சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!
குழந்தைகளுக்கான
உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய
பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம்
மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான
உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என
இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து,
உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து
உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை.
குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம்.
ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும்
துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல.
பல்வேறு
தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால்
ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்ளி செல்ல
நேரமாகிவிட்டதா?. கவலை வேண்டாம். ஆரோக்கியமான உணவாக எங்கள் தயாரிப்பைத் தேர்ந்தெடுங்கள்
என உலர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. அவியல், துவையல், பால், தயிர், ரசம்,
குழம்பு என சாப்பிட்டால் பன்மைத்தன்மையான பொருட்கள் உடலில் சேரும். வெறும் சோளத்தை
அல்லது ஐந்து வெவ்வேறு தானியங்களை, அவல் போலாக்கி சர்க்கரையும் பாலும் சேர்த்து சாப்பிட்டால்
ஊட்டச்சத்து எப்படி கிடைக்கும்? எனர்ஜி என நிறுவனங்கள் கூறுவது உடலில் கூடும் கலோரியை,
உண்மையான ஊட்டச்சத்துக்களை அல்ல.
உண்மையில்,
காய்கறிகளை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவதே சத்துகள் கிடைப்பதற்கான வழி. வேக வைத்து,
பொறித்து, வறுத்து சாப்பிடுவதில் சத்துகளின் அளவு குறைந்து கொண்டே போகும். நீரில் கழுவி
பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது என்றாலும் நமது குடலில் செரிமானப் பிரச்னைகள்
ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி சாப்பிடுவதைத் தொடங்க பயிற்சியும் பொறுமையும் தேவை. இது பற்றி அறிய சித்த மருத்துவர் கு. சிவராமன்
எழுதிய நூல்களைப் படித்தாலே போதுமானது.
ஊட்டச்சத்து
பான நிறுவனங்கள் தங்களது பிராண்டுகள் வழியாக பல்வேறு பொய்களையும் புரட்டுகளையும் பரப்புவதை
வியாபார லட்சியமாக கொண்டுள்ளன. கோதுமையைக் கொண்ட செரில் வகை உணவு, ‘குழந்தைகளின் கவனத்தை
ஒருங்கே குவிக்கும்’,’ உடல்மன ஆற்றலை அதிகரிக்கும்’ என்பது, ‘குழந்தைகள் வேகமாக வளருவார்கள்’
என்பது என நிறைய பொய்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியாவைப்
பொறுத்தவரை அரசின் கண்காணிப்பு அமைப்புகள், காசை வாங்கிக்கொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதை
நோய்களில் சிக்குவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் எஃப்டிஏ
அமைப்புக்கு பல்வேறு புகார்கள் இப்படி வர அவர்கள் கெலாக்ஸ் போன்ற நிறுவனங்களை எச்சரித்து
பல்வேறு விதிமுறைகளை வெளியிட்ட வரலாறு உள்ளது.
உண்மையில்
ஒருவருக்கு கிடைக்கும் நிறம், உடல் அமைப்பு என்பதெல்லாம் மரபணு சார்ந்தது. ஆனால் நிறத்தை
வெளுப்பாக்கும் க்ரீம்கள் இயற்கைக்கு விரோதமாக பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றன.
‘கறுப்பாக இருந்தால் வெல்ல முடியாது’. ‘தோற்றுப்போக வேண்டியதுதான்’. ‘மனதில் நம்பிக்கை
வராது’. ‘இன்டர்வியூ போனாலும் கறுப்பாக இருப்பவர்களுக்கு வேலை கிடைக்காது’ பல்வேறு
கதைகளை முகத்தில் பூசும் க்ரீம்களின் விளம்பரத்தில் பார்க்கலாம்.
அதிகம்
வெளியுலகம் காணாத இளம்பெண்கள், விளம்பரங்களைப் பார்த்து மனதளவில் உடைந்து போகிறார்கள்.
நிறக்கேலி, உருவக்கேலி இதெல்லாம் விளம்பரங்களில் பொருட்களை விற்கப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் தவறான செய்திகள் மெல்ல சமூகத்தில் உள்ள பலரது மனதிலும் அழுத்தமாக பதிந்துவிடுகிறது.
இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படும் க்ரீம்கள் போலியானவை.
தாவரம் அல்லது பழங்களின் உயிர் வாழும் செல்கள் முக அழகு க்ரீம்களில் இருப்பதாக கூறுவது
சாத்தியமில்லாத பொய். பழ மரத்தில் பழங்கள் பழுத்து இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள்
பறித்தவுடனே, அது கெட்டுப்போக தொடங்குகிறது. அப்படியே தாவரத்தின் செல்களை பயன்படுத்தினாலும்
மனிதர்களின் தோலில் அதன் பயன்கள் ஏதுமில்லை. ஆனால் விளம்பரங்களில் வயதாவதை தடுக்கும்,
சுருக்கத்தைப் போக்கும் என அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களை அழகான பெண் மருத்துவர்
வந்து சொல்லிக்கொண்டிருப்பார். ஒருவரை தாழ்வுணர்ச்சிக்கு ஆளாக்கி, பிறகு அவரை விருப்பம்
போல ஆட்டுவிப்பதுதான் க்ரீம்களை விற்பவர்கள் செய்கிறார்கள்.
உண்மையில் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டு தேவையான
அளவில் உடற்பயிற்சி செய்தாலே ஒருவரின் உடல்
ஆரோக்கியமாக இருக்கும். வயது காரணமாக ஏற்படும் தள்ளாமை என்பது இயற்கையானது. அதை தடுக்கவோ,
தவிர்க்கவோ முடியாது. ஒருவரின் பேச்சை விட செயல்பாடு முக்கியமானது. அதுவே அவருக்கும்,
பிறருக்கும் உதவிகரமாக இருக்கமுடியும்.
உலக அழகிப்போட்டி,
பிரபஞ்ச அழகிப்போட்டி என நடத்துவதே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை குறிப்பிட்ட பிரதேசத்தில்
கொண்டுபோய் சேர்க்கத்தான். அதற்கெனவே பல்வேறு திட்டங்களை வகுத்து பெருநிறுவனங்கள் செயல்படுகிறார்கள்.
என்ன இடத்திற்கு , எதற்காக செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதற்கேற்ப உடை, அலங்காரத்தை
அமைத்துக்கொள்ளலாம். முடிந்தவரை எளிமையாக இருப்பது நல்லது. செயற்கையான க்ரீம்களின்
பயன்பாட்டை குறைத்துக்கொள்வது உடலுக்கும் மனதுக்கும், பர்சுக்கும் நல்லது.
image - live mint, pinterest
கருத்துகள்
கருத்துரையிடுக