பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்
மருத்துவப்
பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன.
இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து
பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில்
அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும்
தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும்
குறைவு.
இதுதொடர்பான
உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு
வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து
நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை
செய்ய வற்புறுத்துகிறார்கள். இதன்மூலம் காபி
அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மறை செய்திகள் பெருகும்.
தனது செயலில்
நேர்மையாக இருக்கும் நிறுவனம் எந்த குற்றச்சாட்டுக்கும்
பயப்பட வேண்டியதில்லை. ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். உலகம் முழுக்க புகழ்பெற்ற நூடுல்ஸ்
நிறுவனம், திடீரென விற்பனைச் சரிவைச் சந்தித்தது. காரணம், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அவதூறு பிரசாரம். அப்போது இந்தியாவில்
சாமியார் ஒருவரின் புதிய நூடுல்ஸ் பிராண்ட் விற்பனைக்கு வந்தது. அதன் விற்பனை அதிகரிக்க
பெரிய வாய்ப்புகள் இல்லை. காரணம், அது புகழ்பெற்ற நிறுவனமோ, புதிய விஷயங்களைக் கொண்ட
உணவுப்பொருளோ கூட இல்லை.
எனவே, புகழ்பெற்ற
அயல்நாட்டு நிறுவனத்தின் உணவுப்பொருளில் ஆபத்தான பொருட்கள் உள்ளது என ஆதாரமற்ற அவதூறு
மற்றும் புகார் பிரசாரத்தை வெளியிட்டனர். இதனால்,
அந்த நூடுல்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட பொருள் இழப்பை அடைந்தது. ஆனால் விரைவிலேயே தங்களது
பொருளில் எந்த ஆபத்தான பொருளும் இல்லை என அச்சு,காட்சி என அனைத்திலும் விளம்பரம் செய்து
நன்மதிப்பை மீட்டெடுத்தனர். இன்று சாமியாரின் நூடுல்ஸ் பிராண்டை நீங்கள் எங்குமே பார்க்க
முடியாது. காரணம், அந்த பொருள் தரம் இல்லாதது. மக்களின் நம்பிக்கையும் அந்த பிராண்டின்
மீது இல்லை. அயல்நாட்டு நூடுல்ஸ் பிராண்ட் இன்றும் நன்றாகவே விற்று வருகிறது. சிறந்த
புதிய பொருளை உருவாக்கி சந்தையில் இடத்தை பிடிப்பது எல்லாம் பழைய கதை. இன்று, எதிரிலுள்ள
போட்டியாளர்களை ஒழித்துக்கட்டி தான் மட்டுமே சந்தையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது
புதிய நடைமுறையாக மாறிவருகிறது.
சில விற்பனைப்
பொருட்களுக்கு உடந்தையாக இருக்கும் மனிதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மருத்துவப் பொருட்களை, சித்த, ஆயுர்வேத மருந்துபொருட்களை விற்கும் நிறுவனங்கள் பிரபல
மருத்துவர்களை தங்கள் ஆலோசகர்களாக நிறுவனத்தில் இருத்தி. அதை விளம்பரம் செய்து கொள்ளையாக
சம்பாதிக்கின்றனர். மருத்துவர்கள் ஆலோசகர்களாக இருப்பது என்பது சும்மா பெயருக்காகத்தான்.
உண்மையில் அவர்களை காசு கொடுத்து அப்படி ஆலோசகராக அமர்த்துவதே மக்களிடம் அவர்களுக்கு
உள்ள அபிமானத்தை பயன்படுத்தி பொருட்களை விற்கத்தான். ‘வல்லுநர்கள் சொல்கிறார்கள்’.
‘நிபுணரின் கருத்து’ என்றெல்லாம் கூறுவது இப்படிப்பட்ட ஆட்களை பின்னணியில் வைத்துத்தான்.
விளம்பரத்தில்
புகழ்பெற்ற மருத்துவர்களை காட்டும்போது,அவர்கள் மீதுள்ள மரியாதையில் சாதாரண மக்கள் எளிதாக ஏமாந்து விடுகிறார்கள். அவர்
பரிந்துரைக்கும் பொருள் தரமாக இருக்கும் என நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி நினைப்பது
நியாயம்தான். ஆனால் வியாபாரத்தில் இதுபோன்ற எண்ணங்களுக்கு இடம் கிடையாது.
இந்தியாவில்
ஓராண்டுக்கு முன்னர், ஆரோக்கியமான இயற்கை பானம் என நெல்லிச்சாற்றை ஏராளமான நிறுவனங்கள்
விற்கத் தொடங்கின. அப்போதுதான் நம்மாழ்வாரின் இயற்கை சார்ந்த கொள்கைகள், விஷயங்கள்
பரவத் தொடங்கின. இதை வைத்து ஏராளமான நிறுவனங்கள் குப்பைமேனி, கற்றாழை, நெல்லிக்காய்,
பல்வேறு வித மூலிகைகளை அரைத்து மூலிகைச்சாறு என விற்கத் தொடங்கினார். ஆர்கானிக் பழங்கள்,
காய்கறிகளை அதிக விலை கொடுத்து கௌரவமாக வாங்கி அதை விளம்பரப்படுத்துவார்களே அதுபோலத்தான்
இந்த ஜூஸ் விற்பனையும் கூட. விற்பனைக்கு மூலாதாரம் ஆரோக்கியம் பற்றிய பயம் மட்டுமே.
ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குருஜி தயாரிப்பு
மருந்து
கம்பெனிகள், மருத்துவர்களை காசு கொடுத்து, கமிஷன் கொடுத்து மடக்குவது மக்கள் அனைவரும்
அறிந்த சமாச்சாரம்தான். அதுபோபோல, பல்வேறு இடங்களில் மடம் நடத்தும் சாமியார்கள், தங்களது
உருவத்தை பொறித்து சோப்பு, ஷாம்பூ, அரிசி, பருப்பு என விற்று கல்லா கட்டுகிறார்கள்.
இன்னும் சில கார்ப்பரேட் சாமியார்கள் ஜிம், ஆன்லைன் கோர்ஸ் கூட நடத்துகிறார்கள். சாமியாருக்கு
நெருக்கமாக உள்ள பக்த கோடிகளை வளைத்து வாடிக்கையாளர்களாக மாற்றுவதே முதல் நோக்கம்.
இதன்பிறகு, இவர்களை வைத்து பிறர் என தோளின் மீதேறி முன்னேறி செல்கிறார்கள்.
இன்று ஒருவர் வாங்கும், பயன்படுத்தும் பொருட்களை
வைத்துத்தான் அவரது மதிப்பு கூடுகிறது, குறைகிறது. இதற்கு காரணம் நம் அனைவரின் மனதிலுள்ள
ஓப்பீடு. இதை பொருட்களை விற்பவர்கள் நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள். எனவே, வாய்ப்பு
கிடைக்கும்போது மனதிலுள்ள தாழ்வுணர்ச்சியை தூண்டிவிடுகிறார்கள். இதைப் புரிந்துகொள்பவர்கள்
தப்பித்துவிடுகிறார்கள். புரியாதவர்கள் வணிகர்களின் வலையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக