துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

 












மேஜிக் எம்பரர்

சீனா மங்கா காமிக்ஸ்

350 அத்தியாயங்கள்


தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது.

அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான்.

அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத லுவோ குடும்பத்தை தியாங்யூ , ஏழு சக்தி வாய்ந்த குடும்பங்கள் பார்த்து வியக்கும்படியும், பயப்படும்படியும் எப்படி ஜூவோ ஃபேன் உருவாக்குகிறான் என்பதே காமிக்ஸின் கதை.

காமிக்ஸின் நாயகன், தீய சக்தியைக் கொண்டவன். சாத்தனை வழிபடுபவன். இதனால் ஜூவோ ஃபேனை நீங்கள் வெறுக்க நினைக்கலாம். ஆனால் அவனுக்கு நேர்ந்த துரோகம், லுவோ குடும்பத்திற்காக செய்யும் செயல்கள், சண்டை, இழப்புகள் ஆகியவற்றை படிக்கும்போது  வில்லன் என்றாலும் அவனது பார்வையை, எண்ணத்தை மெல்ல ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவோம். அதேசமயம் சீன மங்கா காமிக்ஸில் பெண்களை சீண்டும், இழிவுபடுத்தும் நிறைய வசனங்கள் உள்ளன. அதை நாயகனே வேறு செய்கிறான். ஜூவோ ஃபேன் , தனது நோக்கங்களை பற்றி மட்டுமே கவலைப்படுபவன். நீதியைக் காப்பாற்றுவது அவன் நோக்கம் கிடையாது. 

கதையில் அதை அவன் செய்வதும் இல்லை. தந்திரமானவன். பிறர் யோசிப்பதை எளிதாக புரிந்துகொண்டு பதில் சொல்லுபவன். யாரையும் நம்பாத ஆள். கண்களைப் பார்த்து அடுத்து இதுதான் செய்வான் என கணிக்க முடியாதவன். அதேசமயம் உளவியல் ரீதியாக ஒருவரை பேசி சிதைக்கும் மனிதன். ஜூவோ ஃபேனின் அதிகாரமிக்க பிறரை இழிவுபடுத்தும் ஏராளமான உரையாடல்கள் கதையில் உள்ளன. உளவியல் ரீதியாக ஒருவரை பலவீனப்படுத்தி தன்னம்பிக்கை இழக்கச்செய்து அழிப்பது. பீஸ்ட் கிங் காட்டில் மட்டுதான் ஜூவோ ஃபேன் தடுமாறி சறுக்குகிறான். ஆனால் பிறகு அவன் எடுக்கும் முடிவில், திட்டம் போட்டு அவனை ஆட்டுவிக்க நினைத்த ரீஜன்ட் எஸ்டேட் மந்திரியே பீதியாகிறார்.  

பிறரை கேலி செய்பவர்களை, பலவீனமானவர்களை வதைப்பதை  ஜூவோ ஃபேன் பொறுத்துக்கொள்வதே இல்லை. அப்படி பார்க்க நேரும் இடத்தில் யாரையும் அடிக்க யோசிப்பதில்லை. அப்போதைக்குகிடைத்த பலத்தை வைத்து எதிரிகளை அடித்துக் கொல்கிறான். அதற்கு பெரிய காரணம் ஏதுமில்லை. ஹூவான்யூ டவர்  என்ற பெண்கள் ஆளும் மாளிகையில், விஷ வல்லுநர் சான் யாங், சூ சூ ஆகியோருக்கு நடக்கும் சண்டையில் மட்டும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறான். மற்ற  இடங்களில் எல்லாம் அடிதடிதான்.

‘’எனக்கு ஒருத்தரை கொல்லணும்னா கொல்லுவேன். அதற்கு காரணம் எல்லாம் தேவையில்லை. ’’

‘’நான் உன்னை பயன்படுத்தணும்னு நெனைச்சா அதை எப்படியும்  செய்வேன்.’’

‘’குப்பையை  எரிச்சாலும் ஒண்ணுதான். அதை தூக்கி எறிஞ்சாலும் ஒண்ணுதான். நீயும் எனக்கு அப்படித்தான். உன்னை நான் பொருட்படுத்த மாட்டேன்.’’

‘’நீ நரகத்தோட தலைவனைக் கூட ஏமாத்தலாம். ஆனா என்னை ஏமாத்த நினைக்காதே’’

ஜூவோ ஃபேன் பேசும் ஆங்கில வசனங்களை தமிழாக்கம் செய்தால் இப்படித்தான் வரும். எல்லாமே சிறப்பாக உள்ளன. அதை வாசிக்கும்போது உணர முடியும். 

தீமை பேரரசன் அவனது வாழ்க்கையை பெண் துணையில்லாமல் வாழ்ந்தவன்தான். பெண்கள், அற நெறிகள் ஆகியவை முன்னேற்றத்திற்கு தடையானவை என்பதுதான் அவனது கொள்கை. இதையெல்லாம் தாண்டி ஜூவோ ஃபேனை மூவர் ஈர்க்கிறார்கள்.

 மிஸ் லுவோ, லுவோ குடும்பத்தின் பெண். உரிமையாளர். இந்த பெண்ணின் கீழ்தான் ஜூவோ ஃபேன் வேலை செய்கிறான். இந்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதித்த கை குடும்பம், லுவோ குடும்பத்தின் வறுமையைப் பார்த்து அவர்களை கைவிடுகிறது. கூடுதலாக கை குடும்பத்தினர் மிஸ் லுவோவை அடித்து அவமானப்படுத்த, அங்குதான் ஜூவோ தனது சக்தியை பயன்படுத்தி, கை குடும்பத்தின் ஆண் வாரிசு, அவனது காதலி ஆகியோரைத் தாக்குகிறான்.  பிறகுதான் ஜூவோ ஃபேனின் ரத்தப்படலம் தொடங்குகிறது.

மிஸ் லுவோவுடையது, ஜூவோ ஃபேனின் மீதான  ஒருதலைக்காதல். அதேசமயம் நிங்கர் என்ற பெண்ணைத்தான் ஜூவோ ஃபேன் அவனே அறியாமல் காதலிக்கிறான். அவளை இழந்துவிட்ட நேரத்தில் அவன் ஆடும் தாண்டவம்தான் ரீஜென்ட்ஸ்டேட் குவாங்புவை கொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம். மிஸ் லுவோவோடு ஜூவோ ஃபேனுக்கு கடமை ரீதியான பந்தம் இருக்கும். அதை தாண்டி இதயப்பூர்வமாக ஆன்ம ரீதியாக இணைந்திருப்பார்கள். இதனால் மிஸ் லுவோவுக்கு ஆபத்து என்றால் அது ஜூவோ ஃபேனை பாதிக்கும். அதனால்தான் தொடக்க காட்சியில் லுவோ குடும்பத்திற்கு உதவுகிறான். ஆன்மரீதியாக என்பது, அவனது ஆன்ம பலம் லுவோவின் உடலுடன் இணைந்திருக்கும். இதனால் லுவோவுக்கு ஆபத்தோ, பிரச்னையோ வரும்போது அது லுவோ ஃபேனையும் பாதிக்கிறது.

இதற்கடுத்து ஹூவான்யூ டவர் உரிமையாளர் சூசூ, அவருக்கு அந்த ஊரில் பெரிய மாளிகை இருக்கிறது. அதை ஆள்வது முழுக்க பெண்கள்தான். அதில் மூத்தபெண்ணும் மாளிகை உரிமையாளரும் சூசூதான். இவளுக்கு எதிரியான சான் யாங் அவளைத் தாக்கி மெல்லக் கொல்லும் விஷம் வைத்துவிட உயிர் எப்போது பிரியும் என தடுமாறிக்கொண்டு இருக்கிறாள்.

அந்த நேரத்தில் அவளிடம் உள்ள போதி மரத்தின் திரவத்தைப் பயன்படுத்தி தண்டர் லார்க் முட்டையை பொறிக்க வைக்க ஜூவோ ஃபேன் நினைக்கிறான். அதை சூசூ பத்திரமாக சொத்தாக நினைத்து வைத்திருக்கிறாள். எனவே, அவளிடம் அப்பாவியான வைத்தியராக நாடகமாடுகிறான். அந்தப் பகுதி படிக்க சிறப்பாக உள்ளது. அதாவது இந்த இடத்தில் அவரது பெயர் சான்யூ.

முன்ஜென்மத்தில் பேரரசன் என்பதால், திறமை இல்லாமல் அலட்டும் மேல்தட்டு குடும்ப ஆட்களை பார்த்தாலே வசைபாடி, பரிகாசம் செய்வதுதான் ஜூவோ ஃபேனின் திறமை. பலரையும் பேசி தூண்டிவிட்டு பிறகு தாக்குகிறான். அவனது வலிமை சற்று தடுமாறுவது 300 ஆண்டுகளாக வாழும் கூ சான்டோங் என்ற சிறுவனிடம்தான்.  கூர்மையான மோப்பத் திறன் கொண்டவனை நேரடியாக, மறைமுகமாக கூட ஜூவோ ஃபேனால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் கத்தரிப்பூவண்ண  இடியிலிருந்து  கு சான்டோங்கை காப்பாற்றி காட் பாதர் ஆகிறான். அன்பால் சிறுவனை வெல்கிறான். அதே  இடத்தில் தண்டர்லார்க் பறவையின் முட்டையை குஞ்சு பொறிக்க வைக்கிறான். இந்த காட்சிகள் பிரமாதமாக வரையப்பட்டுள்ளளன.

அதிலும் ரீஜென்ட் ஸ்டேட் குவாங்புடன் சண்டையிடும் இறுதிக்காட்சி படிப்பவர்களை கண்ணீர் விட வைத்துவிடும். அதில்தான் ஜூவோ ஃபேனின் வலது கை  பிய்த்து எறியப்படும். கதையின் மிக துயரமான பகுதி அதுதான். அதைபற்றி ஜூவோ ஃபேன் இறுதியாக பேசுவது பிரமாதமாக உள்ளது. எதிர்ப்பவர்களை அடியோடு அடித்து கொல்வதே  ஜூவோ ஃபேனின் குணம். காமிக்ஸ் நெடுக அதைத்தான் பார்க்கிறோம். நிங்கர் இருக்கும்போது மட்டுமே சற்று சமநிலைக்கு வரும் ஜூவோ ஃபேனை, அவள் இறந்துவிட்டால்  என்ற போது யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆன்ம ரீதியான பந்தம், உணர்வுகளை புரிந்துகொள்ளும் வகையில் சூசூ, நிங்கர் என இருவர்தான் தேறுகிறார்கள். மிஸ் லுவோ இந்த வகையில் மிகவும் பின்தங்கிவிடுகிறார்.

காமிக்ஸில் ராட்சஷன், சாத்தான், டிராகன் என்றுதான் ஜூவோ ஃபேனை அழைக்கிறார்கள்.  காமிக்ஸ்  சீரியசானதுதான். ஆனால் அதில் காமெடி என வரும்போது, நான்கு தீயசக்தி குள்ளர்கள் வருகிறார்கள். இவர்களும் நீர், நெருப்பு தம்பதியினர் மட்டும்தான் காமிக்ஸின் பரபரப்பை இறுக்கத்தை சற்றேனும் தளர்த்துகிறார்கள்.

எதிர்மறை நாயகனின் கதை. முற்பிறப்பில் யாரைப் பற்றியும் கவலைப்படாதவன், புதிய பிறப்பில் நிறைய பொறுப்புகளை எடுத்துக்கொள்பவனாக, பிறருக்கு வழிகாட்டுபவனாக, எதிரிகளை நடுங்க வைப்பவனாக மாறுகிறான். ஆனால் அவன் இதயம் கல்லால் ஆகவில்லை. சாத்தான் என்றாலும் அவனது இதயம் நிங்கர் என்ற பரிசுத்தமான பெண்ணிடம் வலுவிழக்கிறது. அதுவே பின்னாளில் அவனது மிகப்பெரும் பலவீனமாகிறது. ஆனால் தன்னை நம்பியவர்களை ஜூவோ ஃபேன் கைவிடாமல் காப்பாற்றுகிறான். அதுதான் அவனது பெரும் பலம். நண்பர்களாக இருப்பது  வேறு விதம். ஆனால் எதிரிகளாகிவிட்டால் அவர்களுக்கு நரகத்தை காட்டும் கடவுளாகிறான். சில அத்தியாயங்கள் படித்தாலே கதைக்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். அந்தளவு வசீகரமான கதை, அற்புதமான ஓவியங்கள்.

வாய்ப்பு கிடைத்தால் படிக்க மறக்காதீர்கள்.

கோமாளிமேடை டீம்

நன்றி

Readm.org

-------------------------

கருத்துகள்