காதலியின் துரோகத்தை சந்தித்து அதை திருப்பி அடிக்கும் ஜூனியர் டான்ஸ் மாஸ்டர்! கோவிந்தா நாம் மேரா...

 



கோவிந்தா நாம் மேரா - விக்கி கௌசல், பூமி, கியாரா

கோவிந்தா நாம் மேரா -இந்தி 










கோவிந்தா நாம் மேரா

இந்தி

விக்கி கௌசல், கியாரா அத்வானி, பூமி பட்னாகர், ஷாயாஜி ஷிண்டே


கோவிந்தா, சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் நோக்கத்தில் ஜூனியர் டான்சராக வேலை செய்கிறார். அந்த குழுவில் அவருக்கு காதலி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுக்கு. இருவரது நோக்கமும் ஒன்றுதான். தனியாக டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து பணம் சம்பாதித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள், கோவிந்தாவின் மனைவி. அடுத்து அவன் தங்கியுள்ள வீடு.

சண்டை பயிற்சியாளரான அப்பாவுக்கும், ஜூனியர் டான்ஸ் மாஸ்டரான அம்மாவுக்கும் பிறந்த பிள்ளை கோவிந்தா. இரண்டாவது திருமணம். சட்டரீதியாக பதிவு செய்யப்படாத திருமணம். இதனால் முதல் மனைவி, அவரின் பிள்ளை இருவரும் சேர்ந்து  வழக்கு போட்டு, கோவிந்தாவின் வீட்டை வாங்க நினைக்கிறார்கள். அந்த வீடு, கோவிந்தாவின் அப்பா  மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது.

கல்யாணம் செய்த மனைவி ‘’இரண்டு கோடி பணம் கொடுத்தால், உன்னை விவாகரத்து செய்கிறேன். நான் உன்னை கல்யாணம் செய்ய டௌரி கொடுத்தேன் இல்லையா அதைக் கொடு’’ என்று கேட்கிறாள். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் தோற்கும் நிலையில் இருக்கிறது.

 காதலி சுக்கு,’ என்னை விட்டுவிடு என் வாழ்க்கை எனக்கு முக்கியம்’’ என கூறுகிறாள். இந்த நேரத்தில் பணக்கார போதைப்பொருள் மாஃபியா தலைவரின் மகன் மூலம் போதைப்பொருள் பாக்கெட்டுகள் கிடைக்கிறது. அதை விற்றால் பணம் கிடைக்கும். அதை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிறான் கோவிந்தா. அந்த சந்தோஷத்தில் கோவிந்தாவும், சுக்குவும் வீட்டுக்கு வந்து பார்த்தால், கோவிந்தாவின் மனைவி இறந்து கிடக்கிறார். யாரோ கொலை செய்துவிட்டார்கள்.

இது என்னடா சோதனை என கோவிந்தா சுதாரித்து மனைவியை வீட்டுத் தோட்டத்தில் எடுத்து புதைக்கிறான். வீட்டில் உடைந்த பொருட்களை காதலி சுக்கு சுத்தம் செய்கிறாள். கோவிந்தாவின் மனைவியை யார் கொலை செய்தது, எதற்காக என்பதை அறிய படத்தை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும்.

இந்திப் படத்திற்கான அவசிய அம்சங்களான கிளாமர் பாட்டு, ஓப்பனிங் சாங் எல்லாம் தேவையான அளவு இருந்தாலும் படத்திலுள்ள முக்கியமான திருப்பங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறவிலும் நம்பிக்கை இல்லாமல் போனால், அந்த உறவு எப்படி நசியும் என்பதைக் கூறியிருக்கிறார்கள். நம்பிக்கை வைத்தால்தானே அதன் நிழலில் துரோகத்தின் வேர் துளிர்க்கும்.  

கோவிந்தா பாத்திரத்தில் விக்கி கௌசல் பிரமாதமாக நடித்திருக்கிறார். உண்மையில் தன்னுடைய தொழிலில் நினைத்த வருமானம் இல்லாமல், மனைவி முன்னால் அவமானப்பட்டு நடனம் ஆடுவது, மனைவி அவனது முன்னால் இன்னொரு ஆணுடன் செல்லம் கொஞ்சுவதை வேதனையும் பொறாமையுமாக பார்ப்பது, காதலி செய்த துரோகத்தை, அதே துரோகத்தால் எதிர்ப்பது, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அடிவாங்கி சுருள்வது  என திரில்லர் படத்தில் கிடைத்த வாய்ப்பை நடிக்க பயன்படுத்தியிருக்கிறார். நமக்கே இந்த மனிதன் ஏன் இந்தளவு அவமானப்படவேண்டுமா  என நினைக்கத் தோன்றுகிறது. படத்தின் நாயகனும் அதைத்தான் நினைக்கிறார். தற்கொலை செய்யப்போகிறார். அங்குதான் மாயம் நடக்கிறது.

கோவிந்தா முதல் பகுதி முழுக்க அவமானங்களையே ச்ந்திக்கிறார். ஆனால் இரண்டாவது பகுதியில், தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வேதனைப்படுத்திய அத்தனை பேருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத அடியைக் கொடுக்கிறார். பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். படத்தைப் பார்க்கும் நமக்கு சற்றேனும் மனசு ஆறுதலாகிறது. பாடல்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லை.

படத்தின் கதை, திரைக்கதை என இரண்டுமே சிறப்பாக உள்ளது. அதுதான் படத்தை சாதாரணமாக பார்க்க தொடங்கியவர்களை அடடே சொல்ல வைக்கிறது.  சுக்கு பாத்திரத்தில் கியாரா அத்வானி நன்றாக நடித்திருக்கிறார். நேரில் காதல் பொங்க பேசியபடி காதலன் முதுகில் குத்தும் பாத்திரம். அதையும் அவர் தனது சுயநலனுக்காக செய்கிறார். பூமி பட்னாகர் பாத்திரத்திற்கான நடிப்பு வாய்ப்பு சற்று குறைவுதான். அதிலும் அவர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்.

எங்கிருந்து வேண்டுமானாலும் வாழ்க்கையைத் தொடங்கலாம். நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதும். நல்லது, கெட்டது எல்லாம் அவசியமில்லை.

கோமாளிமேடை டீம்

----------------------------------------- 

 

 

 

 

 

 

 


கருத்துகள்