெளியுறவு துறை அமைச்சர் வாஜ்பாயையும் அனுப்பினார். இருபது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுடன், இந்தியா அரசியல் உறவைத் தொடங்கிய காலமது. நானும் அம்மாவுடன் சீனாவுக்கு சென்று மேடையில் பங்கேற்றேன்.  அது மிகவும் சிறப்பான தருணம் என்று கூறுவேன்.

 கலாமண்டலத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு எப்படி பார்க்கிறீர்கள்?

கலாமண்டலம் என்ற பிராண்டு பற்றிய நம்பிக்கை தெளிவாக இருக்கிறது. ஆனால் இப்படித்தான் இருக்கும், இருக்கிறது என எந்த பார்வையும் நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. நிர்வாகம் மற்றும் கலை சார்ந்த பின்னணியில் கலாமண்டலத்திற்கு வந்து அதன் அடிப்படை நோக்கம் மாறாமல் புத்தாக்கம் கொண்டதாக மாற்றுவது , ஊக்கமளிப்பதாக உள்ளது.

கலாமண்டலத்தை பாலின பேதமற்ற வளாகமாக மாற்றி அமைக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். தீண்டாமையை அகற்றப் போவதாகவும் பேசியுள்ளீர்கள். அதை விரிவாக கூற முடியுமா?

கலாசார தொன்மையை தொழில்நுட்பம் விரிவாக்கும். அந்த கலாசாரம் காலப்போக்கில் எங்கும் தேங்கி நின்றுவிடக்கூடாது. நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ அதுதான் கலாசாரத்தின் பாதை. இந்தப் பாதையில் நான் முப்பது ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கதக்களி கலையைக் கற்கவேண்டும், பிறர் ஒப்பனைக்கலைஞர்களாக இருக்கவேண்டும் என்று கூறும் பழக்கங்களை கைவிடவேண்டும். அனைத்து பாலினத்தவர்களும், குழந்தைகளும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை பின்தொடர வேண்டும்.

மாணவர்களோடு ஒப்பிடும்போது தங்களை பாகுபாடாக நடத்துகிறார்கள் என்று மாணவிகள் கூறியபோது, அதுபற்றி பதிவாளர், துணை வேந்தரிடம் விசாரித்தேன். அப்படி நடத்துவதற்கு எந்த விதிகளும் இல்லை என்று கூறினார்கள்.

மாணவிகள் தங்களுக்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் செல்லலாம். அவர்கள், தங்கள் விடுதி அறையில் அடைந்து கிடக்கவேண்டும் என்பது விதி கிடையாது.  குருகுல கல்விமுறை முதலில் நடந்திருக்கலாம். ஆனால் இப்போது அந்த முறை செல்லுபடியாகாது. இன்று அனைத்து கிராமங்களில் வாழும் இளைஞர்களும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள்.

குருகுல முறையில் மாணவர்களை தண்டிக்க குருமார்கள், கழி ஒன்றை வைத்திருப்பார்கள். ஆனால் எனது அம்மா, தனது மாணவர்களிடையே அதை பயன்படுத்தவில்லை. அரை நூற்றாண்டிற்கு முன்னர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சரி என்று செயல்படுத்திய விஷயங்கள், விதிகள் இன்றைய காலத்திற்கு பொருத்தமாக இருக்காது.  இந்த விதிகளை கலை வடிவங்களில் இருந்து அகற்றவேண்டும்.இப்போதைக்கு அதுதான் பெரிய வேலை.

தொன்மைக் கலையை கேரள மக்கள் எப்படி பார்ப்பதாக நினைக்கிறீர்கள்?

குஜராத்தில் இருந்துவிட்டு கேரளத்திற்கு வரும்போது பாலைவனத்திலிருந்து விட்டு ஒருவர் மழைக்காட்டிற்குள் நுழைந்தது போல இருந்த து. பாரம்பரிய நடனத்திற்கும் கலைகளுக்குமான வரவேற்பு கேரளத்தில் அதிகம் உள்ளது. இங்கு எட்டு நாட்கள் கலை விழாவை நடத்துகிறார்கள். இப்படி நடத்தினால் தர்ப்பணாவுக்கு கூட அதிக பார்வையாளர்கள் கிடைக்கமாட்டார்கள்.  பாலக்காட்டில் நடைபெறும் கௌரி திருவிழாவிற்கு செல்லவிருக்கிறேன். இந்த விழா அல்லாமல் பிற கிராமத்து விழா ஒன்றுக்கு செல்லவேண்டும். இந்த விழா ஊர் மக்கள்  சொந்தப் பணத்தை சேகரித்து நடத்துகிற விழா. இதைப்போன்ற விழாவை மேற்கு, வடக்கு மாநிலங்களில் பார்க்கவே முடியாது.

அரசியல் ரீதியாக நெருக்கடியைச் சந்தித்திருக்கிறீர்களா?

2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் முஸ்லீம்கள் மீதான படுகொலை வழக்கு ஒன்றை ஏற்று நடத்தினேன். அதற்காக, பின்னாளில் என் மீது ஏராளமான போலி வழக்குகள் பதியப்பட்டன. அரசிடம் எனது பாஸ்போர்டை சரண்டர் செய்யவேண்டி வந்தது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காவல்நிலையத்திற்கு சென்று வர நிர்பந்திக்கப்பட்டேன். இப்படி செய்வதன் மூலம் நடனக் கலைஞரான எனது வருமானத்தை தடுக்க நினைத்தனர். தர்ப்பணாவை மூடுவதற்கு முயன்றனர்.

 நிறைய அரசியல் கட்சி அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் அழைப்புகள் வந்தன அவர்கள் கட்சி அலுவலகத்தில் வந்து நடனமாடுவதற்காக அழைத்தனர். அவை, மோசமான நோக்கம் கொண்ட அழைப்புகள்.  

இந்த சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நான் என் குழந்தைகள், அம்மா, தர்ப்பணா ஊழியர்கள் பற்றி அதிகம் கவலைப்பட்டேன். இந்த நிலை இன்று இன்னும் மோசமாகியுள்ளது. அரசாங்கம் உங்களை அழிக்க நினைத்தால் நீங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவீர்கள்.

ஆனால் என் மனதில் உண்மை என்று தோன்றியதை கலையின் வழியாக வெளிப்படுத்துகிறேன். நான் வேறுவழியில் வாழவில்லை.  ஏழைகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிராக அநீதி நடந்தால் அதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அதைப்பற்றிய எனது கருத்தை பேசுவேன். பாடுவேன். நடனம் ஆடுவேன். இந்தியா என்ற அடையாளமே தென்னிந்தியாவில் உள்ள சில அரசுகள் கேள்வி எழுப்புவதால்தான் காப்பாற்றப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலில் நான் நடனமாடுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களைக் கூறியதால், கலாசார அமைச்சர் ஜி கிசன் ரெட்டி என்னை நடனமாடும் நிகழ்ச்சியிலிருந்து விலக்கினார்.

 எனவே, தெலுங்கானா அரசு நிகழ்ச்சிக்காக  வெளியே இடம் அமைத்து நடனமாட  உதவியது. சனாதன தர்மத்தில் கேள்வி கேட்பதும் முக்கிய அங்கம். வேதங்கள், உபநிஷங்களிலும் கேள்வி கேட்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கேள்வி கேட்பது பற்றி இவ்வளவு பயம் எதற்கு? உலகிலுள்ள சில மதங்கள், அதன் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதை அனுமதிப்பதில்லை. நாம் அப்படி இருக்கவேண்டுமா என்ன?நமக்கு பன்மைத்துவம் வாய்ந்த கலாசாரம் இருக்கிறது. எனவே, அந்த வழியில் பயணிப்பதே சிறந்தது.

டெல்லியில் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைதானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமலாக்கத்துறை பிபிசி, தைனிக் பாஸ்கர், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், எனது நண்பரான சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் ஆகியோரின் அலுவலகங்களில் சோதனை செய்து, பல்வேறு நபர்களை கைது செய்துள்ளது. இப்படி நடைபெறும் செயல்கள் அரசியலமைப்புச்  சட்டதிற்கு விரோதமானவை.

பெரும்பான்மை வெற்றியை பெற்ற அரசு, எதற்கு பாதுகாப்பின்மையை உணர வேண்டும்? கொசுவை கொல்ல எதற்கு சுத்தியலைக் கையில் எடுக்கிறார்கள்.  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்கும் முன்னரே எனக்கு மனிஷ் சிசோடியா அறிமுகமாகியிருந்தார்.  அவர் டெல்லி பள்ளிக் கல்வித்துறையில்  செய்துள்ள மாற்றங்கள் அற்புதமானவை. பணத்திற்கு விலைபோகும் ஊடகங்கள், அப்பாவிகளை எளிதாக குற்றவாளியாக்கிவிடுகின்றன. நான் குஜராத்தில் இதுபோன நிறைய சம்பவங்களை கண்டிருப்பதால், இதைப்பற்றி கூறுகிறேன்.

 

அன்னா மேத்யூஸ்

ஃபிரன்ட்லைன்

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்